online@kalkiweekly.com

spot_img

நவரத்தினங்களாக அருள்பாலித்த லலிதாம்பிகை!

– லதானந்த்

லலிதா சஹஸ்ரநாமத்தைப் பலரும் கேட்டிருப்பீர்கள். அதில் போற்றப் படும் அன்னை லலிதாம்பிகை அருள்பாலிக்கும் திருத்தலம்தான் திருமீயச்சூர். இதற்கு ஸ்ரீபுரம் என்றும் புராண காலப் பெயர் உண்டு.

இந்தத் திருத்தலம் மயிலாடுதுறை–திருவாரூர் சாலையில், மயிலாடு துறையில் இருந்து 19 கி.மீ தொலைவிலும், கும்பகோணத்தில் இருந்து 39 கி.மீ. தொலைவிலும் அமைந்திருக்கிறது. பேரளம் என்னும் ஊருக்கு மேற்கே சுமார் ஒரு கி.மீ. தொலைவில் இந்த எழில்மிகு ஆலயம் காட்சி தருகிறது. செல்லும் வழியெல்லாம் வயல்களும் மரங்களும் நம்மை வரவேற்கின்றன.

திருமீயச்சூர் ஆலயத்துக்கு அருகிலேயே சூரிய புஷ்கரணி என்னும் திருக் குளம் உள்ளது. இந்தக் குளத்துக்குச் சிறப்புமிக்க புராணப் பின்னணி உண்டு. சூரியனின் சாரதியான அருணனுக்குக் கைலாயம் சென்று சிவபெருமானை வழிபட ஆசை. ஆனால், சூரியன், அருணனின் கால் ஊனக் குறைபாட்டைச் சுட்டிக்கண்பித்துக் கேலி செய்கிறான். ‘உன்னால் உடற்குறையுடன் அங்கே செல்ல முடியாது’ எனப் பரிகசிக்கிறான். ஆனாலும் அருணன் மோஹினி வேடமிட்டிருக்கும்போது சிவபெருமான் நேரில் தோன்றி தரிசனம் அளிக்கிறார். தனது பக்தனான அருணனுக்கு சூரியன் கொடுத்த துன்பத்துக்காக சூரியனுக்கு தண்டனையும் அளிக்கிறார். அந்த தண்டனை என்ன தெரியுமா? சூரியனின் உடல் கருமை நிறம் அடைய வேண்டும் என்பதுதான் சிவன் கொடுத்த சாபம்! சாபம் என்று ஒன்று இருந்தால் சாப விமோசனமும் இருக்கும் அல்லவா? அதன்படி தம்மை ஏழு மாதம் பூஜித்து வந்தால் கருமை நிறம் மாறி, இயல்பு நிலை திரும்பும் என சூரியனுக்கு விமோசன வழியையும் சொல்கிறார் ஈஸ்வரன்.

சாப விமோசனத்துக்காக வழிபடும் பொருட்டு, சூரியன் உருவாக்கியது தான் திருமீயச்சூர் அருகில் இருக்கும் சூரிய புஷ்கரணி தீர்த்தம். அதில் முறைப்படி நீராடி, லலிதாம்பிகை உடனுறை மேகநாத ஸ்வாமியை பூஜித்து, சூரியன் விமோசனம் பெற்றான் என்பது புராணம் சொல்லும் வரலாறு. அதனால்தான் இந்த ஊர் திருமீயச்சூர் என்னும் பெயரையும் பெற்றது. சூரியன் சாப விமோசனம் பெற்ற அந்த நாள் ரத சப்தமி எனப்படுகிறது. அந்த தினத்தில் எருக்கன் இலையில் பசுஞ்சாணத்தைத் தலையில் வைத்து நீராடுதல் மிகவும் சிறப்பு.

தினந்தோறும் சூரியன் அளிக்கும் பிரண்டை சாதத்தையும், சங்கு புஷ்பத்தையும் ஈசன் ஏற்பதாக ஐதீகம். இந்தத் தலத்தில் சேவித்ததால் எமனுக்கே ஆயுள் நீடிக்கப்பட்டதாம்!

அக்னி நட்சத்திரம் ஆரம்பமாகும் முதல் ஏழு நாட்களில் அதிகாலையில் சூரியனின் ஒளிக்கதிர்கள் மேகநாத ஸ்வாமியின் திருமேனியில் படுவது மிகவும் சிறப்பு. அப்போது முப்பத்து முக்கோடி தேவரும் அந்தச் சிறப்பு சூரிய பூஜையில் கலந்துகொளவதாகத் தல புராணம் சொல்கிறது.

சூரியனுக்கு சனி மற்றும் எமன் பிறந்த தலமும் இதுவே! மேலும் வாலி, சுக்ரீவன், கருடன் மற்றும் அருணன் ஆகியோரின் அவதாரங்களும் இந்த தலத்திலேயே நிகழ்ந்திருக்கின்றன. மும்மூர்த்திகளையும் ஒருங்கே காணக்கூடிய அபூர்வ தலம் இது!

நவக்கிரக வழிபாடு தோன்றுவதற்கு முன்னரே இந்தத் திருத்தலம் உள்ளதால் இங்கே நவக்கிரகங்கள் கிடையாது. மாறாக, நாகர் வழிபாடு உண்டு. மொத்தம் பன்னிரண்டு நாக வடிவங்கள் இருக்கின்றன. திருமணத் தடை, நாக தோஷம், மகப் பேரின்மை ஆகியன நீங்க நாகர்களுக்கு சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றன.

அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர், திருஞானசம்பந்தர் ஆகிய சமய குரவர்கள் நால்வருடன் பெரிய புராணத்தை எழுதிய சேக்கிழாரும் இங்கே காட்சியளிக்கிறார்.

புராணேஸ்வரர் சன்னிதியில் ஓர் அபூர்வக் காட்சி. ஸ்வாமி, அம்பாளின் முகவாயினைத் தமது வலது கரத்தால் ஸ்பரிசிப்பதைப் போன்ற திருக்காட்சி தெரிகிறது.

இங்கேயுள்ள மூலஸ்தான விமான அமைப்பு வித்தியாசமானது. யானையின் பின்புறத்தைப் போலத் தோற்றம் அளிக்கும் வண்ணம் இருக்கிறது. சூரியன் தமது ஏழு மாத விமோசன பூஜையின்போது ஈஸ்வரனையும், அம்பாளையும் யானையின் மீதமர்த்திப் பூஜித்தமையால் விமான அமைப்பு அப்படியிருக்கிறது.

இந்தத் திருத்தலத்திலேதான் அகத்தியருக்கு அன்னை லலிதாம்பிகை நவரத்தினங்களாகக் காட்சியளித்திருக்கிறார்.

இங்கே எழுந்தருளியிருக்கும் அன்னையின் காலில் முதலில் கொலுசுகள் இல்லை. ஒரு பக்தையின் கனவில் லலிதாம்பிகை தோன்றித் தமது காலுக்குக் கொலுசுகள் செய்து போடும்படி கூறியிருக்கிறார். அதற்கேற்ப அந்த பக்தையும் கொலுசுகள் செய்து போட்டுள்ளார். லலிதாம்பிகையின் கால்களுக்குக் கொலுசுகள் போடும் வழக்கம் இப்படித்தான் ஆரம்பம் ஆகியிருக்கிறது. இன்றளவும் பக்தர்கள் கொலுசு அணிவிக்கும் காணிக்கையை நிறைவேற்றுவது வழக்கம்.

இந்த இடத்தில் கொலுசு காணிக்கை செலுத்துவோருக்கு ஒரு சிறிய குறிப்பு. நீங்கள் கொண்டு செல்லும் கொலுசுகள் வாங்கிய அசல் ரசீதுடன் கொண்டு சென்றால்தான் உங்கள் கொலுசுகள் அம்மனுக்கு சாத்தப்படும். எனவே, கொலுசு வாங்கின ரசீதை அவசியம் உடன் எடுத்துச் செல்லுங்கள்.

திருமீயச்சூர் ஆலயத்தில் சிவபெருமானுக்கு இரண்டு சன்னிதிகள் உள்ளன. ஒன்று ஸ்ரீ சகலபுவனேஸ்வரர் சன்னிதி; இன்னொன்ரு

ஸ்ரீ மேகநாத ஸ்வாமி சன்னிதி.

ஸ்ரீ சகல புவனேஸ்வரரைப் பத்துப் பதிகங்களால் திருநாவுக்கரசர் பாடியுள்ளார்.

இந்தத் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ சந்திரசேகரருக்குத் தனிச் சிறப்பு உண்டு. பிணக்குற்ற கணவன் மனைவியர் இங்கே வழிபட்டால் சாச்சரவுகள் நீங்கி, குடும்ப ஒற்றுமை தழைக்கும் என்பது நம்பிக்கை.

ஆலயத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள அபூர்வமான பாதாள லிங்கத்தை யும் பக்தர்கள் பரவசத்துடன் வழிபடுகிறார்கள்.

பாதாள லிங்கம் உட்பட, 25 சிவலிங்கங்களும் இங்கே காட்சியளிக் கின்றன.

திருமீயச்சூரில் அதிகம் கடைகள் கிடையாது. எனவே, பூஜைப் பொருட்கள், பூமாலைகள் போன்றனவற்றை ஒரு கி.மீ. தொலைவில் இருக்கும் பேரளம் என்னும் ஊரில் இருந்தே வாங்கிச் செல்லுங்கள். உணவகங்களும் இல்லை. எனவே அதையும் கருத்தில் கொள்ளுங்கள்.

முடிக் காணிக்கை செலுத்த விரும்புவோர் பேரளத்திலிருந்தே முடி திருத்துபவரை அழைத்துச் செல்லுதல் நல்லது.

ஆலயத்தில் விநாயகர், நந்தி, காசி விஸ்வநாதர், விசாலாட்சி, சூரியனுக்கு சாப விமோசனம் அளித்த ஸ்ரீ மேகநாதர், ஆகியோரும் அருள்பாலிக்கின்றனர்.

ஸ்ரீ லலிதாம்பிகையின் சன்னிதி தெற்கு நோக்கிய அகன்ற மண்டபத் தோடு விளங்குகிறது. வலது காலை மடக்கிக்கொண்டும், இடது காலைத் தொங்கப்போட்டுக்கொண்டும் காட்சியளிக்கும் லலிதாம்பிகையை காணக் கண் கோடி வேண்டும்! லலிதாம்பிகை அம்மனை மனமுருகி வேண்டினால் வேண்டியன அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

லலிதாம்பிகையைப் போற்றும் திருநாமங்களின் தொகுப்பான லலிதா சஹஸ்ரநாமம் உருவான திருத்தலம் இது. பண்டாசுரன் என்ற அசுரனை வென்ற மகிழ்ச்சிக் களிப்பில் அம்பாளின் முகத்தில் இருந்தே வாக்தேவி, வசினி தேவிகள் எட்டுப் பேர் தோன்றி, ஸ்ரீ அம்பாளின் ஆயிரம் திருப் பெயர்களையும் இந்த தலத்திலேயே பாடியிருக்கின்றனர். ஸ்ரீ ஹயக்ரீவர் மூலம் இதைக் கேள்விப்பட்ட அகத்தியர் தமது பத்னியாகிய லோபமுத்திரையுடன் இங்கே வந்து லலிதா சஹஸ்ரநாமத்தைப் பாராயணம் செய்ததாக ஐதீகம். அன்னை அவர்களுக்கு நவரத்தினங் களாகக் காட்சியளிக்கிறார். அப்போது அகத்தியர் பாடியதுதான் ஸ்ரீ லலிதா நவரத்தின மாலை.

இந்த க்ஷேத்திரத்தில் ஒவ்வொரு மாதமும் அமாவாசையன்றும் பௌர்ணமியன்றும் விசேஷமான பூஜைகள் நடைபெறுகின்றன.

வாய்ப்புக் கிடைத்தால் அவசியம் லலிதாம்பிகை உடனுறை ஸ்ரீ மேகநாத ஸ்வாமியைத் திருமீயச்சூர் சென்று வணங்கி வாருங்கள். வளம் பல பெற்றிடுங்கள்!

Related Articles

Stay Connected

264,228FansLike
1,875FollowersFollow
1,500SubscribersSubscribe
spot_img

To Advertise Contact :

Related Articles

கலையரசி அருள்பெற்ற இசையரசிக்கு கொலுவில் கவுரவம்!

0
பேட்டி: எஸ்.கல்பனா, படங்கள்: ஶ்ரீஹரி.   கலைகளுக்கு அரசியான அந்த சரஸ்வதி தேவிக்கு மானுட வடிவம் கொடுத்தால், நம் மனக்கண்ணில் எம்.எஸ் அம்மாதான் தோன்றுகிறார். அதனாலேயே இந்த வருட கொலுவுக்கு ‘தீம்’ சப்ஜெக்டாக அவரது வாழ்க்கையை எடுத்து...

ஐபிஎல் பைனல் போட்டியில் சிஎஸ்கே: தகுதிச்சுற்றில் தோனி அபாரம்!

0
-கார்த்திகேயன். ஐபிஎல் டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறூதிப் போட்டிக்கு தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி தகுதி பெற்று சூப்பர் சாதனை படைத்துள்ளது. டெல்லிஅணிக்குஎதிராக சிஎஸ்கே அணி நேற்று ( அக்டோபர்...

சரஸ்வதியும் (பரா)சக்தியும்!

0
- ஆர்.மீனலதா, மும்பை நவராத்திரி ஒரு தனித்துவமான முழுமையான பண்டிகை. காரணம்...? தெய்வங்கள், குருக்கள், சுமங்கலிகள், கன்னிப் பெண்கள், குழந்தைகள், இசை மற்றும் பிற கருவிகள், கல்வி சம்பந்தப்பட்ட பொருட்கள் ஆகியவை இந்த பண்டிகையில்தான் சமமாக பூஜிக்கப்படுகின்றன. நவமி...

பிரேசில் கால்பந்து போட்டி: நடுவரை பந்தாடிய வீரர் கைது!

0
பிரேசிலில் நடந்த கால்பந்து போட்டியில் நடுவரை காலால் உதைத்து தாக்கிய வீரர் மீது கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.  பிரேசில் நாட்டின் தெற்கு பகுதியில் உள்ள ரியோ கிராண்டே என்ற இடத்தில் உள்ளூர் கால்பந்து...

உத்தம திருடர்கள் பராக்.. சைபர் கிரைம்கள்..உஷார்!

0
நெட்பிளிக்ஸில் ஜம்தாரா என்று ஒரு தொடர் உலாவி கொண்டிருக்கிறது. அந்த கிராமத்தை சேர்ந்த இளைஞர்கள் பலர் மொபைல் போன் மூலமாக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருக்கும் மக்களிடம் நைச்சியமாக பேசி பணத்தை களவாடுவார்கள்....
spot_img

To Advertise Contact :