என்ன சேதி?

என்ன சேதி?

என்ன சேதி?

-அமரர் கல்கி

வல்லார் ஒருவர் உளரேல்…?

"நல்லார் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு எல்லார்க்கும் பெய்யும் மழை என்னும் முதுமொழியில், "நல்லார் எனபதை என்பதை "வல்லார்" என்று மாற்றிப் படிக்க வேண்டுகிறோம். ஏனெனில், அதற்கிணங்கச் சென்ற வாரத்தில், ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. ஸான்பிரான்ஸிஸ்கோவில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச (?) தேச – ஐக்ய (?) நாடுகளின் – மகாநாடானது, ஆரம்பிக்கும் போதே, ஒரு தகராறுடன் ஆரம்பமாயிற்று. அந்தத் தகராறு மேற்படி மகாநாட்டுக்கு யார் தலைமை வகிப்பது என்பது பற்றித்தான். தகராறைக் கிளப்பியவர் ருஷியப் பிரதிநிதியான மொலடாவ். (தொந்தரவை விலைக்கு வாங்குவது என்பார்களே, அதுபோல் பிரஸிடெண்ட் ட்ரூமன், தோழர் ஸ்டாலினுக்கு விசேஷ விண்ணப்பம் அனுப்பி மொலடாவை மேற்படி மகாநாட்டுக்கு வரும்படி செய்தார்!) மகாநாட்டுக்கு ஆரம்பம் முதல் இறுதிவரையில் அமெரிக்காவின் பிரதிநிதி ஸ்டெட்டினஸ்ஸே தலைமை வகிக்க வேண்டுமென்று செய்திருந்த ஏற்பாட்டை மொலடாவ் ஆட்சேபித்தார். கடைசியில் சமரசம் ஏற்பட்டது. மகாநாட்டைக் கூட்டிய அமெரிக்கா, பிரிட்டன், ருஷியா, சீனா ஆகிய நாலு தேசப் பிரதிநிதிகளும் வரிசைக் கிரமமாக மகாநாட்டுக்குத் தலைமை வகிக்க வேண்டுமென்று முடிவு செய்யப்பட்டது. ஆகவே, வல்லார் ஒருவர் போட்ட சண்டையின் பயனாக, பலங் குறைந்த ஏழைச் சீனா தேசத்தின் பிரதிநிதிக்கும் ஸான்பிரான்ஸிஸ்கே மகாநாட்டில் அக்கிராசனம் வகிக்கும் பாத்தியதை கிடைத்தது!

நாமும் சந்தோஷிக்கிறோம்.

சீனாவுக்குக் கிடைத்த பெருமையை எண்ணி நாமும் சந்தோஷிக்கிறோம். சீனா ஒரு ஆசிய நாடு; இந்தியாவுடன் சிநேக உரிமை பூண்ட நாடு; அதோடு இந்தியாவில் நாமும் சீனாவுக்காக எத்தனையோ அநுதாபத் தீர்மானங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். மேலும் ஸான்பிரான்ஸிஸ்கோ மகாநாட்டைக் குறித்து வேறு எந்த விதத்திலும் நாம் சந்தோஷப்படக் காரணம் இருப்பதாகத் தெரியவில்லை. உண்மையில், வெட்கப்பட்டுத் தலைகுனிவதற்கு வேண்டிய காரணம் இருக்கிறது. மேற்படி மகாநாட்டில் நாற்பத்தாறு தேசங்களின் பிரதிநிதிகள் வந்திருக்கிறார்கள் அல்லவா? அவர்களில் நாற்பத்தைந்து தேசங்களின் பிரதிநிதிகள், அந்தந்த நாட்டுச் சுதந்திர தேசீய அரசாங்கங்களின் பிரதிநிதிகள். ஆனால், நமது இந்தியா தேசத்திலிருந்து, மேற்படி மகாநாட்டுக்குச் சென்றிருக்கும் மும்மணிகளோ, – சொல்ல வேண்டியதில்லை! அவர்களுடைய தலைப்பாகைகளை மட்டும் இந்தியத் தலைப்பாகைகள் என்று சொல்லலாமே தவிர, மற்றப்படி அவர்களை இந்தியாவின் பிரதிநீதிகள் என்று எந்தவித்திலும் கூறமுடியாது.

சென்னைக்குப் பெருமைதான்!

மேற்படி மும்மணிகளில் ஒருவரான ஸர் ஏ. ராமசாமி முதலியார் அவர்கள் ஸான்பிரான்ஸிகோ மகாநாட்டில் நிகழ்த்திய அரிய பெரிய சொற்பொழிவைக் குறித்துச் செய்தி வந்திருக்கிறது. சொற்பொழிவின் முடிவில் பலமான கைத்தட்டல் நிகழ்ந்ததாகவும் தெரிகிறது. இதுவரையில் மேற்படி மகாநாட்டில் பேசியவர்களுக்குள்ளே ஸர் ராமசாமி முதலியார்தான் வாக்குவன்மையில் பெயர் எடுத்தார் என்னும் செய்தியும் வந்திருக்கிறது. சபாஷ்! அதுதான் சரி! சென்னை மாகாணம் பெற்றெடுத்த இரண்டு அரிய பெரிய வாசாலகர்களில், பாவம், ஸ்ரீ சத்தியமூர்த்தி காலமாகிவிட்டார். ஸர் ராமசாமி முதலியார் இப்போது ஸான்பிரான்ஸிஸ்கோ மகாநாட்டுக்குச் சென்று, சென்னை மாகாணம் வேறு எதில்பின் வாங்கினாலும் வாக்கு வலிமையில் மட்டும் முன் நிற்கிறது என்பதை நிரூபித்தது பற்றிச் சென்னை மாகாணம் பெருமையடைய வேண்டியதுதான்.

இந்தியா – சின்ன தேசமா?

ஆனாலும், ஸர்ஏ.ராமசாமி முதலியார் தமது சொற்பொழிவில், இந்தியாவை சின்ன தேசமாகக் குறிப்பிட்டிருப்பதை நினைக்கும்போது நமக்கு என்னமோ ஒரு மாதிரியாகத்தான் இருக்கிறது. இமயமலையிலிருந்து கன்னியாகுமரி வரையில் விரிந்து கிடக்கும் தேசத்தை ஸிரியா, லெபானன், ஹாலாந்து, பெல்ஜியம் முதலிய கையகல தேசங்களுடனே சேர்த்துக்கொண்டு, "பெரிய தேசங்களாகிய நீங்கள் எங்களைப் போன்ற சின்ன தேசங்களை அலட்சியம் செய்துவிடக் கூடாது!" என்று ஸர் ராமசாமி முதலியார் கெஞ்சிக் கேட்டதைப் படிக்கும்போது, பலத்த கரகோஷத்தில் கலந்துகொள்ள நமக்கு ஆயிரங் கைகள் இல்லாமற் போய்விட்டனவே என்று வருத்தமாயிருக்கிறது!

ஜவாஹர் போயிருந்தால்…?

நியாயமாக மேற்படி ஸான்பிரான்ஸிஸ்கோ மகாநாட்டுக்கு இந்தியாவின் பிரதிநிதியாகப் போயிருக்க வேண்டியவர் இன்று சிறைச்சாலையில் அடைபட்டுக்கிடக்கிறார். பண்டித ஜவாஹர்லால்ஜியைத் தான் சொல்கிறோம். அச்சு நாடுகளின் அக்கிரமங்களைப் பத்து வருஷத்துக்கு முன்னாலிருந்து கண்டித்து வந்த அந்த தீரர், இந்திய தேசீய சர்க்காரின் பிரதிநீதியாக ஸான்பிரான்ஸிஸ்கோ மகாநாட்டுக்குப் போயிருந்தால், எப்படியிருக்கும்! அவரும் தலை நிமிர்ந்து மார்தட்டிக் கம்பீரமாகப் பேசுவார். இந்தியாவிலே நாமும் தலை நிமிர்ந்து நடப்போம். உலகம் இந்தியாவைக் கௌரவத்துடன் நோக்கும். சமாராதனைக்கு அழைக்கப்படாத விருந்தாளி தெரு வாசலில் நின்று கூச்சல் போடுவதைப் போல் ஜவாஹரின் சகோதரி ஸ்ரீமதி விஜயலக்ஷ்மி இன்று ஸான்பிரான்ஸிஸ்கோ வீதிகளில் கூச்சல் போடும்படியாகவும் நேரிட்டிராது. இவ்வளவு கேடுகளும் இந்தியத் தலைவர்களின் முன் யோசனைக் குறைவினால் ஏற்பட்டவை என்பதை நினைக்கும்போது நமது வருத்தம் பன்மடங்கு ஆகிறது. முன்யோசனையுடன் ராஜாஜி எடுத்துக்கூறி எச்சரிக்கை செய்தும் அந்தக் காலத்தில் அவர்கள் பொருட்படுத்தவில்லை.

(6.5.1945 கல்கி தலையங்கத்திலிருந்து…)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com