0,00 INR

No products in the cart.

சுதந்திர இந்திய வளர்ச்சிக்கு விதைகள்! தாமஸ் மன்றோ – 2

– அ.பூங்கோதை

பிற பிரிட்டிஷ் அதிகாரிகளைப் போலன்றி, மக்களுக்கு நெருக்கமானவராக இருந்தார் மன்றோ. அதற்காகவே தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளைக் கற்றுக்கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கெல்லாம் தனது குதிரையில் பயணம் செய்து அந்த மக்களின் பிரச்னைகளை அறிந்து தீர்வு தந்தார். பல கிராமங்களுக்கு நிரந்தரமான குடிநீர் வசதியை ஏற்படுத்தித் தந்தார்.

இந்தியாவில் 28 ஆண்டுகள் பணியாற்றிய மன்றோ, தன் 46வது வயதில் சொந்த ஊருக்குத் திரும்பினார். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு மெட்ராஸ் திரும்பிய மன்றோ, மாவட்ட நிர்வாகம், நிதித்துறை ஆகியவற்றைச் சீர்திருத்தும் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். மன்றோவின் நிர்வாகத் திறனை உணர்ந்த ஆங்கிலேய அரசு, 1820ம் ஆண்டு மெட்ராஸ் மாகாணத்தின் கவர்னராக அவரை நியமித்தது. காவல் துறையிலும் நீதித்துறையிலும் பல சீர்திருத்தங்களை மேற்கொண்டார் மன்றோ.

இந்தியாவின் நவீனக் கல்விமுறை உருவாகக் காரணமாயிருந்த முன்னோடிகளில் தாமஸ் மன்றோவும் ஒருவர். மெட்ராஸ் மாகாணத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் கல்விமுறை குறித்த முதல் கணக்கெடுப்பு மன்றோவால்தான் நடத்தப்பட்டது. ஆசிரியர் பயிற்சிக்கென, ’மெட்ராஸ் பாடநூல் கழகத்தை’ உருவாக்கியது, பெண் கல்வியை உறுதி செய்தது என மன்றோ செய்த புரட்சிகள் சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்கு விதையாக இருந்தன. அவர் தொடங்கிய ஆசிரியர் பயிற்சிப் பள்ளியே பின்னாளில், ’மெட்ராஸ் உயர் பள்ளி’யாக மாறி, ’மாநிலக் கல்லூரி’யாக உயர்ந்தது.

தன் காதல் மனைவி வில்ஹெல்மினா மீது மிகுந்த நேசம் கொண்டிருந்தார். மன்றோவின் பல சீர்திருத்தங்களுக்குப் பின்னால் வில்ஹெல்மினாவே இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். மன்றோ கவர்னராக இருந்த காலகட்டத்தில் வில்ஹெல்மினாவுக்கும் மகன் காம்பெலுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. உடனடியாக இருவரையும் இங்கிலாந்துக்கு அனுப்பி வைத்தார் மன்றோ. தானும் மனைவியின் அருகில் இருக்க விரும்பினார். பதவியில் இருந்து தன்னை விடுவிக்கும்படி பிரிட்டிஷ் அரசுக்குக் கடிதம் எழுதினார். ஆனால், அவரை பிரிட்டிஷ் நிர்வாகம் இழக்க விரும்பவில்லை. ‘இந்தியாவின் கவர்னர் ஜெனரல் பதவி தருகிறோம்’ என்றது. ஆனால், மன்றோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை. தனது இறுதிக் காலத்தை மனைவியின் அருகிலும் தாய்நாட்டிலும் கழிக்க விரும்பினார். அப்போது மன்றோவுக்கு 65 வயது. ’பணியிலிருந்து விடுவிக்க வேண்டும்’ என்ற மன்றோவின் கோரிக்கையை பிரிட்டிஷ் நிர்வாகம் தள்ளிப்போட்டுக்கொண்டே போனது. இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான மன்றோ, மனமாற்றத்துக்காக பயணம் ஒன்றை மேற்கொள்ள விரும்பினார்.

பணிக்காலத்தில் தான் மிகவும் நேசித்த கடப்பா பகுதிக்கு ஜூலை 1827ல் பயணப்பட்டார். ‘அங்கு காலரா நோய் பரவிக்கொண்டிருப்பதால், செல்ல வேண்டாம்’ என மன்றோவுக்கு ஆலோசனை கூறப்பட்டது. ‘ஒரு கொடுநோயால் மக்கள் தவிக்கும்போது, ஓர் அதிகாரி தள்ளி நின்று வேடிக்கை பார்ப்பது அழகல்ல…’ என்று சொன்ன மன்றோ, கடப்பாவுக்குப் பயணித்தார். கிராமம் கிராமமாகப் போய் மக்களுக்கு ஆறுதல் சொன்னார். மருத்துவர்களை உற்சாகப்படுத்தி சிகிச்சையை விரைவுபடுத்தினார். கடப்பாவின் புத்தேகொண்டா என்ற பகுதியில் மன்றோ முகாமிட்டிருந்தபோது, மன்றோவையும் காலரா தாக்கியது.

நோயின் தீவிரம் வீரியமாக, எங்கோ பிறந்து கடல் கடந்து வந்து இந்த மண்ணையும், மக்களையும் உயிருக்குயிராய் நேசித்த சர் தாமஸ் மன்றோவின் உயிர், 1827 ஜூலை 6ம் தேதி பிரிந்தது. அவரின் உடல், கடப்பாவில் உள்ள கூட்டி என்ற பகுதியில் உள்ள ஆங்கிலேயர்களின் கல்லறையிலேயே அடக்கம் செய்யப்பட்டது. மன்றோ இறந்த செய்தி செயின்ட் ஜார்ஜ் கோட்டையை எட்டியதும், கோட்டைக் கொடி சூரிய அஸ்தமனம் வரை அரைக் கம்பத்தில் பறக்கவிடப்பட்டது. இறந்துபோன மன்றோவின் வயதைக் குறிக்கும் வகையில் கோட்டையின் கொத்தளத்திலிருந்து 65 முறை பீரங்கிகள் முழங்கின. மன்றோவின் மரணம் இந்திய மக்களை உலுக்கியது. 1831ல் அவர் உடலின் சில பகுதிகள் மெட்ராஸுக்குக் கொண்டுவரப்பட்டு கோட்டையிலுள்ள புனித மேரி தேவாலயத்தில் அடக்கம் செய்யப்பட்டது.

அவருக்காக பிரம்மாண்டமான இரங்கல் கூட்டம் நடந்தது. ‘மக்களை நேசித்த, மக்களும் நேசித்த தாமஸ் மன்றோவுக்கு மெட்ராஸில் சிலை வைக்க வேண்டும்’ என்று அந்த இரங்கல் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பொதுமக்கள் பங்களிக்க, அன்றைய மதிப்பில் சுமார் எட்டாயிரம் பிரிட்டிஷ் பவுண்டுகள் வசூலாகின. ஆறு டன் எடை கொண்ட வெண்கலச் சிலையில் உயிர் பெற்றார் மன்றோ. 1839 அக்டோபர் 23 அன்று சிலை திறப்பு விழா நடைபெற்றது. அன்று மெட்ராஸ் மாகாணத்துக்கு பொது விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, அடிமைச் சின்னமாக இருக்கும் பிரிட்டிஷாரின் சிலைகள் அனைத்தும் அகற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை நாடு முழுக்க எழுந்தது. சென்னையில் இருந்த பல பிரிட்டிஷ்காரர்களின் சிலைகள் அகற்றப்பட்டு, அருங்காட்சியகத்துக்குக் கொண்டு செல்லப்பட்டன. 1957ல் சிப்பாய்க் கலக நூற்றாண்டின்போது, மன்றோ சிலை இருக்கும் இடத்துக்கு சில அடிகள் தள்ளியிருந்த வெலிங்டன் பிரபுவின் சிலைகூட அகற்றப்பட்டது. ஆனால், மன்றோ இன்றளவும் நிலைகொண்டு நிற்கிறார்.

சென்னை, தீவுத்திடலைக் கடக்கும்போது ஒரு நிமிடம் உங்கள் வாகனத்தை ஓரமாக நிறுத்தி விட்டு மன்றோவின் முகத்தை சற்று கூர்ந்து பாருங்கள். தனது மனைவியையும் மகனையும் பார்க்காமலே மறைந்துபோன ஒரு குடும்பத் தலைவனின் ஏக்கமும் தவிப்பும் அதில் தெரியும்.

(நிறைந்தது)

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

அன்புவட்டம்

0
- அனுஷா நடராஜன் குற்றால அருவி, கும்பக்கரை அருவி, திற்பரப்பு அருவி, ஒகேனக்கல் அருவி... இதில் எந்த அருவியில் தங்களுக்குக் குளித்து மகிழ ஆசை? - எஸ்.கெஜலட்சுமி ராஜேந்திரன், லால்குடி கு, கும், திற், ஒ... எல்லா...

`நமக்கு நாமே` – முதியோர் மந்திரம்

0
சந்திப்பு : பத்மினி பட்டாபிராமன் அக்டோபர் முதல் தேதி, உலக முதியோர் தினமாக அனுசரிக்கப்படுவதையொட்டி சென்னை, இந்திரா நகரில் இயங்கிவரும் இந்தியாவின் முதல் `முதியோர் நல மல்டி ஸ்பெஷாலிடி மருத்துவமனை’ ஜெரி கேர் (Geri...

துர்கா தேவி சரணம்!

0
- ஆர்.ஜெயலெட்சுமி, திருநெல்வேலி * ’துர்க்கம்’ என்றால் அகழி எனப் பொருள். அடியார்களுக்கு அகழி போல் அரனாக இருந்து பாதுகாப்பவள் துர்கை எனப்பட்டாள். துர்க்கமன் என்ற அரக்கனை அழித்ததால், அம்பிகை துர்கை எனப்பட்டதாகவும் கூறுவர்....

எடைக் கட்டுப்பாடு!

0
- இந்திராணி தங்கவேல், மாடம்பாக்கம் உடல் எடை பற்றி ஆராய்ச்சி செய்தவர்கள், ஓர் அபூர்வமான உண்மையை கண்டுபிடித்துள்ளனர். அதாவது, காலையில் லேட்டாக எழுந்து கண்ணைக் கூசும் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பவர்களை விட, அதிகாலையில் இருள்...

தள்ளு வண்டியில் தட்டு வடை!

0
நேர்காணல் : சேலம் சுபா பரத்துக்கு செம பசி. என்னதான் சம உரிமை என்றாலும் சசி சமையல்கட்டு பக்கம் வராத வாரத்தின் மூன்று நாட்கள் அவனுக்கு எப்போதுமே கண்டம் தான். நல்லா வயிறு முட்ட...