0,00 INR

No products in the cart.

எந்தையும் தாயும்!

கதை : ரேவதி பாலு, ஓவியம் : ரமணன்

“சுந்தரி! பேசாம இந்த சைக்கிளை மணிக்குக் கொடுத்துடலாமா? பாவம்! மாமிக்கு உபகாரமா இருக்குமே?”

சுந்தரி திகைத்துப்போனாள். அவள் உள்மனதில் தன் பிள்ளை அம்பி பெரியவனானதும் அவனுக்கு வைத்துக் கொள்ளலாம் என்ற யோசனை இருந்தது.

அவள் மனதைப் படித்தவன் போல சீனு பேசினான், “அம்பிக்கு இன்னிக்கெல்லாம் நாலு வயசுதான் ஆச்சு. அவன் சைக்கிள் ஓட்ட இன்னும் ரொம்ப வருஷம் ஆகுமே? அதுவரை இதை சும்மா வைப்பதற்கு மணியிடம் கொடுத்தால் ஆபீஸ் போய் வர சௌகரியமா இருக்குமே?”

அதுதான் சீனு. இன்றைய தேதியில் ஒரு சாமான் தனக்கு உபயோகமாக இருக்கணும். இல்லேன்னா, அடுத்தவங்களுக்காவது உபயோகமாக இருக்கணும்னு மனசார நினைக்கிறவன். சுந்தரிக்கும் இது நன்றாகவே தெரியும். இருந்தாலும், மத்தியதர தாய் மனசு. செட்டும் சிக்கனமுமாகக் குடித்தனம் பண்ணி, தான் உபயோகப்படுத்தி முடித்த பண்டங்களை அடுத்தத் தலைமுறைக்கு பத்திரமாக எடுத்து வைக்கும் பழக்கம்.

விசாலம் மாமியிடம் சுந்தரி போய் விஷயத்தைச் சொன்னதும், மாமி ஆனந்தக் கண்ணீரோடு ஓடி வந்தாள். “சீனு! எப்பேர்ப்பட்ட மனசு உனக்கு” என்று சொல்லிச் சொல்லி மாய்ந்துபோனாள். மறுநாள் மணி வந்து சீனுவிற்கும் சுந்தரிக்கும் சாஷ்டாங்கமாய் நமஸ்காரம் பண்ணி, சைக்கிளை வாங்கிக்கொண்டு போனான். சீனுவின் மூத்த பெண் ஆறு வயது பானு ஒன்றும் புரியாமல் பிரமிப்போடு நடப்பதையெல்லாம் கவனித்துக் கொண்டிருந்தாள்.

பானுவிற்கு இப்போது வயது பதினாலு. சுந்தரியின் நாத்தனார் பரிமளத்திற்குக் கல்யாணமாயிற்று. சொந்த அத்தை பிள்ளை வேணுவையே கல்யாணம் செய்து வைத்தார்கள். ஆனால், அவனுக்குக் கெட்ட பழக்க வழக்கங்களுக்குப் பஞ்சமேயில்லை என்பது பரிமளம் குடித்தனம் செய்ய ஆரம்பித்ததும்தான் தெரியவந்தது.

கல்யாணமாகி மூன்று மாதங்கள் சென்றிருக்கும். பரிமளம் ஒரு நாள் திடீரென்று அண்ணா வீட்டுக்கு வந்தாள். முகமெல்லாம் வெளிறி, நாலு நாளாகச் சாப்பிடாதவள் போல் அவளை பார்க்கவே பரிதாபமாக இருந்தது. வேணு நாலு நாட்களாக வீட்டுக்கே வரவில்லையாம். வீட்டில் காய்கறி வாங்க, பால் வாங்கக் கூட தம்பிடி காசில்லையாம். என்ன செய்வதென்று தெரியாமல், பக்கத்து வீட்டில் பதினாலு பைசா பஸ் டிக்கெட் காசு கடன் வாங்கிக்கொண்டு அண்ணா வீட்டுக்கு வந்திருக்கிறாள்.

அருமைத் தங்கையின் நிலைமையைப் பார்த்து வெகுண்டு போன சீனு, மறுநாள் அலுவலகத்திற்கு லீவு போட்டு விட்டு, ஊர் முழுவதும் தேடி ஒரு சீட்டாட்ட கிளப்பில் வேணுவைக் கண்டுபிடித்துக் கையோடு வீட்டுக்கு இழுத்து வந்தான். ஏகப்பட்ட புத்திமதிகள் சொல்லி, செலவுக்குக் காசு கொடுத்து திரும்ப வேணுவையும் பரிமளாவையும் அயனாவரத்தில் கொண்டு போய் விட்டான்.

அன்று பிள்ளையார் சதுர்த்தி. பூஜை முடிந்து சாப்பிட உட்காரும்போது விறகுக் கடை காதர் பாய் வந்தான். காதர் பாய் உருட்டுக் கட்டைகளாக இருக்கும் விறகை, மெல்லிய கட்டைகளாக அடுப்பில் வைக்கத் தோதாக வெட்டி வீட்டில் கொண்டு வந்து இறக்குவான். சுந்தரி அவனுக்குக் மோர் கொடுத்து, காலணா சில்லறையும் கொடுத்து அனுப்புவாள். அன்று பிள்ளையார் சதுர்த்தியாக இருக்கவே,

ஒரு வாழை இலைத்துண்டில் கொழுக்கட்டைகளைப் போட்டு பேப்பரில் கட்டி அவனிடம் கொடுத்தாள். “ உன் சம்சாரம் முழுகாமல் இருக்கானு சொன்னியே.அவளுக்கு எடுத்துகிட்டுப் போ’’ என்றாள். அவன் அதை சந்தோஷமாக வாங்கிக்கொண்டு கிளம்பினான்.

இந்த முறை பரிமளம் கணவனைக் காணவில்லையென்று வந்தபோது, சீனுவிற்குக் கோபம் வந்து விட்டது. “பொண்ணுங்களைக் கல்யாணம் பண்ணித்தான் கொடுக்க முடியும். நீதான் சாமர்த்தியமா அவனை வழிக்குக் கொண்டு வரணும். இனிமே, வேணு காசு தரலேன்னு இங்கே வர்ற வேலை வச்சிக்காதே. அண்ணா வீட்டுக்கு வந்தியா, ரெண்டு நாள் சந்தோஷமா இருந்தியா, கிளம்பினியான்னு இருக்கணும். இதே பழக்கமா இருந்தா வேணு எங்கேயிருந்து திருந்துவான்? சாயந்திரம் நா வீட்டுக்கு வரும்போது நீ கிளம்பி ஒங்க வீட்டுக்குப் போயிருக்கணும். அப்போதான் அவனுக்கு புத்தி வரும்!” என்று கோபமாகக் கூறி விட்டு அலுவலகம் சென்று விட்டான். பரிமளம் விசும்பி விசும்பி அழ ஆரம்பித்தாள்.

மாலை நாலு மணியானதும் சுந்தரிக்கு பதற்றமாகப் போனது. `சீனுவிற்குக் கோபமே வராது. அவனே கோபமாகக் கத்திவிட்டுச் சென்றிருக்கும்போது, பரிமளத்தை சீக்கிரம் வீட்டுக்குக் கிளப்ப வேண்டுமே’ என்று பரபரப்பாகச் செயல்பட்டாள். `வீட்டில் தம்பிடி காசில்லாம இந்தப் பொண்ணு என்ன பண்ணும்?`

பானுவை அழைத்து, ஒரு கித்தான் பையை அவளைப் பிடித்துக்கொள்ளச் சொல்லி, ஒரு பெரிய சாத்துக்குடி அளவு புளியை உருட்டி ஒரு பேப்பரில் பொதிந்து அதற்குள் போட்டாள். அதேபோல சாம்பார் பொடி, பத்து மிளகாய் வற்றல், அப்பளக்கட்டிலிருந்து உருவிய பத்து அப்பளங்கள், கொஞ்சமாக துவரம் பருப்பு, கையளவு பயத்தம் பருப்பு, உளுத்தம் பருப்பு என்று ஒவ்வொன்றாக பேப்பரில் சணல் கயிற்றால் கட்டப்பட்டு பைக்குள் வைக்கப்பட்டன. ரெண்டு உருளைக் கிழங்கு, ரெண்டு வெங்காயம் பைக்குள் போடப்பட்டன.

`ஒரு நாள் சப்பாத்தி பண்ணுவதற்கு ஆகுமே` என்று நினைத்து ஒரு டம்ளர் அளவு கோதுமை மாவைப் பொட்டலம் கட்டி வைத்தாள்.

அவசரத்துக்கு காபி, டீ போட வைத்துக் கொண்டிருக்கும் திரி ஸ்டவ்வை மூட்டி தோசைக்கல்லைப் போட்டு ஆறு தோசைகள் வார்த்து மிளகாய்ப் பொடியில் தோய்த்து மந்தார இலையில் கட்டி அதைத் தனியாக ஒரு மஞ்சள் துணிப்பையில் வைத்தாள். ஒரு ஹார்லிக்ஸ் பாட்டிலில் மோர் விட்டு வைத்தாள்.

“பரிமளா! வா! வா! அண்ணா வருவதற்குள் கிளம்பு! வீட்டுக்குப் போய் ராத்திரிக்கு இந்த தோசையை நீயும் அவருமா சாப்பிட்டுக்கோங்கோ!”

“தெனமும் சாமிக்கு தவறாம விளக்கேத்தி, என் ஆம்படையானுக்கு நல்ல புத்தி குடுன்னு வேண்டிக்கோ!”

“இந்தா! எண்ணெய் வீட்டிலேர்ந்து கொடுக்கப்படாது. இந்த நாலணாவை வச்சிக்கோ, எண்ணெய் வாங்க. இந்தா பதினாலு பைசா… பஸ் சார்ஜுக்கு தனியா வச்சிக்கோ! பானு! அத்தை கூட போயி, அயனாவரம் பஸ்ல ஏத்திட்டு வந்துரு, என்ன?”

சாயந்திரம் அலுவலகம் முடிந்து வந்த சீனுவிற்கு காலையில் நடந்ததெல்லாம் மறந்து விட்டது.

“பரிமளா எங்கே?” என்றான் பானுவைப் பார்த்து.

“நீங்கதான், ஆபீஸ் விட்டு வரும்போது அவ இங்க இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டேளே. அதான் ரோஷப்பட்டுண்டு கௌம்பிட்டா” என்றாள் சுந்தரி, சிரிப்பை அடக்கிக் கொண்டு. பானு, அம்மாவை ஆச்சரியத்தோடு பார்த்துக்கொண்டே நின்றாள்.

அன்று விறகு போட வந்த காதர் பாய் வழக்கமான காலணா காசை வாங்கிக் கொண்டு, தலையை சொறிந்து கொண்டு நிற்க, சீனு அவனைப் பார்த்து, “என்னப்பா சமாசாரம்?” என்றான்.

“சம்சாரத்துக்கு வலி எடுத்திடிச்சு. ரிக்ஷாவுல ஆசுபத்திரிக்கு இட்டுக்கினு போவணும் ஐயா. ஒரு ரூவா காசு வேணுங்கய்யா ” என்றான்.

சீனு ஒரு நிமிடம் யோசித்து விட்டு, “சுந்தரி! நேத்திக்கி மருந்து வாங்கக் காசு கொடுத்தேனே, அதில மீதி எங்கே வச்சிருக்கே” என்றான்.

சொட்டு மருந்து, மாதக் கடைசி மளிகை போன்ற அவசர செலவுகளுக்காக நேற்று யாரிடமோ பத்து ரூபாய் கைமாற்று வாங்கிக்கொண்டு வந்திருந்தான். செலவுகள் போக மீதி ரெண்டு ரூபாய் சாமி அலமாரியில் எப்போதும் காசு வைக்கும் கிண்ணத்தில் வைத்திருந்தாள். அதை சீனுவிடம் கொண்டு வந்து கொடுத்தாள்.

அதை அப்படியே காதர் பாயிடம் கொடுத்த சீனு, “இந்தா! வச்சிக்கோ! ஆசுபத்திரி போக வர செலவுக்கு ஆகும்!” என்றான்.

தலை கால் புரியாத சந்தோஷத்தில் காதர் பாய் பலமுறை சீனுவைக் கும்பிட்டு, அந்தக் காசை வாங்கிக் கொண்டு நகர, சுந்தரி திகைத்துப்போய் நின்றாள்.

“எல்லாத்தையும் கொடுத்துட்டேளே! நாளைக்கு ஏதாவது அவசரமா நமக்குத் தேவைப்பட்டா என்ன செய்யறது?” என்றாள் பரிதவிப்புடன்.

“இன்னிக்கி அவசர செலவுக்குக் காசு கிடைக்கும்னு நேத்து நினைச்சியா? ஆனா, கிடைச்சதா இல்லியா? அதேமாதிரி நாளைக்கும் ஒரு தேவை இருந்தா கண்டிப்பா நமக்குக் கிடைக்கும். ஆனா, இன்னிக்கி காதருக்கு ஆஸ்பத்திரிக்குப் போக, செலவுக்குக் கொடுக்க முடிஞ்சதே? அதை நெனைச்சுப் பாரு!” என்றான் சீனு.

தன் தந்தையையும் தாயையும் பார்த்து பிரமித்து நின்றாள் பானுவும் தான்.

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

தலையாயப் பிரச்னை!

சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஒவியம்: பிள்ளை கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தான் ரமேஷ். முப்பத்தியெட்டு வயது என்று சொன்னால்தான் தெரியும். கொஞ்சம் இளமையாக இருப்பதாகவே தோன்றியது அவனுக்கு மட்டும்தானா? என்ற சந்தேகம் அவனுக்கே உண்டு. தன் நீண்ட...

அம்மா மசாலா!

இரண்டு சிறுகதைகள். ஓவியம்: சேகர் நீ.த.வெங்கட் ‘’அம்மா… உங்க பையன், மருமகள், பேரன் ரெண்டு நாள் இங்க வரப்போறதா சொன்னேளே… உங்களுக்கு ஏதாவது டவுன்லேருந்து சாமான் வாங்கி வர வேண்டுமா? என்று கேட்கத்தான் வந்தேன்” என்று சொன்ன...

பகல் வேஷம்! 

சிரிப்பு சிறுகதை: -தனுஜா ஜெயராமன் ஓவியம்; பிரபுராம் "நட்டுவான வேடிக்கை சாமியார்"... என்ற ஆதிகாலத்து பழைய  பெயர் பலகை தொங்கிய கேட்டை திறந்து உள்ளே வந்தான் மாணிக்கம். வாசலிலேயே இருபது இருபத்தி ஐந்து பேர் காத்திருக்க... கலைந்த...

இனியில்லை கடன்!

4
சிறுகதை– நாமக்கல் எம்.வேலு ஓவியம்; தமிழ் அழைப்பு மணி சத்தம் கேட்டுப் போய் கவைத் திறந்து பார்த்தால், ராமசாமி வந்து நின்றார். சோமசுந்தரத்திற்கு அதிர்ச்சி.  ‘ என்ன இவன் சொல்லாமல் கொள்ளாமல் திடீரென்று வந்து நிற்கிறான்....

கட்டதுரைக்கு  கட்டம் சரியில்லை…

‘சிரி’ கதை - தனுஜா ஜெயராமன் ஓவியம்: பிரபுராம் அலாரத்தை தலையில் தட்டி நிறுத்தியபடி திடுக்கிட்டு விழித்த சுப்பு... கண்களை தேய்த்துக்கொண்டே சோம்பல் முறித்தார்… எழுந்து சென்று பிரஷை எடுத்தார். பிரஷ் ஸ்டேண்ட் தொபுக்கென விழுந்தது. சத்தம்...