online@kalkiweekly.com

spot_img

கூத்தனூரில் அருளும் கல்விக் கடவுள்

– லதானந்த்

தமிழ்நாட்டில் கல்விக் கடவுள் சரஸ்வதி தேவிக்கு தனிக்கோயில் அமைந்திருக்கும் திருத்தலம் திருவாரூர் மாவட்டம், கூத்தனூரில்தான். இந்தத் திருத்தலம் மயிலாடுதுறையிலிருந்து திருவாரூர் செல்லும் சாலையில் 20 கிலோ மீட்டர் தொலைவில், பூந்தோட்டம் என்ற ஊரிலிருந்து பிரியும் நாச்சியார்கோவில் செல்லும் பாதையில் அரை கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.

இந்தத் தலம், ‘கூத்தனூர்’ எனப் பெயர் பெற்றதற்கு வரலாற்றுக் காரணம் உண்டு. உலாப் பாடுவதில் புகழ் பெற்ற ஒட்டக்கூத்தர், ஆரம்பத்தில் சாதாரணமான மனிதராகத்தான் இருந்திருக்கிறார். தாம் சிறந்த புலவராக வேண்டும் என அவர் சரஸ்வதி தேவியை வணங்கிக் கடுந்தவம் இருந்துள்ளார். அங்கே ஓடிக்கொண்டிருக்கும், ‘ஹரி நதி’ என்று அழைக்கப்படும் அரசலாற்றின் கரையில் மனமுருகிப் பிரார்த்தித்திருக்கிறார். அவரது பக்திக்கு செவிசாய்த்த கலைவாணி அழகுத் திருக்கோலத்துடன் அவருக்குத் தரிசனம் தந்து, அவரது நாவில் தாம்பூலம் தடவி அருள்பாலித்திருக்கிறாள். அந்த நொடி முதல் சகல ஞானத்தையும் ஒட்டக்கூத்தர் பெற்று, மாபெரும் புலவராக மாறினார். பாக்கள் பல யாத்தார். அவரது புகழ் திக்கெட்டும் பரவியது. அவரது திறமைக்கு அங்கீகாரம் அளிக்கும் விதமாக மன்னன் அவருக்கு அந்த ஊரையே வழங்கிச் சிறப்பித்தான். ஒட்டக்கூத்தருக்கு வழங்கப்பட்ட ஊராகையால் அந்தத் திருத்தலம், ‘கூத்தனூர்’ என்று அழைக்கப்படலாயிற்று.

இங்கே துர்கா, லட்சுமி மற்றும் சரஸ்வதி ஆகிய முப்பெருந்தேவியரும் திவ்ய தரிசனம் தருவதால் இத்தலத்துக்கு, ‘அம்பாள்புரம்’ என்ற பெயரும் உண்டு. கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி நதிகள் கூத்தனூர் அருகே, ‘ருத்ர கங்கை’ என்ற இடத்தில் சங்கமமாவதாகவும் ஐதீகம் நிலவுகிறது. எனவே, ‘தென்னாட்டுப் பிரயாகை’ என்றும் இந்தத் திருத்தலத்தை பக்தர்கள் கொண்டாடி மகிழ்கின்றனர்.

ஆதியில் தாழைப் புதர்கள் மண்டிய புதரில் சிலா ரூபமாக சரஸ்வதி தேவி காட்சியளித்ததால், ‘தாழைக் காடு’ என்ற பெயரும் இப்பதிக்கு உண்டு. இங்கே அரிநாதேஸ்வரர் – கமலாக்ஷி ஆலயம் இருப்பதால், ‘அரிநாதேஸ்வரம்’ என்ற பெயராலும் இத்தலத்தை அழைக்கின்றனர்.

இந்தத் திருக்கோயிலை அனைத்து பக்தர்களும் தரிசித்து அருள் பெறுகின்றனர் என்றாலும், மாணவ, மாணவிகளும், போட்டித் தேர்வுகள் மற்றும் நேர்முகத் தேர்வுகளில் கலந்து கொள்வோரும் அதிக அளவில் வந்து வழிபடுகின்றனர்.

குறிப்பாக, விஜயதசமி என்று சொல்லப்படும் வித்யாரம்ப நாளில் தங்கள் குழந்தைகளை இங்கு அழைத்து வந்து நெல்லைப் பரப்பி அதில், ‘ஓம்’ என்று எழுதச் செய்து, அந்தக் குழந்தையின் கல்வியை இந்தப் புண்ணிய க்ஷேத்ரத்தில் துவக்குகின்றனர். ஆலயத்துக்குச் செல்லும் வழியெங்கும் பென்சில், பேனா, நோட்டுப் புத்தகங்கள், எழுதுபொருட்கள் விற்கும் கடைகள் அதிகமாக இருக்கின்றன. அங்கே எழுதுபொருட்களை வாங்கி, சரஸ்வதி தேவியின் பாதாரவிந்தங்களில் பயபக்தியுடன் வைத்து, பூஜைகள் செய்து பெருவாரியான மக்கள் வாங்கிச் செல்கின்றனர்.

தாழம் புதரில் மறைந்திருந்த சரஸ்வதி தேவியின் திருவுருவத்தை பிரதிஷ்டை செய்ததோடு, அதைத் தனிக்கோயிலாகவும் கட்டியவர் ஒட்டக்கூத்தரின் பேரனான ஒவ்வாத கூத்தர் என்பவராவார்.

கும்பகோணத்தில் சாரங்கபாணி தீட்சிதர் என்பவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு புருஷோத்தமன் என்று ஒரு மகன். அந்தப் பிள்ளை வாய் பேசவியலாத ஊமை. அவர் சரஸ்வதி தேவியை நோக்கித் தவமிருந்தமையால், அன்னை அவருக்குப் பேசும் திறனையளித்து, எல்லையற்ற ஞானத்தையும் வாரி வழங்கினாள். புருஷோத்தம பாரதி என்னும் பெயரோடு அவர் பெரும் புலவராகத் திகழ்ந்தார். அவர் சரஸ்வதி கோயிலைப் பின்னாளில் விரிவுபடுத்தி மண்டபங்கள் அமைத்தார். மஹா கும்பாபிஷேகமும் செய்தார் எனக் கல்வெட்டுகள் கூறுகின்றன.

கோயிலில் அமைந்துள்ள பலிபீடத்தின் கீழ்ப்புறம் வலம்புரி விநாயகரின் திருவுருவம் காட்சியளிக்கிறது. தென்மேற்கு மூலையில் சுயம்புவாகத் தோன்றிய நர்த்தன விநாயகர் அருள்பாலிக்கிறார். மூலையில் இருப்பதால், ‘மூலைப் பிள்ளையார்’ என்கிற பெயரும் இவருக்கு உண்டு.

மஹா மண்டபத்தில் வடக்கு நோக்கி பிரம்மா காட்சியளிக்கிறார். வலது புறத்தில் பிரம்மபுரீஸ்வரர் காட்சி தருகிறார். சரஸ்வதி ஆலயத்தின் நுழைவாயிலின் மேல்புறத்தில் மஹாலட்சுமியின் சிலையும் உள்ளது. வெளிப்புறத்தில் ஒட்டக்கூத்தருக்கும் சிலை ஒன்று உண்டு. கோயில் வளாகத்திலேயே வித்யாரம்பக் கூடமும், கலை நிகழ்ச்சிகள் நடத்துவதற்கென்று மேடை ஒன்றும் இருக்கின்றன. அன்னதானக் கூடமும் உள்ளது.

இக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் கலைவாணி, தவக்கோலத்தில் வெண்தாமரை மலர் மீது பத்மாசனத்தில் அமர்ந்து காட்சியளிக்கிறார். மூல விக்ரஹ தேவியின் கைகளில் வீணை இல்லையென்பது குறிப்பிடத்தக்கது. அம்பாளை அலங்கரிக்கும் தருணங்களில் மட்டுமே வீணை சூட்டப்படுகிறது. நான்கு திருக்கரங்களோடு சரஸ்வதி தேவி அளிக்கும் காட்சி மெய்சிலிர்க்க வைக்கும். ஓலைச் சுவடிகள் ஒரு கரத்திலும், அட்சர மாலை ஒரு கரத்திலும், அமிர்த கலசம் இன்னொரு கரத்திலும் ஏந்தியிருக்கும் தேவியின் நான்காவது கரம் அபய ஹஸ்தமாக அருளை வழங்குகிறது.

ஒவ்வோர் ஆண்டும் சாரதா நவராத்திரி உத்ஸவத்தை பரவசத்தோடு பக்தர்கள் கொண்டாடு கிறார்கள். சரஸ்வதி பூஜையன்று விசேஷ ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்றைய தினம் பக்தர்கள் கூட்டம் அலைமோதும். கலை நிகழ்ச்சிகளால் அந்தப் பகுதியே களைகட்டும். விஜயதசமியன்றும் அதற்கு அடுத்த நாளும் சரஸ்வதி தேவி அன்ன வாஹனத்தில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருளாசி வழங்குகிறாள்.

பௌர்ணமி சிறப்புப் பூஜைகள் வெகு விமரிசையாக நடத்தப்படுகின்றன. ஆண்டுக்கொரு முறை லட்சார்ச்சனையும் நடைபெறுகிறது.

கூத்தனூர் சென்று சரஸ்வதி தேவியை வணங்குபவர்கள், அங்கே அருளும் ஸ்ரீ ஹரிநாதேஸ் வரர் கோயில், ஸ்ரீ லக்ஷ்மி நாராயண கோதண்டராமர் கோயில் ஆகியவற்றையும் தரிசித்து அருள் பெறலாம்.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,876FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

கலையரசி அருள்பெற்ற இசையரசிக்கு கொலுவில் கவுரவம்!

0
பேட்டி: எஸ்.கல்பனா, படங்கள்: ஶ்ரீஹரி.   கலைகளுக்கு அரசியான அந்த சரஸ்வதி தேவிக்கு மானுட வடிவம் கொடுத்தால், நம் மனக்கண்ணில் எம்.எஸ் அம்மாதான் தோன்றுகிறார். அதனாலேயே இந்த வருட கொலுவுக்கு ‘தீம்’ சப்ஜெக்டாக அவரது வாழ்க்கையை எடுத்து...

ஐபிஎல் பைனல் போட்டியில் சிஎஸ்கே: தகுதிச்சுற்றில் தோனி அபாரம்!

0
-கார்த்திகேயன். ஐபிஎல் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறூதிப் போட்டிக்கு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தகுதி பெற்று சூப்பர் சாதனை படைத்துள்ளது. டெல்லிஅணிக்குஎதிராக சிஎஸ்கே அணி நேற்று ( அக்டோபர்...

சரஸ்வதியும் (பரா)சக்தியும்!

0
- ஆர்.மீனலதா, மும்பை நவராத்திரி ஒரு தனித்துவமான முழுமையான பண்டிகை. காரணம்...? தெய்வங்கள், குருக்கள், சுமங்கலிகள், கன்னிப் பெண்கள், குழந்தைகள், இசை மற்றும் பிற கருவிகள், கல்வி சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆகியவை இந்த பண்டிகையில்தான் சமமாக பூஜிக்கப்படுகின்றன. நவமி...

பிரேசில் கால்பந்து போட்டி: நடுவரை பந்தாடிய வீரர் கைது!

0
பிரேசிலில் நடந்த கால்பந்து போட்டியில் நடுவரை காலால் உதைத்து தாக்கிய வீரர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ரியோ கிராண்டே என்ற இடத்தில் உள்ளூர் கால்பந்து...

உத்தம திருடர்கள் பராக்.. சைபர் கிரைம்கள்..உஷார்!

0
நெட்பிளிக்ஸில் ஜம்தாரா என்று ஒரு தொடர் உலாவி கொண்டிருக்கிறது. அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் மொபைல் போன் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களிடம் நைச்சியமாக பேசி பணத்தை களவாடுவார்கள்....
spot_img

To Advertise Contact :