0,00 INR

No products in the cart.

நீரை அந்தரத்தில் நிறுத்திய ஆபஸ்தம்பர்!

அற்புதம்

செளமியா

ஒரு சமயம் வேதவிற்பன்னரான அந்தணர் ஒருவர் ஸ்ராத்தம் செய்தார். போஜனம் செய்விக்க ஒரு அதிதிக்காக காத்திருந்தார். வெகு நேரம் கழித்து ஒரு அதிதி வந்தார். அவர் நல்ல பசியுடன் இருந்தார். அவரை அமர்த்தி இலை போட்டு, தானே உணவு பரிமாறினார் கர்த்தா.

வந்த அதிதி சாதாரண மனிதர்களைக் காட்டிலும் அதிகமாகச் சாப்பிட்டார். ‘நல்ல பசி போலும்’ என்று எண்ணி, கேட்கக் கேட்க அவருக்கு உணவு பறிமாறப்பட்டது. போடப் போட அனைத்தும் ஒரு நொடியில் காலியாயிற்று!

கர்த்தாவின் கண்களில் முதலில் இருந்த வினயம் மறைந்து, இப்போது ஏளனம் குடிகொண்டது. அதைத் தனது செயல்களிலும் காட்டினார். அதைப் பொருட்படுத்தாத அதிதி, “இன்னும் போடு! இன்னும் போடு!” என்று கேட்டுக் கொண்டிருந்தார். ‘அபரிமிதமாக உண்டும் திருப்தியடையாமல், தனக்கு வேண்டுமென்றே தொல்லை கொடுக்க இவர் வந்திருக்கிறார்’ என்று கர்த்தா நினைத்தார்.

சமைத்தவை எல்லாம் காலியாகி விட்டன! “இன்னும் வேண்டும்! கொண்டு வா!” என்று அதிதி கேட்கவே, கர்த்தாவுக்குக் கோபம் வந்துவிட்டது. காலியான சமையல் பாத்திரத்தைக் கொண்டுவந்து அதிதியின் இலையின் மேல் கவிழ்த்து, “திருப்தி ஆயிற்றா!” என்று கேட்டார். (போஜனம் முடிந்தபோது கர்த்தா, அதிதிகளை ‘த்ருப்தாஸ்தா’ என்று கேட்க வேண்டும். திருப்தியடைந்த அதிதிகள், ‘த்ருப்யத:’ என்று மூன்று முறை சொல்ல வேண்டும். அப்பொழுதுதான் ஸ்ராத்தம் நல்ல முறையில் பூர்ணமடைந்தது என்று அர்த்தம்.) ஆனால், அந்த அதிதி, ‘ந’ என்று சொன்னார்! ‘எனக்கு திருப்தி இல்லை’ என்பது இதன் பொருள்.

கர்த்தாவுக்கு கோபம் தலைக்கேறியது. ‘இவர் கேட்கக் கேட்க கொண்டுவந்து கொட்டினேனே! மலை போல உணவுப் பண்டங்களைத் தின்றுவிட்டு திருப்தி இல்லை என்று சொல்லி என்னை அவமானப்படுத்தி, நான் செய்த ஸ்ராத்தத்தையும் இந்த அதிதி கெடுத்துவிட்டாரே’ என்று சினந்தார்.

கர்த்தா நல்ல தபஸ்வியே. கோபத்தால் முகம் சிவந்த அவர், சாபம் கொடுக்க கையில் நீரை எடுத்து அபிமந்திரித்து அதிதியின் தலையில் எறிந்தார்.

அப்பொழுதுதான் அந்த ஆச்சரியம் நிகழ்ந்தது. வந்த அதிதி, தமது கை அசைவினால் அபிமந்திரித்து எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்தினார்!

கர்த்தா இதைப் பார்த்து பிரம்மித்து நின்றார். ‘தான் எறிந்த நீரை அந்தரத்தில் நிறுத்திய அவர் சாதாரண மனிதர் அல்ல. தன்னை விட உயர்ந்தவர்’ என்பதை அறிந்து, “பூஜ்யரே! நீங்கள் யார்? என்னை ஏன் இப்படிச் சோதிக்கிறீர்கள்?” என்று கேட்டார்.

அதற்கு அந்த அதிதி பதிலளித்தார், “நான் ஒரு முனிவன். நான் அதிகம் உண்டதால் என்னை ஏளனம் செய்தாய். உன் பார்வைகளாலும் செயல்களாலும் என்னை அவமதித்தாய். ஸ்ராத்தத்துக்கு வரும் அதிதிகளிடம் உன் மூதாதையர்களின் ஒரு அம்சத்தை வைத்து பகவான் அனுப்புகிறான் என்பதை மறந்து நீ நடந்து கொண்டாய். உனக்கு புத்தி புகட்டவே நான் இப்படி நடந்து கொண்டேன். ஸ்ராத்தத்தை பய பக்தியுடன், கோப தாபங்களை விட்டுச் செய்ய வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்!” என்றார்.

அதற்குக் கர்த்தா, “ஸ்வாமி! என் தவறை நான் உணர்ந்து கொண்டேன். மன்னியுங்கள். இனி, இம்மாதிரி தவறுகளைச் செய்ய மாட்டேன். நான் செய்த ஸ்ராத்தம் பூர்ணமாகவில்லையே! அதற்கு என்ன செய்ய வேண்டும்?” என்று வினவினார்.

அதற்கு அந்த அதிதி, “புருஷ ஸூக்தம் பாராயணம் செய்வது, இந்த தோஷத்துக்குப் பரிகாரம் ஆகும்!” என்றார்.

உடனே அந்தணரும் புருஷ ஸூக்தத்தைப் பாராயணம் செய்து ஸ்ராத்தத்தை முடித்தார். நீரை அந்தரத்தில் நிறுத்தியதால் அந்த முனிவரை, ‘ஆபஸ்தம்பர்’ என்று அழைத்தார்கள்.

ஸ்ராத்த காலத்தில் புருஷ ஸூக்தமும் கடோபநிஷத்தும் பாராயணம் செய்யும் நியமம் இருக்கிறது. ‘ஆப’ என்றால் நீர். நீரை ஸ்தம்பிக்க வைத்து அந்தரத்தில் நிறுத்தியதால் அவர்,

‘ஆபஸ்தம்பரானார்.

Stay Connected

261,335FansLike
1,909FollowersFollow
8,130SubscribersSubscribe

Other Articles

ஆச்சரியத்தின் உச்சமாக குறுக்குத்துறை முருகன் கோயில்!

0
ஆலயம் கண்டேன் - ஸ்வாமி தமிழகத்தில் எண்ணிலடங்கா கோயில்களில் சொல்லித் தீராத பலப்பல அதிசயங்கள் நிகழ்ந்த வண்ணம் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டுக்கு ஒரு முறை நீரில் மூழ்கி காணாமல் போகும் அதிசய முருகன் திருக்கோயில்...

பலிபீடத்தைத் தொட்டால் தோஷமா?

0
அறிவோம் தெளிவோம் - கவிதா பாலாஜிகணேஷ் எல்லா ஆலயங்களிலும் கொடி மரத்துக்கு அடுத்தபடியாக பலிபீடம் அமைத்து இருப்பார்கள். கொடி மரத்தை வழிபட்டு முடித்ததும் பலிபீடத்தை வழிபட வேண்டும். பொதுவாக, பலிபீடங்கள் மூன்று அடுக்கு பீடம் மீது தாமரை...

பரமேஸ்டிக்கு அருளிய பரந்தாமன்!

0
அருளாடல் - ஸ்ரீதர் பூரி திருத்தலத்தில் பரமேஸ்டி என்ற தையற்காரர் வசித்து வந்தார். புற அழகில் அவலட்சணமான கூன்முதுகர். ஆனால், அக அழகில் ஸர்வ லஷ்ணத்துடன் எல்லா நற்பண்புகளும் பெற்ற சிறந்த விஷ்ணு பக்தர்! தையற்...

வாழ்வின் அர்த்தம்!

0
படித்ததில் பிடித்தது - ஏ.எஸ்.கோவிந்தராஜன் போர்க்களத்தில் மகன் அபிமன்யு தனது கண் முன்னே இறப்பதைப் பார்த்து கேவிக் கேவி கண்ணீர் விட்டு அழுதான் அர்ஜுனன். அதைப் பார்த்து சாரதியாக இருந்த கண்ணனும் கேவிக் கேவி கண்ணீர்...

அழகு சுந்தரனாக அருளும் வரதராஜ பெருமாள்!

0
ஆலயம் கண்டேன் - ஆர்.வி.பதி காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர்  தாலுகாவில் அமைந்த ஆலப்பாக்கம் என்ற சிறிய கிராமத்தில் அமைந்துள்ள அழகு சுந்தர வரதராஜ பெருமாள் திருக்கோயில் சுமார் ஐநூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழைமையான திருக்கோயிலாகும்....