0,00 INR

No products in the cart.

அம்மாக்களின் எதிர்பார்ப்புகளைக் காப்பாற்ற வேண்டாமா?

 

ஒரு கலைஞனின் வாழ்க்கையில்  – 20

மம்முட்டி

தமிழில் கே.வி.ஷைலஜா

கம்ப்யூட்டர்

 

டப்பிடிப்பிற்கு நடுவில் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருக்கும்போது இயக்குநர் சத்யன்அந்திக்காடின் இரட்டைக் குழந்தைகளுக்கும் கம்ப்யூட்டரில் ஆர்வம் இருக்கிறது என்பதைத் தெரிந்துக் கொண்டேன். சத்யன் இதுவரை அவர்களுக்கு கம்ப்யூட்டர் வாங்கித் தந்திருக்கவில்லை. “அப்பாவிடம் கம்ப்யூட்டர் வாங்கித் தரச் சொல்கிறேன்” என்று நான் குழந்தைகளுக்கு வாக்கு கொடுத்திருந்தேன். அதனால் சத்யனிடம் பேசினேன்.

“பிள்ளைகளுக்கு கம்ப்யூட்டர் வாங்கிக் கொடுத்தால் என்னடா? அவர்கள் ஒரு புதிய உலகத்திற்கு வரட்டுமே.”

“அவங்களோட படிப்பைப் பார்த்துக் கொள்வது என் மனைவிதான். நிம்மி கொஞ்ச நாளாகட்டுமேன்னு சொல்றா.”

“அதெதுக்கு? குழந்தைகளாக இருக்கும் போதே இதையெல்லாம் தெரிஞ்சுக்கணும். பழைய காலமில்லை இது.

“அதான் பிரச்னையே”.

சத்யன் பிரச்னையை விரிவாகச் சொன்னான். குழந்தைகள் கம்ப்யூட்டரும், இன்டர்நெட் இணைப்பும் கேட்டநேரத்தில், கிராமத்துப் பெண்ணாக இருந்தாலும் அவருடைய மனைவி கம்ப்யூட்டர் உலகத்தில் உள்ள
சதி குழிகளைக் கேள்விப்பட நேர்ந்திருக்கிறது. அவை என்னவென்று தெரிந்துக்கொண்ட பிறகு கம்ப்யூட்டர் வாங்கிக் கொள்ளலாம் என்பதுதான் மனைவியின் வாதம்.

நிம்மி கம்ப்யூட்டர் கற்றுக் கொள்வதற்கு முன்பே பிள்ளைகள் அதை வாங்கிவிட்டிருந்தனர். அதில் திறமைசாலிகளாவதற்கு முயற்சி செய்து கொண்டிருந்தனர். தனக்குப் பரிச்சயமற்ற கணினியும் அதன்மூலம் தன் அறைக்குள் வந்துவிடும் அவசிய, அனாவசியங்களைப் பற்றிய பயமும் நிம்மிக்கு ஏற்பட்டதால் அவள் பயிற்சி வகுப்புகளுக்குப் போனாள். சான்றிதழும் பெற்றாள். வீட்டு வேலை, வயல்வேலை என்று மூழ்கியிருந்த அவளுக்குக் கணினி தேவையில்லை என்று வேண்டுமானால் தோன்றலாம். ஆனால் பிள்ளைகளைக் கண்காணிப்பது என்பது அவ்வளவு சாதாரண காரியமல்ல.

பாலியல் மற்றும் வன்முறை உலகத்தின் சொர்க்க வாசலுங்கூடத்தான் இன்டர்நெட் என்பது எல்லோர் மனதிலும் எழும் விஷயம். இந்த ஆபத்தை உணர்ந்து கொள்ளும் ஒவ்வொரு பெற்றோரும் “தம் பிள்ளைகள் என்ன செய்கிறார்கள்” என்று தெரிந்து கொள்ளும் ஆர்வத்துடன் இருப்பார்கள். குழந்தைகள் எந்த வாசல் வழியாகப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துக் கொள்வதில் ஒவ்வொரு அம்மாவும் இயற்கையாகவே கவனம் செலுத்துவார்கள். நகரத்தில் பல வருடங்களுக்கு முன்பே இதையெல்லாம் பார்த்துத் தெரிந்துக்கொண்ட அம்மாக்களைவிட விஷயம் தெரிந்தவர்களாக கிராமத்துப் பெண்கள் இருக்கிறார்கள்.

வீட்டுப்பெண்களின் மனநிலையை அறிந்தபோது அவர்களுடைய பயம் தவறில்லை என்று எனக்குத் தோன்றியது. பல வருடங்களாக கம்ப்யூட்டரை உடன்பிறப்பு போல அன்பு செலுத்துபவர்களுக்கிடையில்கூட மனதில் எங்கோ ஒரு சந்தேகம் முளைவிட ஆரம்பித்துவிட்டது. வேதப்புத்தகங்களில் ‘யாகோக்’ என்றும், ‘மாகோக்’ என்றும் ‘தஜ்ஜால்’ என்றும் ‘கலி’ என்றும் சொல்லப்படும் அவதாரமா இந்த கம்ப்யூட்டர்? சர்வ நாசத்தின் துளிர் விதையாய் வரும் இதுதான் உலக அழிவிற்குமுன் வரும் ப்ரளயத்தின் முன்னறிவிப்போ?

கம்ப்யூட்டர் இப்போது ஞாபகங்களின் பாதுகாவலன் மட்டுமே. மனிதன் பகிர்ந்தளிக்கின்ற நினைவலைகளை மட்டுமே பாதுகாக்கிறது. கேட்கும்போது அவற்றைத் தேவைப்படும் வடிவத்தில் திருப்பிக் கொடுக்கும் ஒரு பாதுகாவலன் மட்டுமே. சொல்லிக் கொடுக்காத எதையும் கம்ப்யூட்டர் தன் நினைவில் பத்திரப்படுத்திக் கொள்ளாது. நினைவடுக்குகளில் பாரமேறும்போதெல்லாம் கம்ப்யூட்டரின் மகத்துவம் கூடுகிறது. எல்லாவற்றையும் எந்திரமயமாக்குவதன் உச்சம்தான் கம்ப்யூட்டர். அரைக்க, துணிதுவைக்க, வீடுதுடைக்க என்று தொடங்கிய எல்லா வீட்டுவேலைகளையும் இயந்திரங்களிடம் ஒப்படைக்கிறோம். குளியலறைக்கு நடந்து செல்ல சோம்பேறித்தனப்பட்டு ‘ஆட்டோவில் போய்விடலாமா’ என்று யோசிக்கும்காலம்.

மனிதனை வேட்டையாடவும், காய்கனிகள் உண்டு வாழவும்தான் இயற்கை உருவாக்கி இருக்கிறது. உணவிற்கான தேடல் என்பது மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. வேட்டையாடத்  தேவையான சக்திதான் கொலஸ்ட்ரால். அம்பெய்து தன் முன்னால் இருக்கும் இரையைப் பிடிப்பதற்காக காட்டிலும், மேட்டிலும் ஓடி வியர்த்து உழைத்து திரும்பி வரும்போது  உடலில்  கொலஸ்ட்ரால் எரிந்து போயிருக்கும். மீண்டும் நன்றாகச் சாப்பிட்டு அந்த உணவின் சக்தியைக் கொண்டு புதிய வேட்டையை ஆரம்பிக்க வேண்டும். இன்றைக்குக் கொலஸ்ட்ராலைக் குறைக்க பணம் கொடுத்து உடற்பயிற்சிக் கூடங்களுக்குச் செல்கிறோம். வாழ்வதற்காக பகல் முழுவதும் உழைக்கிறோம். பிறகு ஆயுள் நீட்டிப்பிற்காக உடற்பயிற்சிக் கூடங்களில் உழைக்கிறோம். இயந்திரம் மனிதனைப் புதிய புதிய பிரச்னைகளுக்கு அழைத்துச் செல்கிறது.

“சுகஜீவனப் பாதையின் மைல்கல்தான் கம்ப்யூட்டர். அது வந்தவுடன் எல்லாம் தலைகீழாகிவிட்டது. அதில்லாமல் வாழமுடியாது” என்ற நிலைதான் வேதனை. உலக மக்களுக்குத் தேவையான மருத்துவமனைகள், ரயில் நிலையங்கள், விமானங்கள், கட்டடங்கள், போக்குவரத்து, வங்கிகள்  என எல்லாவற்றையும்  கணினி  தனக்குள் உள்ளடக்கிக் கொண்டிருக்கிறது. வங்கிகளின் கம்ப்யூட்டர் இரண்டு நாட்கள் ஸ்தம்பித்தால் உலக வியாபாரம் முழுவதும் நின்றுவிடும். எங்கேயாவது ஒரு ‘கீ’ தப்பாய் அழுத்தப்பட்டுவிட்டால் எங்கிருந்தெல்லாமோ ஏவுகணைகள் வானத்திற்குப் பறக்கும். கம்ப்யூட்டர் தரும் நன்மைகளைப் போலவே அதனுடைய பட்டன்களில் சில பயங்கரங்களும் பொதிந்திருக்கிறது. அணுப்பிளப்பின் மூலம் சக்தியின் பெரியதொருப் பிரவாகத்தைக் கண்டெடுக்க நம்மால் முடிந்தது. ஆனால் அணு ஆயுதங்களுக்கு அதுவே வழிவகுத்தது என்பதை கனவில்கூட யாரும் நினைக்கவில்லை. கம்ப்யூட்டரின் நிலையும் இது மாதிரி அழிவிற்குள்ளாகுமோ?

கம்ப்யூட்டர் இப்போது நினைவுகளின் சக்கரவர்த்தி. ஆனால் ஏதாவதொரு அதிபுத்திசாலி  கம்ப்யூட்டருக்கு செயற்கை அறிவைக் கொடுக்க முடியாதென்று உறுதியாய்ச் சொல்ல முடியுமா?  இப்போதே கம்ப்யூட்டரின் நினைவுகளைத் தலைகீழாய் மாற்றி நாம் விரும்பாத பல செயல்கள் செய்யும் வைரஸ்கள் இருக்கின்றன. செயற்கை அறிவு ஏற்படும் நாளில் அவை என்ன செய்ய வேண்டும் என்பதை அதுவே தீர்மானித்துக்கொள்ளும். மனிதநேயம் இல்லாததனால் கம்ப்யூட்டர் எதையும் செய்யும் வாய்ப்புள்ளது.  பறக்கும் விமானத்தை நகரத்தின் மத்தியில் இறங்கக் கட்டளை இடும். ஏவுகணைகளுடன் பறக்க உத்தரவிடும். தயார்படுத்தி வைத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆட்டம்பாம்களுக்கு வெடிக்கச் செய்யும் சங்கேதமொழியைக் கற்றுக் கொடுக்கும்.

மகாவீரனான அலெக்ஸ்சாண்டர் சக்கரவர்த்தி அவருடைய சிந்தனையில் இருந்த உலகம் முழுவதையும் தன் ஆளுமையின் கீழ் அடக்க பத்து வருடங்கள் எடுத்துக் கொண்டார். ஆனால் சுயபுத்தியை அடையும் கம்ப்யூட்டர் நிமிடங்களின் இடைவெளியில் இன்டர்நெட்டின் வழியாக  உலகத்தை நிச்சலனமாக்கி கைப்பிடியில் அடக்கி வைத்துக் கொள்ளும்.

எல்லா கம்ப்யூட்டர்களையும் சின்னாபின்னமாக்கும் மோசமான வைரஸ் இன்டர்நெட்டின் வழியாக மின்னல்போல உட்புகுந்தாலும் போதுமே. இது ஒரு துர்கனவாகக்கூட இருக்கலாம். உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் எந்த செய்தியும் விரல்நுனியில் கிடைக்குமென்பது கனவல்ல என்கின்றபோது இதை ஒரு துர்கனவென்று எப்படி நம்ப முடியும்?

இயந்திரங்கள் மனிதனுக்கு அவசியந்தான். ஆனால் நித்ய வாழ்க்கைக்குக்கூட மனிதன் இயந்திரங்களை நம்பத் தொடங்கிவிட்டான். “குழந்தைகள் கம்ப்யூட்டரின் வழியாக செக்ஸையும், வன்முறையையும் தாங்கி நிற்கும் வேறு உலகத்தில் சஞ்சரிக்க வழிதேடுகிறார்களே” என்று பயப்படும் அம்மாக்களின் வேதனையை சுலபமாக புறந்தள்ள முடியாது. வாழ்வில் ஒவ்வொரு வேலையையும் இயந்திரத்திற்கு விட்டு கொடுக்கும்போது மனதில் இந்த அம்மாக்களின் எதிர்பார்ப்புகளைக் காப்பாற்ற வேண்டாமா? நாளைக்கே நாம் மிக்ஸியைத் தூக்கிப் போட்டுவிட்டு அரைக்க அம்மியைத் தேட வேண்டுமென்பதல்ல, எங்கேயாவதொரு எல்லையை வரையறுக்கவேண்டுமென்பது மட்டுமே. நாம் இயந்திரங்களை நம்பிடிக்குள் வைத்து இரவில் நிம்மதியாய் தூங்குவோம். அதிகாலையில் எழுந்து நடை பயிலப் போவதையும், உடற்பயிற்சிக் கூடங்களுக்கு போவதையும் தவிர்ப்போம்.

(தொடரும்)

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

பாட்டில் தண்ணீர் கிடைக்காத தேசம்

கடைசிப் பக்கம்   சுஜாதா தேசிகன் சென்ற வாரம் கல்கி கடைசிப் பக்கம் எழுதிக் கொடுத்துவிட்டு இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான சிக்கிமிற்குச் சுற்றுலா சென்றேன். சுற்றிப் பார்த்த இடங்கள், குடித்த தேநீர், சாப்பிட்ட பதார்த்தங்கள், வாங்கிய வஸ்துக்கள்...

ஜப்பானின் அயராத சிரிப்பு அது

0
உலகக் குடிமகன் -  21 - நா.கண்ணன் நான் ‘மட்சுயாமா’ விமான நிலையத்தில் இறங்கியபோது இரவு நேரம் 7:30. இறங்கும் போது ஜன்னலிலிருந்து பார்த்தேன். நியோன் பல்புகள் ஒளிரும் இரவு. இரவுதானா? ஒசாகா விமான நிலையம்...

அதுபோலத்தான் இந்த இன்பமும்…துன்பமும்

உத்தவ கீதை - 21 - டி.வி. ராதாகிருஷ்ணன்   துக்கம்,ஆனந்தம்,பயம், கோபம்,பேராசை,காமம் மேலும் பிறப்பு, இறப்பு போன்றவை மனதனின் அகங்காரத்தால் ஏற்படுபவையே.ஆன்மாவிற்கல்ல.பிரம்மமே உண்மையானது(நினைவு நிலை),விழித்திருத்தல்,உறக்கம் ,கனவு என்ற மூன்று நிலைகளும் முக்குணங்களும் (சத்வ,ரஜஸ்,தமோ) காரண காரியத்தால்...

கொஞ்சம் சிரிங்க பாஸ்

1
“தலைவரை அவரோட  மனைவி திட்டறாங்களே, ஏன்?” “மகளிரணித் தலைவியின் பேரைச் சொல்லி மனைவியைக் கூப்பிட்டாராம்!” -  சி. ஆர். ஹரிஹரன், ஆலுவா, கேரளா “உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் சிகரெட்  பிடிக்கிறானாமே?” “யார் சொன்னது? அவன் பிறக்கறதுக்கு முன்னாடிலேர்ந்து நான் சிகரெட் பிடிக்கிறேனே.” - தீபிகா சாரதி, சென்னை “அந்தப் பேஷன்டுக்கு ஏதாவது முன்னேற்றம் தெரியுதா...

பாஸிட்டிவ் பார்வையில் பதில் தந்திருக்கலாமே?

0
கர்நாடக இசைக் கலைஞர் கலைமாமணி காயத்ரி கிரிஷ் அவர்களின் நேர்காணல் மிகவும் அருமை. அவரின் தேசபக்திப் பாடல்களைப் பற்றிப் படித்தவுடன் மகிழ்ச்சியாக இருந்தது. பத்து மொழிகளை தேர்வு செய்து பாடும் அவர் “அதற்காக...