0,00 INR

No products in the cart.

எப்போது தீரும் இந்த  சிப் தட்டுப்பாடு?

சந்திர மௌலி

 

ண் ஜாண் உடம்புக்கு சிரசே பிரதானம் என்று சொல்லுவார்கள். ஆனால், இன்றைய நவீன தொழில்நுட்ப உலகத்தில் “எலெக்டிரானிக்ஸ் உலகத்தில் சிப்பே பிரதானம்” என்றுதான் சொல்லவேண்டும். இந்தக் காலத்தில்  நாம் பயன்படுத்தும் டி.வி. ரிமோட் முதல் ஸ்மார்ட் போன் வரை சகலமானவற்றிலும்  சிப்தான் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இதனை ’சிலிக்கான் சிப் என்றும், செமி கண்டக்டர் சிப்’ என்றும் சொல்லுவார்கள். சுமார் இருபது வருடங்களுக்கு முன் எழுத்தாளர் சுஜாதா “சிலிக்கான் சில்லுப் புரட்சி” என்று எதிர்வரும் காலத்தில் ’சிப்’ என்ற எலெக்டிரானிக் சமாசாரம் எப்படி புரட்சி செய்யப்போகிறது என்று விவரித்திருந்தார். அது நடைமுறை சாத்தியமாகி, உலகமெங்கும் தொழில்துறையில் சிப் சக்ரவர்த்தி கோலோச்சிக் கொண்டிருந்தார். ஆனால், யார் கண்பட்ட திருஷ்டியோ, அந்த சக்ரவர்த்தியையே படாதபாடு படுத்திவிட்டது கொரோனா. ராஜாவுக்கு பாதிப்பு என்றால், பிரஜைகளுக்கும் கடுமையான பாதிப்பு இருக்கத்தானே செய்யும்? அதுதான் சர்வதேச அளவில் உற்பத்தி உலகம் இன்று திண்டாடிக் கொண்டிருக்கிறது. சிப்புக்கு ஏற்பட்டிருக்கும் உலகளாவிய தட்டுப்பாடு பற்றியும், அதன் தாக்கம் மற்றும் எப்போது இந்தப் பிரச்னை தீரும் என்பது பற்றியும் விரிவாகப் பார்க்கலாம்.

அது என்ன சிப்?

இன்று எல்லா சாதனங்களிலும் எலெக்டிரானிக்ஸின் பங்கு மகத்தானது. சர்வ வியாபியாக, எலெக்டிரானிக்ஸ், சின்னஞ்சிறு வாமனரூபமெடுத்து அமர்ந்து ஆல் இன் ஆல் அழகுராஜாவாக கன கச்சிதமாக தன் பணியை செய்து கொண்டிருக்கிறது சிலிக்கான் சிப். “இது டயோடு, டிரான்ஸிஸ்டர், கபாசிட்டர், ரெஸிஸ்டர் போன்ற ஒரு சில காம்பொனென்ட்களை உள்ளடக்கிய  எலெக்டிரானிக் சர்க்யூட். சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னால், ஷாக்லி, ஜான் பார்தீன், வால்டர் பிராட்டேன் என்ற மூன்று அமெரிக்கர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் இன்றைய சிப்களின் நதி மூலமான  டிரான்ஸிஸ்டர். இதுவே கம்ப்யூட்டர் துறையின் தீவிர வளர்ச்சிக்கு வித்திட்டது. அதன் பின் சுமார் பத்தாண்டுகள் கழித்து, ’ஐ.ஸி.’ என்ற இன்டக்ரேட்டட் சர்க்யூட் கண்டுபிடிக்கப்பட்டது. இது உலகின் தொழில்நுட்பப் புரட்சிக்கு வழிவகுத்தது. ஒரே ஐ.சி.யில் பல டிரான்ஸிஸ்டர்களைப் பொருத்தி மின்னணு சாதனங்களின் செயல்திறனை அதிகரித்ததுடன்,  உருவத்தையும் சிறியதாக்கினார்கள். எந்த ஒரு எலெக்டிரானிக் கருவி என்றாலும், அதன் இதயம் போன்றது  செமிகண்டக்டர் சிப். அதில் வேகமாக புதுப்புது தொழில்நுட்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன”  என்கிறார் மும்பையைச் சேர்ந்த சிப் விற்பனையில் பல்லாண்டு அனுபவம் கொண்ட இஞ்சினியர் பரேஷ்.

உதாரணமாக உங்கள் வீட்டு  ஏ.சி.க்கு ஒரு ரிமோட் இருக்கிறது இல்லையா?  அது என்ன பண்ணுகிறது? அந்தக் காலம் மாதிரி எழுந்து போய் ஸ்விட்ச் ஆன், ஆஃப்,  குளிர்ச்சியை கூட்டுவது, குறைப்பது போன்ற வேலைகளை செய்யவேண்டிய அவசியமில்லாமல், உங்கள் விரல் நுனியில் உள்ள ரிமோட்டின் பட்டன்களை அழுத்தியே செய்ய முடிகிறதல்லவா?  இந்த வேலையை ரிமோட்டுக்குள்ளே இருக்கும் சிப்தான் கவனித்துக் கொள்கிறது. ஏ.சி. ரிமோட்டின் மூலமாக செய்வதற்குரிய பணிகளை செய்வதற்கு மட்டுமே வடிவமைக்கப்பட்ட சிப் அது! இந்தச் சிப்பை வேறு எதற்கும் பயன்படுத்த முடியாது. அதே போல வரையறுக்கப்பட்ட ஒரே விதமான அல்லது சிலபல வகையான வேலைகளை செய்வதற்கென்றே சிப்களை வடிவமைக்க, தயாரிக்க முடியும். குறிப்பாக, கம்ப்யூட்டர்கள், ஸ்மார்ட் போன் போன்றவற்றில் சிப்களின் பங்களிப்பு அதி முக்கியத்துவம் வாய்ந்தது. எனவே. பல்வேறு வகையான தொழில்துறையினரும் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களின் தேவைக்கு ஏற்ப சிப்பை வடிவமைத்து, தயாரித்து, பயன்படுத்துகிறார்கள். எனவே, சிப் தயாரிப்பு ஒரு மலையாய பணி என்றால், சிப் டெக்னாலஜியும் அதைப் போலவே ஓர் அசுர வேலைதான்! இந்த உலகத்தின் ஒட்டு மொத்த சிப் தேவை ஆண்டுக்கு ஒரு டிரில்லியன் அதாவது ஒரு லட்சம் கோடி என்ற அளவில் உள்ளது. இது இந்த உலகத்தின் மொத்த மக்கள் தொகையைவிட 128 மடங்கு! கடந்த பத்தாண்டுகளில் மின்னணு சாதனங்களின் தேவை ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருவதால், சிப்களின் தேவையும் பலமடங்கு பெருகி வருகிறது.

சரி! சிப்புக்கு திடீரென்று ஏன் தட்டுப்பாடு? முதல் காரணம், முந்தைய பாராவில் குறிப்பிட்டது போல மின்னணு சாதனங்களின் உற்பத்தி அதிகரிப்பு; அதன் காரணமாக சிப்களின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இரண்டாவது முக்கியக் காரணம், கொரோனா. உலகமெங்கும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டதன் காரணமாக, போக்குவரத்து பயன்பாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டோமொபைல் உற்பத்தி உள்ளிட்ட பலவும் பாதிக்கப்பட்டன. இதன் பலனாக, சிப் உற்பத்தித் தொழிற்சாலைகள் மூடப்பட்டு, உற்பத்தி தடைபட்டுப்  போனது. மேலும், ஆட்டோமொபைல் உள்ளிட்ட மிக அதிக அளவில் சிப் பயன்படுத்தும் தொழிற்சாலைகளின் உற்பத்தியில் ஏற்பட்ட கடுமையான பாதிப்பின் காரணமாக, தேவை குறைய, சிப் தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் உற்பத்தியையும் குறைத்துக் கொண்டன. இவை தவிர, டிரம்ப் அதிபராக இருந்த காலத்தில் சீனா மீது அறிவிக்கப்பட்ட தடை, ஜப்பானிய சிப் ஆலையில் ஏற்பட்ட தீவிபத்து போன்று இன்னும் சில காரணங்களும் சேர்ந்து கொள்ள, உலகமெங்கும் சிப் தட்டுப்பாடு ஏற்பட்டு. தொழிதுறை கடுமையான பாதிப்புக்குள்ளாகிவிட்டது.

சர்வதேச அளவில் சிப்களுக்கு ஏற்பட்டிருக்கும் தட்டுப்பாடு காரணமாக, கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு வினியோகம் பாதிக்கப்படலாம் என்று சொல்கிறார்கள். காலாவதியான கிரெடிட், டெபிட் கார்டுகளுக்கு புதிய கார்டுகள், தொலைந்து போனவற்றுக்கு மாற்று கார்டுகள், புதிய வாடிக்கையாளர்களுக்கான கார்டுகள் என ஆண்டுக்கு 300  கோடி சிப் பொறுத்தப்பட்ட கிரெடிட், டெபிட் கார்டுகள் சர்வதேச அளவில் தேவைப்படுகின்றன. இந்த சிப் தட்டுப்பாட்டின் தாக்கம் அதன் மீதும் தீவிரமாக இருக்கும் என எதிர்பார்க்கபப்டுகிறது.

உலகத்தின் சிப் உற்பத்தியைப் பொறுத்தவரை, அமெரிக்காவின் இன்டெல், தென் கொரியாவின் சாம்சங், தைவானின் டி.எஸ்.எம்.ஸி. ஆகியவைதான் உலகின் முன்னணி நிறுவனங்கள். இவற்றில் இன்டெல், சாம்சங் இரண்டும் கம்ப்யூட்டர், ஸ்மார்ட்போன் வகையறா சிப்களையும், டி.எஸ்.எம்.ஸி. இதர வகை சிப்களையும் தயாரிப்பதில் முன்னணியில் உள்ளன. இன்று அமெரிக்கா, சீனா, ஜப்பான், தென் கொரியா, நெதர்லாந்து ஆகிய நாடுகள் சிப்களைத் தயாரித்தபோதிலும், தைவானே, உலகத்தின் நெம்பர் ஒன் ஆக விளங்குகிறது. சீனாவைப் பொறுத்தவரை, அதன் உள்நாட்டு சிப் உற்பத்தியைவிட, தேவை பலமடங்கு இருப்பதனால், இறக்குமதியையே பெரிதும் நம்பவேண்டி உள்ளது. இன்றைய சூழ்நிலையில், சீனாவும், அமெரிக்காவும் தங்கள் நாட்டில் சிப் உற்பத்தியை அதிகரிக்க தீவிர நடவடிக்கைகள் எடுத்துவருகின்றன.

“ஸ்மார்ட் போன் தயாரிப்பில் முன்னணி நாடாகத் திகழும் இந்தியா, அவற்றின் இதயமான சிப்களை முழுக்க, முழுக்க இறக்குமதி செய்கிறது. 2019ஆம் ஆண்டு புள்ளி விபரப்படி, 2100 கோடி ரூபாய்க்கு இந்தியா சிப்கள் இறக்குமதி செய்துள்ளது. ஆனால், இந்தியாவில் சிப் உற்பத்திக்கான உள்கட்டமைப்பு வசதிகள் தற்போது இல்லை என்பதே யதார்த்தம். ஆனாலும், இந்தியா அதற்கான நடவடிக்கைகளை எடுக்க இருக்கிறது” என்று வல்லுனர்கள் கூறுகிறார்கள்.

“சிப் தட்டுப்பாட்டின் தாக்கம் இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகமெங்கும் நிலவுகிறது. தேவைக்கு ஏற்ப சப்ளை இல்லாத சூழ்நிலையில், தேவை அதிகரிக்க, அதிகரிக்க விலையும் அதிகரிக்கும். இப்போதே, சிப்களின் விலை வகைக்கு ஏற்ப 30% முதல் 100% வரை அதிகரித்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாக, உற்பத்தி செலவு அதிகரித்து, பொருட்களின் விலை ஏறுவது நிச்சயம்” என்கிறார் மும்பை இஞ்சினியர் பரேஷ். அவரிடம், இந்தப் பிரச்னை இன்னும் எவ்வளவு காலம் நீடிக்கும்? எப்போது பிரச்னை தீரும்?” என்று கேட்டால், ” சிப் தொழிற்சாலைகள் நிர்மாணிக்க நீண்ட காலம் பிடிக்கும்; அவற்றில் மிக அதிகமான முதலீடு தேவைப்படும். ஆகவேதான் உலகில் மிகக் குறைந்த எண்ணிக்கையில் சிப் உற்பத்தித் தொழிற்சாலைகள் உள்ளன. நிலைமை சீரடைய குறைந்தபட்சம் இன்னும் ஓராண்டு பிடிக்கும்” என்கிறார்.

1 COMMENT

  1. கப்சிப் என்று இருக்காதீர்கள். உள்நாட்டில் சிப் தாயரிக்க உத்வேகம் காட்டட்டும் மத்திய அரசு!

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

விதியுடன் ஓர் ஒப்பந்தம்

0
இஸ்க்ரா   14 ஆகஸ்ட், 1947. நேரம் நள்ளிரவை நெருங்கிக் கொண்டிருந்தது. பஞ்சாப், வங்காள எல்லையில் ரத்த ஆறு ஓடிக் கொண்டிருக்க, தில்லி நகரம் மட்டும் பட்டாசு முழங்க ஒரு புதிய யுகம் மலர்வதை அறிவித்துக்கொண்டிருந்தது....

இந்தச் சிறுமி எதிர்காலத்தில்  இந்தியாவிற்காக செஸ் ஆடுவார்

0
வினோத்   அசத்தலான ஆரம்ப விழா, சிறப்பான ஏற்பாடுகளுக்காக அனைத்து நாட்டு வீர்களின் பாராட்டுகளைத்தாண்டி  இந்த ஒலிம்பியாட்டில் கவர்ந்த விஷயங்களில் ஒன்று சிறுவர் சிறுமியர் பெருமளவில் பங்கேற்பாளர்களாகவும் பார்வையாளர்களாகவும் கலந்து கொண்டனர். இதுவரை நடந்த எந்த...

சுதந்திர தினம் : இந்தியாவுக்கு ஆகஸ்ட் 15; பாகிஸ்தானுக்கு ஆகஸ்ட் 14. என்ன காரணம்

1
  சுதந்திர தின ஸ்பெஷல்   – எஸ். சந்திரமௌலி இந்திய சுதந்திர சட்டத்தின்படி,  பிரிட்டிஷ் அரசாங்கம் 1947ஆம் வருடம் ஆகஸ்ட் 14ஆம் தேதி நள்ளிரவில் அதாவது, ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி பிரிட்டிஷ் இந்தியாவை, இந்தியா, பாகிஸ்தான்...

வாசகர்களைக் கதைக்குள் அழைத்துச் செல்லும் ஒரு குரல் .

2
கா.சு.வேலாயுதன்   ‘‘நான் ஒரு குரல் கலைஞர்!’’ - ஆடியோ புத்தகங்களில் கலக்கும் மீனா கணேசன் சென்னை புழலிலிருந்து ஐந்து கிலோமீட்டர் தூரம் ரெட்ஹில்ஸ். இங்கே ஓர் ஒதுக்குப்புறமான இடத்தில் இருக்கிறது அந்த வீடு. சின்னதாக ஒரு ஹால்,...

அண்டார்டிக்காவிலிருந்து 5000 கி.மீ., பறந்து வந்த பறவை

0
  இராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தை அடுத்த தங்கச்சிமடம் கடற்கரை பகுதிகளில் மாதந்தோறும் பறவைகள் கணக்கெடுக்க  ஆராய்ச்சி மாணவர்கள் செல்வது வழக்கம். அண்மையில் தங்கச்சி மடம் அந்தோணியார்புரம் மீன்பிடி இறங்குதளம் அருகே வனத்துறையைச் சேர்ந்தவர் மீனவருடன்...