கொலுவில் ‘அப்பூச்சி’

0
228
கடைசிப் பக்கம்
சுஜாதா தேசிகன்

கல்கி கடைசிப் பக்கம் படிப்பவரா? நீங்கள் எந்த ராசியாக இருந்தாலும் இந்த வாரம் உங்கள் ராசி பலனைக் கணிப்பது சுலபம். இந்தப் பக்கத்தைப் படித்துக்கொண்டு இருக்கும் ராசிக்காரர்களே! நீங்கள் உங்கள் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள், குறிப்பாக ஆண்கள் இந்த வாரம் படியேறி பரணுக்குச் சென்று, கொலு பொம்மைகளுடன் கீழே இறங்குவீர்கள்!

இன்று கொலுப் படிகள் ரெடிமேடாக கிடைக்கிறது, முன்பு நாம் பலகை, பென்ச், காலி பெட்டி, டப்பா என்று வீட்டில் கண்ணில் படிவதை எல்லாம் அடுக்கி படிகளை உருவாக்குவோம். பாரம்பரியமாக வைக்கப்படும் கொலுவிற் கும் கோயில் தேர்களில் இருக்கும் சிற்ப அமைப்பிற்கும் பல ஒற்றுமைகள் இருப்பதைக் காண முடிகிறது. விலங்குகள், மனிதர்கள் தொடங்கி படிப்படி யாகத் தெய்வங்களில் முடிவு பெறும்.

புதுப் பொம்மைகளின் வரவு என்ன என்று பார்த்தபோது, இந்த வருடம் அரையர் அப்பூச்சி காட்டும் பொம்மை கண்ணில் பட்டது. கண் இதழை மடித்துக் கூடவே நாக்கை நீட்டி கை இரண்டும் அசைத்தால் ‘அனபெல்’ போலப் பயமாக இருக்கும். ஐ-பேட் இல்லாத காலத்தில் சிறுவர்கள் ‘அப்பூச்சி’ காட்டி விளையாடிய காலம் ஒன்று இருந்தது.

சங்க இலக்கியத்தில் ‘இந்திரகோபம்’ என்ற சிவப்பு பூச்சியே ‘அப்பூச்சி’ என்று ஓர் ஆய்வு கூறுகிறது. கம்பராமாயணம் பால காண்டத்தில் காட்டில் வாழும் மயில் கூட்டங்கள் கோவைப்பழம் போன்ற மகளிரின் ‘லிப்ஸ்டிக்’ உதடுகளை இந்திரகோபப் பூச்சிகளோ என்று எண்ணியது என்று கம்பர் வர்ணிக்கிறார்.

பொதுவாக கோபம் வந்தால் கண்கள் சிவக்கும். இந்திரனுக்குக் கோபம் வந்தால் நடிகர் திலகம் சிவாஜிக்கு சிவப்பது போல எக்ஸ்ட்ராவாகச் சிவக்கும். அதனால் இந்தப் பெயர் என்று நினைத்தேன். கொஞ்சம் தேடிய போது மழைக் காலத்தில் இந்தப் பூச்சிகள் உண்டாகும். மழைக் கடவுளாகிய இந்திரனால் இப்பூச்சிகள் காக்கப்படுகிறது என்று நம்பிக்கையினால் ‘இந்திர கோபம்’ என்ற பெயர் வந்தது.

ஆண்டாள் திருமாலிருஞ்சோலை எங்கும் ‘சிந்துரச் செம்பொடிப் போல்’ இந்திர கோபங்கள் பரந்திருந்தது என்கிறாள். இன்று அவ்வூர்க்காரர்கள் அதை ‘வெல்வெட் பூச்சி’ என்கிறார்கள்.

அப்பூச்சி விளையாட்டு பழந்தமிழர்களிடம் இருந்திருக்கிறது என்பதற்குப் பெரியாழ்வார் குறிப்பிட்டுள்ள ‘அப்பூச்சி’யே சான்று. இன்றும் சும்மா ‘பூச்சி’ காண்பிக்காதே என்கிற வழக்கு இதிலிருந்து வந்திருக்கலாம்.

கண்ணன் தன் தோழர்களைப் பயமுறுத்த அப்பூச்சி காட்டுகிறான். இதைப் பெரியாழ்வார் தன் பிள்ளைத்தமிழில் பாசுரங்களில் குறிப்பிட்டுள்ளார். உதாரணமாக,

‘பத்து ஊர் பெறாது அன்று பாரதம் கைசெய்த அ தூதன் அப்பூச்சி காட்டுகின்றான் அம்மனே அப்பூச்சி காட்டுகின்றான்.’

பாண்டவர்கள் தங்கள் சொத்துக்களை இழந்தபோது அவர்களுக்குப் பாண்டவ தூதனாகத் துணை நின்ற என் கண்ணன் பூச்சி காட்டுகிறான் என்கிறார் பெரியாழ்வார்.

அப்பூச்சி காட்டும் பொம்மையைப் புரிந்துகொள்ள ஆயிரம் வருடங் களுக்குமுன் நடந்த ஒரு சுவாரசியமான சம்பவத்தைத் தெரிந்துகொள்ள வேண்டும்.

ஆழ்வார் பாசுரங்களை அபிநயத்துடன் பாடுவார்கள். இதற்கு அரையர் சேவை என்று பெயர். ஒருமுறை திருவரங்கத்தில் அரையர் அப்பூச்சி பாசுரங் களை அபிநயத்துக்கு எடுத்துக்கொண்டார்.

ராமானுஜரும் அவருடைய சிஷ்யர்களும் அமர்ந்து அதை ரசித்து அனுப வித்துக்கொண்டிருக்க, அரையரும் கண்ணன் செய்வது போலக் கண் இமை களை மடக்கி ‘அப்பூச்சி’யை அபிநயித்தார். அவருக்கு என்ன தோன்றியதோ மீண்டும் அபிநயம் செய்கிறார். இந்த முறை கண் இமைகளை மடக்காமல் கையில் சங்கு, சக்கரங்கள் தரித்துக் கொண்டிருப்பதைப் போலச் செய்து காட்ட, ராமானுஜர் வியந்து ‘பின்னால் கோவிந்தன்’ இருக்கிறாரோ?” என்றாராம். (கோவிந்தன் ராமானுஜருடைய சித்தி மகன்.)

கண்ணன் தன் தோழர்களுடன் அப்பூச்சி காட்டி பயமுறுத்தி விளையா டும்போது, கண்ணன் கண் இமைகளை மடக்கிப் பயமுறுத்தமாட்டான். திடீரென்று தன் கையில் சங்கு, சக்கரங்களை வரவழைத்துப் பயமுறுத்து வானாம்.

ராமானுஜர் பின்புறம் இருந்த கோவிந்தன் இதை அரையரிடம் குறிப் பால் உணர்த்த அதைச் சட்டென்று அரையர் புரிந்துகொண்டு அபிநயத்தை மாற்றிக் காட்டினார். இந்த மாதிரி யோசனைகள் கோவிந்தனுக்குத்தான் தோன்றும் என்று உணர்ந்த ராமானுஜர் ‘பின்னால் கோவிந்தன் இருக்கிறாரோ?’ என்றாராம்.

கடலூரில் வசிக்கும் நண்பர் திரு. வெங்கட்ராமனைத் தொடர்புகொண்டு அப்பூச்சி பொம்மை பற்றி விசாரித்துவிட்டு, கொலு பொம்மைகளுக்கு ஸ்பெஷல் மண் ஏதாவது இருக்கா என்று பேச்சை ஆரம்பித்தேன்.

“வயல் வரப்பில் இருக்கும் களிமண் போன்ற நிலத்து மண்தான். ஒரு வண்டி மண் லோடு இரண்டாயிரத்து ஐந்நூறு ரூபாய். மண்ணை சலித்து, தண்ணீருடன் காலால் பிசைந்து, சப்பாத்தி மாவு பக்குவம் வந்த பிறகு அதை அச்சில் செலுத்தி, செங்கல் சூலை போல அமைத்துக் காயவைத்து, வண்ணம் பூசி தயார் செய்ய 2-3 வாரம் ஆகும் என்றார்.

ஆண் தேனீக்கள், பெண் தேனீக்கள் இருப்பதுபோல கொலுவில்கூட ஆண், பெண் இருக்கிறது. கண்டுபிடிப்பது சுலபம். கொலுப்படி வேட்டியால் போர்த்தியிருந்தால் ஆண் கொலு, புடைவை என்றால் பெண் கொலு!