0,00 INR

No products in the cart.

அம்மா நினைத்தால் மாறலாம்; மாற்றலாம்!

– தனுஜா ஜெயராமன்

ன்றைய சமூகத்தில் ஆண் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதிலேயே நிறைய அழுத்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆண் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு மாய பிம்பம் இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலில் ஒரு ஆண் பற்றிய பார்வைகளை, பெண்கள் மாற்றிக்கொள்ள வேண்டும். அந்தப் பெண், அவன் அம்மாவாக இருந்தால் வீட்டில் மட்டுமல்ல, நாட்டிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்துவிடும்.

குழந்தையாக இருக்கும்போதே ஆண் பிள்ளை அழக் கூடாது என்றும், அது மிகவும் அவமானகரமானது என்றும் பிஞ்சு மனதிலேயே பதிய வைக்கிறார்கள். ஆண் என்பவன் ஏன் அழக் கூடாது? அவனும் ரத்தமும் சதையும் உள்ள எல்லா உணர்வுகளும்டும் ஒரு சாதாரண மனிதன்தானே! அவனது ஆற்றாமைகளும் துக்கங்களும் தோல்விகளும் ஏன் கண்ணீரால் கழுவப்படக்கூடாது? ஏன் அவனை இறுக்கமான மனிதனாகவே வைத்திருக்க இந்தச் சமூகம் முயல்கிறது என்பது புரிவதில்லை. இதை ஒரு அம்மாவால் மாற்றி விட முடியும்.

ஆண்கள் வீட்டு வேலை செய்யக்கூடாது. அது பெண்களின் பொறுப்பு. ஆண் துடைப்பம் பிடித்து பெருக்கக் கூடாது. ஆண் சமையல்கட்டுக்குள் நுழையக்கூடாது.

ஆணுக்கு வீட்டு வேலை அவசியமில்லை என போதிக்கப்படுகிறது. இது மிகவும் தவறான விஷயமல்லவா? இப்போது உள்ள நடைமுறை வாழ்க்கையில் ஆண், பெண் இருவருமே வேலைகளைப் பகிர்வது என்பது மட்டுமே திருமண பந்தத்தை நிலைக்கச் செய்யும் என்னும் யதார்த்த நிலை. இதை ஒரு அம்மாவால் போதிக்க முடியும்.

ஆணும் பெண்ணும் சமம் என்பது வீட்டில் உள்ள சகோதரியிடமிருந்தே துவங்குகிறது. வீட்டில் உள்ள பெண் குழந்தைக்கு அளிக்கும் அதே பொறுப்பையும், வேலைகளையும் எப்போது ஆண் பிள்ளைக்கும் சமமாகப் பகிர்ந்தளிக்கிறோமோ, அப்போதுதான் அங்கு சமத்துவம் நிலவுவதாக அர்த்தம். அப்படியில்லாமல் தன் சகோதரியை விட, தான் உயர்ந்தவன் என்று சொல்லி வளர்க்கப்படும் ஆண் எவ்வாறு மற்ற சக பெண்களை தனக்கு சமமாக நடத்துவான். இதை ஒரு அம்மாவால்தான் புரிய வைக்க முடியும்.

பெண்ணிற்கும் உணர்வுகள் உண்டு, அவளுக்கும் ஆணைப் போலவே ஆசை, விருப்பம், கனவுகள் உண்டு எனப் புரிய வைத்தால், பின்னாளில் பெண்கள் மீதான பல பாலியல் குற்றங்களைத் தவிர்க்கலாமே! ஒரு பெண்ணின் நிராகரிப்பு என்பது ஆணுக்கு நிச்சயமாக அவமானகரமானதல்ல; மிகச் சாதாரணமானது என்ற உண்மையைப் புரியவைத்தால் பல ஆசிட் வீச்சுக்களோ, அருவாள் வெட்டுக்களோ நடைபெறாமல் தடுக்கலாமே! பெண்ணை சக உயிரினமாக மதிக்க ஆண் குழந்தைக்கு சிறு வயதிலேயே ஒரு அம்மாவால் கற்றுத் தர முடியும்.

ஒரு மேடைநிகழ்ச்சிக்காகப் பேசிய சில அம்மாக்களின் நிலைகண்டு வருத்தமாக இருந்தது. ‘உங்கள் மகன் வீட்டில் என்ன வேலை செய்தால் உங்களுக்கு வருத்தமாக இருக்கும்?’ என்ற கேள்விக்கு, பல தாய்மார்கள் அளித்த பதில் வியப்பை ஏற்படுத்தியது. ஒரு தாய் தன் மகன் துடைப்பம் பிடித்து வீடு பெருக்குவது அவமானமாக இருக்கிறது என்றார். இன்னொரு தாய் என் மகன் குழந்தைகளுக்கு டாய்லட் கழுவி விடுவது மிகுந்த வேதனை அளிக்கிறது என்றார். அது, அவர் பெற்ற குழந்தைதானே. அவருக்கு தன்னுடைய குழந்தை வளர்ப்பில் பொறுப்புகள் இருக்கக் கூடாதா? என்று கேட்டால், அது அவரது மனைவியின் வேலை என வாதிடுகிறார் மகனின் தாயார். மற்றொருவர், தன் மகன் அவன் வீட்டு கழிவறைகளைக் கழுவுவது அருவருக்கதக்க செயல் என்கிறார். பெண்களின் வேலை என்பது வெகுஜன பொதுபுத்தியில் மிக ஆழமாகப் பதிந்துவிட்டிருக்கிறது. இந்த வேலைகள் அனைத்தையும் இன்னொரு வீட்டிலிருந்து வந்த பெண் செய்வது பொறுப்பானது. ஆனால், ஆண் அவன் வீட்டு வேலைகளைப் பகிர்வது அவமானகரமானது என்ற எண்ணம் மாற்றம் காண வேண்டாமா? ஒவ்வொரு அம்மாவும் நினைத்தால் நிச்சயம் மாற்றம் காண முடியும்.

ஒரு ஆண் வீட்டுக்குத் தேவையான பொருட்களான மளிகை, காய்கறி, பழங்கள் வாங்குவதை பற்றி எதுவுமே தெரியாது என்கிறார். அவர் பெற்றோர் அதைப் பழக்கவில்லை என்கிறார். சுயசுத்தம், வீட்டு சுத்தம் குறித்து தமக்கெதுவும் தெரியாது என்கிறார் மற்றொருவர். தனக்கு தேவையான உடைகளைத் தானே தேர்வு செய்துகொள்ளத் தெரியாது என்கிறார் ஒருவர். இதில், அம்மாவோ மனைவியோ உதவ வேண்டும் என திருமணத்திற்குப் பிறகும் எதிர்பார்ப்பது நியாயமற்ற செயல். இந்த நியாயமற்ற நிலையை நீக்க ஒரு அம்மாவால் மட்டுமே முடியும்.

தற்போது இருபாலரும் வேலைக்குச் செல்லும் நிலையில், இது எல்லாம் ஒரு ஆண் தெரிந்து வைத்திருப்பது அவசியமானதே! இதை அந்த ஆணின் அம்மா அம்மகனின் வளர்பருவத்திலேயே வலியுறுத்திப் பழக்க வேண்டும்.

ஆண்களும், பெண்களும் சமம் என்பதை வெறும் வாய் வார்த்தைகளாக மட்டுமே சொல்வது சிறப்பல்ல! நடைமுறையிலும் அது சாத்தியப்பட, இந்த மாதிரியான மாற்றங்களுக்கு இளம் அம்மாக்களும் மகன்களும் தயாராக வேண்டும்.

தனுஜா ஜெயராமன்
சென்னையை சேர்ந்த தனுஜா ஜெயராமன் வளரும் பெண் எழுத்தாளர். M.com படித்து அலுவலக கணக்காளராக பணிபுரியும் அவர் கதைகள் , கட்டுரைகள், ஜோக்ஸ், துணுக்குகளை எழுதுவதில் ஆர்வமுடையவர். பல்வேறு முன்னணிப் பத்திரிகைகளில் அவரது படைப்புகள் வெளியாகி உள்ளன. அமேசான் கிண்டிலில் அவரது சிரிப்பு கதை தொகுப்புகள் வெளியாகி உள்ளன.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

“நெசவும் கவிதையும் என் இரு கண்கள்” –நெசவுக் கவிஞர் சேலம் சீனிவாசன்

0
- சேலம் சுபா  “நான் நெசவாளர் என்று சொல்லிக்கொள்வதில் பெருமையும் நெசவுக் கவிஞர் என்று அறியப்படுவதில் பெருமிதமும் கொள்கிறேன்...” என்று தலைநிமிர்ந்து சொல்லும் சீனிவாசன் தன்னை வளர்த்து, அடையாளம் தந்த குலத்தொழிலை உலகறியச் செய்யும் முயற்சியில்...

“ரஜினி சார் கூட நடிக்கணும்”

- ராகவ் குமார் ராட்ஷசன் படத்தில் அறிமுகம் ஆகி தனுஷின்  ‘அசுரன்’ படத்தில் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த அம்மு அபிராமி ‘பேட்டரி’ படத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.  அம்முவை சந்தித்துப் பேசினோம்: எப்படி இருக்கீங்க...

சமூக சேவகியாக அரசியலில் நுழைந்தேன்!

0
களஞ்சியம்! - மஞ்சுளா ரமேஷ் மங்கையர் மலரின் 42 வருட பயணத்தில், எண்ணற்ற கதைகள், கட்டுரைகள் வந்திருந்தாலும்,  அவற்றுள்  சில எப்போது படித்தாலும், காலத்தால் அழியாத அழகிய வரிகளாக  அமைகிறது. அந்த வகையில்  பிப்ரவரி -...

புற்றுநோய் சிகிச்சையில் ஒரு புரட்சி!

0
டாக்டர் லூயி அல்பெர்டோ தலைமையில் ஒரு சாதனை! -ஜி.எஸ்.எஸ். ஆறு மாதங்களுக்குப் பிறகு அந்த ஒரு டஜன் பேருக்கும் பலவித சோதனைகள் நடத்தப்பட்டன.   விளைவு வியப்பூட்டியது.  மருத்துவர்கள் ஆனந்தக் கண்ணீர் விட்டார்கள். உண்மையை அறிந்ததும் நோயாளிகள்...

சேமிப்பு, முதலீடு என்றால் என்ன? முதலீடு செய்யத் தொடங்குவது எப்படி?

சேமிப்பு: உங்களது தேவை போக, தனியாக சேமித்து வைக்கப்பட்ட பணம். இது அப்படியே இருக்கும். இது வளராது. உதாரணமாக, வீட்டில் தனியாக, பணப் பெட்டியிலோ,அஞ்சரைப் பெட்டியிலோ சேமிக்கப்பட்ட பணம். முதலீடு: உங்களது தேவை போக,...