– ஆர். ஜெயலட்சுமி
பதினெட்டு சித்தர்களில் ஒருவரான தேரையர் எப்படி வாழ வேண்டும் என இப்படிக் கூறுகிறார் :
பால் உணவு உட்கொள்ளுங்கள். எண்ணெய் தேய்த்துக் குளிக்கும்போது வெந்நீரில் குளியுங்கள். படுக்கும்போது எப்போதும் இடது கைப்புறமாகவே ஒருக்களித்துப் படுங்கள். புளித்த தயிர் உணவை விரும்பி உட்கொள்ளுங்கள். பசிக்கும்போது மட்டுமே உணவு உட்கொள்ளுங்கள். இரவில் நன்றாகத் தூங்குங்கள்.
வாழைக்காயை உணவுக்குப் பயன்படுத்தும்போது பிஞ்சுக் காய்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். முற்றிய காய்களை கறி சமைத்து உண்ணக் கூடாது.
உணவு உட்கொண்டால் உடனே சிறிது தூரம் நடக்கும் பயிற்சியை செய்ய வேண்டும்.
ஆறு மாதத்திற்கு ஒரு முறை வாந்தி மருந்து உட்கொள்ள வேண்டும்.
நான்கு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து சாப்பிடுங்கள்.
விரும்பிய தெய்வங்கள், குருவை வணங்குங்கள்.
மலம், சிறுநீர் போன்றவற்றை அடக்கி வைக்கக்கூடாது.
முதல் நாள் சமைத்த கறி உணவு, அமுதம் போன்று இருந்தாலும் அதை மறுநாள் உண்ண வேண்டாம்.
உலகமே பரிசாகக் கிடைக்கிறது என்றபோதும் பசிக்காதபோது உணவு உட்கொள்ளாதீர்கள்.
உணவு உட்கொள்ளும்போது தாகம் அதிகம் எடுத்தாலும் இடையிடையே தண்ணீர் குடிக்கக் கூடாது.
மயக்கும் மணம் வீசும் மலர்கள் போன்றவற்றை நள்ளிரவு நேரத்தில் நுகரக் கூடாது.
இரவு விளக்கு வெளிச்சத்தில் நிற்பவரின் நிழலிலும், மர நிழலிலும் நிற்பதைத் தவிர்த்திடுங்கள்.
மாலை நேரத்தில் தூங்குதல், உணவு உட்கொள்ளுதல் கூடாது.
அழுக்கான ஆடை அணியக் கூடாது.
தேரையர் சித்தர் கூறிய இவற்றில் சிலவற்றையாவது கடைபிடிக்க முயற்சிப்போம்.