online@kalkiweekly.com

தாலிபான் தலையீடு – தவிடுபொடியாகும் மகளிர் விளையாட்டு!

-ஜி.எஸ்.எஸ்.

’கிரிக்கெட் விளையாட்டு பெண்களுக்கு ஏற்றதல்ல. அப்படி ஆடும்போது அவர்களின் முகமும், உடலின் சில பகுதிகளும் முழுமையாக உடையால் மறைக்கப்படாமல் போகலாம். இஸ்லாமிய நெறிகள் இதை ஒருபோதும் அனுமதிக்காது’ – இப்படிக் கூறியிருக்கிறார் ஆப்கானிஸ்தானைக் கைப் பற்றியுள்ள தாலிபானின் கலாசார குழுவின் துணைத்தலைவரான அஹமதுல்லா வாசிக். ஆக, அந்த நாட்டில் இனி பெண்கள் கிரிக்கெட் விளையாட முடியாது! தாலிபான் தலைமையில் ஏற்கெனவே பெண்களின் உரிமைகள் அங்கு நசுக்கப்பட்டு வருகின்றன. அதிலும் விளையாட்டில் ஈடுபடும் பெண்கள் முழுமையாக தங்கள் திறமைக்கு மூடுவிழா நடத்த வேண்டிய கட்டாயம் நேர்ந்திருக்கிறது.
ஆப்கானிஸ்தானில் மகளிர் கிரிக்கெட் கொஞ்சம் கொஞ்சமாக வேர்விடத் தொடங்கியது, நவம்பர் 2007ல். இருபத்தைந்து கிரிக்கெட் வீராங்கனை களுடன் அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் ஒப்பந்தம் போட்டுக்கொண்டது. காபூலில் நாற்பது பெண் கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு இருபத்தியொரு நாட்கள் பயிற்சியும் கொடுக்கப்பட்டது. முழுமையாக ஒரு மகளிர் கிரிக்கெட் அணியும் உருவாக்கப்பட்டது. ஆனால், அத்தனை முயற்சிகளும் வீணாகிக் கொண்டிருக்கின்றன.
ப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த ஆண்கள் கிரிக்கெட் குழு வரும் நவம்பர் மாதம் ஆஸ்திரேலியாவுக்குச் சென்று விளையாட இருக்கிறது. இதற்கு தாலிபான் அரசு அனுமதி அளித்துவிட்டது. ’மகளிர் கிரிக்கெட்டை தாலிபான் அரசு தடை செய்தால், நவம்பர் மாதத்தில் நடக்கவிருக்கும் ஆடவர் கிரிக்கெட் போட்டியை நடத்த மாட்டோம்’ என்று அறிவித்திருக் கிறது போட்டிகளை நடத்தும், ’கிரிக்கெட் ஆஸ்திரேலியா’ என்ற அமைப்பு.


ஆப்கானிஸ்தானில் மகளிர் கால்பந்துக் குழு உண்டு. தடகள வீராங்கனை களும் உண்டு. இவர்களில் கணிசமானவர்களுக்கு விசா கொடுத்து தனது நாட்டில் தங்க அனுமதித்திருக்கிறது ஆஸ்திரேலியா.
தெற்காசிய விளையாட்டுப் போட்டிகள் சென்னையில் நடைபெற்றபோது, பங்களாதேஷை சேர்ந்த பெண்கள் நீச்சல் போட்டியில் நீச்சல் உடையில் பங்கேற்காமல், கால்களை மறைக்கும்படியான உடையணிந்து வந்தது நினைவிருக்கலாம். அந்த நிபந்தனையுடன்தான் அவர்கள் அனுப்பப்பட்டி ருந்தார்கள்.
லிம்பிக் விளையாட்டுகள் தொடங்கியது பண்டைய கிரீஸ் நாட்டில்தான். பண்டைய ஒலிம்பிக்ஸில் கிரேக்க குடிமகன்கள் மட்டுமே பங்கெடுத்துக் கொண்டனர். பணக்காரர், ஏழை என்ற பாகுபாடெல்லாம் பார்க்கப்பட வில்லை. சமத்துவம் கோலோச்சியது. ’மெகரா’ என்ற தளபதியும் பண்டைய ஒலிம்பிக் போட்டிகளில் பங்கெடுத்துக் கொண்டார். மாசிடோனியாவின் இளவரசனும் ஒலிம்பிக் விளையாட்டுகளில் பங்கெடுத்துக் கொண்டார். ’டெமாக்ரிடஸ்’ என்ற தத்துவ ஞானியும் பங்கெடுத்துக் கொண்டார். பாலினிஸ்டோர் என்ற ஆடு மேய்க்கும் இடையனும் பங்கெடுத்துக் கொண்டார்.
ஆனால், வேறொரு சமத்துவம் அறவே இல்லை. பெண்கள் யாருமே ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கெடுத்துக்கொள்ளக் கூடாது! இதைவிடக் கொடுமை, திருமணமான பெண்கள் ஒலிம்பிக் பந்தயங்களைப் பார்ப்பதற் கும் தடை விதிக்கப்பட்டிருந்தது.
யாருக்கும் தெரியாமலோ, ஆண் உடை அணிந்தோ எந்தத் திருமணமான பெண்மணியாவது ஒலிம்பிக் போட்டிகளைப் பார்த்துவிட்டால், அவர் களுக்கு அளிக்கப்படும் தண்டனை என்ன தெரியுமா? மரண தண்டனை தான்.
திருமணமான பெண்களுக்கு பண்டைய ஒலிம்பிக்ஸில் அனுமதி கிடையாது (பார்வையாளராகக் கூட) என்றோம். என்றாலும், கலிபடெய்ரா என்ற பெண்மணி இந்த விஷயத்தில் ஒரு சாகசம் செய்தாள். கணவனை இழந்தவள் அவள். அவளது தந்தை, சகோதரர்கள் ஆகியோர் அதற்கு முந்தைய ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் வெற்றி பெற்றவர்கள். அவள் மகனும் ஜிம்னாஸ்டிக்ஸ் பந்தயத்தில் வெற்றி பெற்றிருந்தான். தனது மகன் போட்டியில் பங்கு கொள்வதைப் பார்த்தாக வேண்டும் என்ற துடிப்பு தாய்க்கு. ஒரு ஆண் பயிற்சியாளர் போலவே உடை அணிந்து வந்தாள் அவள்.
பயிற்சியாளருக்கென்று தனிப்பகுதி இருந்தது. அதற்குள் நுழைய கொஞ்சம் உயரமான தடுப்பு ஒன்றைத் தாண்ட வேண்டும். அதைத் தாண்டும்போது கால் தவறிவிட, அவர் கீழே விழுந்தார். அவரது உடை கலைய, அவரது பெண்மை வெளிப்பட்டது. உடனடியாக ஒரு கூட்டம் கூட்டப்பட்டது. அந்தப் பெண்மணிக்கு என்ன தண்டனை தரலாம் என விவாதித்தனர்.
அந்தத் தாயின் உறவினர்கள் பலரும் ஒலிம்பிக் சரித்திரத்தில் இடம் பெற்றவர்கள் என்ற ஒரே காரணத்தினால், அவர் எச்சரித்து விடப்பட்டார். ஆனால், அதற்குப் பிறகு ஒரு சட்டம் இயற்றப்பட்டது. ’இனி, ஒலிம்பிக் வளாகத்திற்கு வந்து சேரும் பயிற்சியாளர்கள் தங்களை நிர்வாண சோதனைக்கு உட்படுத்திக்கொண்ட பிறகுதான் நுழைய வேண்டும்’.
’ஆப்கானியப் பெண்கள் எந்த விளையாட்டுகளிலும் ஈடுபடக்கூடாது. அவற்றுக்கு விரைவில் தடை விதிக்கப்படும்’ என்று தாலிபான் அரசைச் சேர்ந்த முக்கியமானவர்கள் இன்று கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ’விளையாட்டுத் துறை என்பது பெண்களுக்கு உகந்தது அல்ல, தேவை யானதும் அல்ல’ என்கிறார்கள். தவிர, ‘விளையாட்டுகளில் ஈடுபட்டு செய்தியில் இடம்பெறும் பெண்களின் புகைப்படங்களும் வீடியோக்களும் ஊடகங்களில் வெளியாகும். இதெல்லாம் இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு ஏற்றதே அல்ல’ என்கிறார்கள் தாலிபான் தலைவர்கள்.
போகிற போக்கைப் பார்த்தால் ஆப்கானிஸ்தானை பொறுத்தவரை மகளிர் விளையாட்டு என்பது பண்டைய ஒலிம்பிக்ஸ் கால நிலையை அடைந்து விடலாம் என்பது கசக்கும் உண்மை.

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

கை கொடுக்கும் கை!

1
தொகுப்பு : ஜி.எஸ்.எஸ். விளம்பர உலகில் கைகளை மட்டும் பயன்படுத்தி, லட்சக்கணக்கில் சம்பாதிக்க முடியும் என்பது தெரியுமா?! விளம்பரங்களில் தோன்றுபவர்களில், ‘ஹேண்ட் மாடல்’ என்று ஒரு பிரிவு உண்டு. அவர்களைத்தான் குறிப்பிடுகிறோம். நெயில் பாலிஷ் விளம்பரங்களில்...

காலம் கெட்டுப்போச்சு… சிக்கலில் ஷாருக்கான் வாரிசு!

0
- ஜி.எஸ்.எஸ். தன் குழந்தைகளைப் பற்றி ஊடகங்களிடம் பலமுறை ஷாருக்கான் பெருமைப்பட்டுக் கொண்டதுண்டு. ‘என் குழந்தைகள் மிகவும் ஒழுங்கானவர்கள். என்னைவிட கட்டுப்பாடு மிக்கவர்கள். நட்சத்திரங்களின் குழந்தைகள் என்றால் அவர்கள் சீர் கெட்டவர்களாக இருப்பார்கள் என்று...

ஷேமிங்! ஷேமிங்!

0
விழிப்புணர்வு விஷயம் - ஆர். மீனலதா, மும்பை ஷேம் ஆன் யு! ஷேம் ஆன் Her! ஷேம் ஆன் Him! ஷேம் ஆன் Them! விஞ்ஞான வளர்ச்சி அதிகமாகி, உலகம் சுருங்கிப் போன போதிலும், மக்கள் தங்களைச் சுற்றியிருப்பவர்களை...

பஞ்சாட்சரப் பாறையில் வேல் வழிபாடு!

0
- ஆர்.மீனலதா, மும்பை முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில், முதல் படை வீடாகிய திருப்பரங்குன்றத்தில் உள்ள, ‘பஞ்சாட்சரப் பாறையில்’ மட்டுமே வேல் வழிபாடு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. வருடந்தோறும் புரட்டாசி மாதம், கடைசி வெள்ளிக்கிழமையன்று மலை அடிவாரத்திலிருந்து...

அம்மா நினைத்தால் மாறலாம்; மாற்றலாம்!

- தனுஜா ஜெயராமன் இன்றைய சமூகத்தில் ஆண் என்பவர் எப்படி இருக்க வேண்டும் என்பதிலேயே நிறைய அழுத்தம் இருப்பதாகத் தோன்றுகிறது. ஆண் என்பவர் இப்படித்தான் இருக்கவேண்டும் என்ற ஒரு மாய பிம்பம் இங்கு கட்டமைக்கப்பட்டுள்ளது....
spot_img

To Advertise Contact :