0,00 INR

No products in the cart.

நூறு வருட கால கணபதி கௌரி பண்டிகை

-ஆர்.மீனலதா,மும்பை

கடந்த நூறு வருட காலமாக, வழி வழியாக, ‘கணபதி-கௌரி’விழா, சுபாங்கி தேஷ்முக் அவர்கள் வீட்டில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தேஷ்முக் குடும்பம் மிகப் பெரியது. ஒவ்வொரு வருடமும் ஒவ்வொருவர் வீட்டில், அனைவரும் ஐந்து நாட்கள் ஒன்றுகூடி விழாவைக் கொண்டாடுகிறார்கள். இதைக் கேள்விப்பட்டு, தொடர்பு கொள்கையில், அவர் கூறிய அருமையான, ஆச்சர்யமான பல தகவல்கள் இதோ…

‘ஹர்தாலிகா’ (விரத பூஜை) :

விநாயக சதுர்த்திக்கு முதல் நாள் கொண்டாடப்படும் பண்டிகை ‘ஹர்தாலிகா’ஆகும். இதற்கு ஒருவாரம் முன்பாகவே, களிமண்ணால் செய்யப்பட்ட சிறிய கங்கா – கௌரி பொம்மைகளையும், ‘பத்ரி’எனப்படும் பதினான்கு வகை இலைகளையும் கடையிலிருந்து வாங்கி, வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும். ‘ஹர்தாலிகா’அன்று ரவிக்கைத் துணியை அழகாக மடித்து, கங்கா – கௌரிக்கு புடைவை மாதிரி அணி வித்து, அரிசி பரப்பிய தட்டின் நடுவே வைக்க வேண்டும். பொம்மைகளின் நெற்றியில் மஞ்சள், குங்குமம் பொட்டு வைத்து, பூமாலை ஒன்றை இருவரின் தலைகளிலும் சூடி, அருகே ‘பத்ரி’யையும் வைத்து வணங்க வேண்டும். வீட்டுப் பெண்மணிகள் விரதம் இருந்து, பூஜை செய்வது அவசியம். பழங்கள், இளநீர், உப்பு சேர்க்காத உணவு போன்றவைகளை எடுத்துக் கொள்ளலாம். கணவரின் நலனுக்காக, பெண்கள் விரதமிருந்து செய்யும் பூஜை இது.

ஹர்தாலிகா (மாலை) :

சிராவண மாதம் ஆரம்பமானதுமே, ஒரு நல்லநாளில், நல்லநேரம் பார்த்து கடைக்குச் சென்று கணபதி சிலையில் ‘தேஷ்முக்’என Tag போட்டுவிட்டு வந்துவிட வேண்டும். வருடந்தோறும் ஒரேமாதிரியான உருவம், எடை, உயரம் கொண்ட கணபதி சிலைதான் (சுமார் 21 அங்குலம்) வணங்கப்படுகிறது. இதில் மாற்றமே கிடையாது. ‘தேஷ் முக்’குடும்பத்து கணபதி கூட, ஒரே கடையில் இருந்துதான் காலம்காலமாக வாங்கப்பட்டு வருகிறது.

மாலையில், வெள்ளைத் தொப்பியை ஆண்கள் அணிந்துகொண்டு குறிப்பிட்ட கடைக்குச் செல்கையில், பெண்களும் உடன் செல்வார்கள். ‘தேஷ்முக்’ Tag போட்ட கணபதியை வெள்ளிப்பலகையின் மீது வைத்து எடுத்து வந்து முதலில் வாயிலில் நிற்க வேண்டும். உப்பு கலந்த நீரை கணபதிக்கு திருஷ்டி சுத்தி தெளித்த பிறகே வீட்டி னுள்ளே அழைத்து வர வேண்டும்.

வீட்டின் உள்ளே போடப்பட்டிருக்கும் கோலத்தின் மீது கணபதியை வைத்து, ‘கணபதி பப்பா மோரியா! மங்கள மூர்த்தி மோரியா!’எனப் பாடியவாறே, கணபதி யின் கால்களில் மஞ்சள், குங்குமம் இட்டபின், கணபதி கையில் ஒரு சிறிய பேப்பரை வைத்து, சிறிது சீனி போட்டு ஆரத்தி எடுக்க வேண்டும். கங்கா-கௌரி பொம்மைகளும் அருகே வைக்கப்பட வேண்டும்.

கணபதி வைக்கப்படும் மண்டபத்தின் ஒரு பகுதியில் ஓரமாக, ‘கௌண்டல்’என்று கூறப்படும் மருத்துவ குணமுடைய ‘மகாகால் பழக்கொத்து’ ஒன்று வைக்கப்படும். ஈ, எறும்பு மற்றும் பூச்சிகள் வருவதை இக்கொத்து தடுக்கும். கணபதிக்கு ஆடை, ஆபரணங்கள் ஆகியவற்றால் அலங்காரம் செய்து மண்டபத்தினுள் வைத்துவிட வேண் டும். கணபதிக்கும், கௌரிக்கும் வெள்ளி மற்றும் தங்க நகைகளைத் தனித்தனியாக ஒரு பெட்டியில் வைப்பது வழக்கம்.

‘விநாயக சதுர்த்தி’ (காலை + மாலை) :

அதிகாலை நான்கு மணி அளவில் பண்டிட்ஜி வந்து பிரதிஷ்டா பூஜை செய்த பிறகு, அவலுடன் தயிர் கலந்து கங்கா – கௌரிக்கு நிவேதனம் செய்து, இருவரையும் சற்று நகர்த்தி வைத்துவிட வேண்டும். கணபதி, ‘அதர் வசிஷ்’ என்கிற ஸ்லோகத்தை வீட்டிலுள்ள அனை வரும் 21 முறை கூற வேண்டும்.

கணபதிக்கு ஐந்து கொழுக்கட்டைகள், சிறிது சாதம், பருப்பு, வெண்டைக்காய், வால் (ஒரு வகை பீன்ஸ்), கலந்த புடலங்காய் கறி, பாயசம், கோசுமல்லி, சட்னி ஆகியவை கொண்ட தட்டு தவிர, தனியாக இருபத்தியொரு கொழுக்கட்டைகளின் மீது துளசி இலைகளைப் போட்டு வேறு தட்டில் வைத்து நிவேதனம் செய்து, ஆரத்தி எடுக்க வேண்டும். பின்னர் இந்தக் கொழுக்கட்டைகள் மற்றவர்க்கு விநியோகம் செய்யப்படும். மாலையில் மறுபடியும் பூஜை செய்ய வேண்டும். மறுநாள் காலை, மாலை வேளைகளில் பிரதிஷ்டை செய்யப்பட்ட கணபதிக்கு வழக்கம்போல பூஜை செய்து, தூப தீபம் காட்டி வழிபட வேண்டும்.

‘கௌரி வருகை தரும் நாள்’(மூன்றாம் நாள் காலை + மாலை) :

ஒவ்வொரு வீடுகளிலும் ஒவ்வொரு வகையாக, ‘கௌரி’இருப்பது வழக்கம். ‘தேஷ்முக்’குடும்பத்தில் இதுவும் வழிவழியாக வருவதொன்றாகும். நல்ல நேரம் பார்த்து கடைக்குச் சென்று, பேப்பரில் அழகாக மடித்துச் செய்யப்பட்டிருக்கும் கௌரியின் முகத்தையும், வேருடன்கூடிய, ‘தேர்டா’ என்கிற செடியை வாங்கி வரவேண்டும். இச்செடியின் மேல் பாகத்தில் முகத்தை வைத்து வீட்டிற்குள், கணபதியை அழைத்து வருவதுபோல, கோலாகலமாக அழைத்துவர வேண்டியது முக்கியம். பிறந்த வீட்டிற்கு ‘கௌரி’ வருவதாக ஐதீகம்.

சொளகியின் மீது குங்குமத்தினால் ‘ஸ்வஸ் திக்’வரைந்து, அரிசியை லேசாகப் பரப்பி, அதன் மேல் தேர்டா செடி, கௌரி முகம், ரவிக்கைத் துணி, மஞ்சள் தடவிய நூல்கண்டு போன்றவைகளை வைத்து திருஷ்டி கழித்து, வீட்டிலுள்ள எல்லா அறைக்குள்ளும் எடுத்துச் செல்ல வேண்டும். கௌரிக்கு முன்பாக, தண்ணீரில் கரைத்த குங்குமத்தில் கைமுட்டி மற்றும் விரல்களை நனைத்து தரையில் பாதங்கள் இட்டவாறே செல்ல வேண்டும். எல்லா இடங்களிலும் கௌரியின் கால்கள் பதிந்த மாதிரியான நம்பிக்கை.

ஒவ்வொரு அறைக்குள்ளும் செல்கையில், ‘கௌரி.. கௌரி குட்டே ஆலி?’,‘கிச்சன் மே ஆயி!’,‘சாந்தி ஹை! சப்குச் டீக் ஹை!’ (கௌரி… கௌரி எங்க வந்திருக்கே? என ஒருவர் கேட்க, ‘கிச்சனில் வந்திருக்கிறாய். இங்கு எல்லாம் சரியாக இருக்கிறது!’ என்று மற்றவர் பதில் கூறுவது வழக்கம்.)

பிறகு கணபதி அருகே, சொளகியுடன் கௌரியை வைத்து, தேங்காய் கலசத்தை அதன் முன்பாக வைப்பது முக்கியம். நிவேதனமாக பாயசம், பாக்ரி, சிவப்புக் கீரைக்கூட்டு போன்றவற்றைச் செய்து கௌரிக்கு படைத்து, ஆரத்தி எடுக்க வேண்டும்.

கௌரி அலங்காரம் :

இதற்குப் பல மணி நேரம் ஆகும். பிற் பகலுக்கு மேல், நாற்காலி ஒன்றில், ‘தேர்டா’வை முதலில் வைத்து, ’கூ’வடிவ கம்பில் நிறுத்திய பிறகு ஆடை, அணிகலன்கள் அணிவித்து, கடைசியில் கௌரியின் முகத்தை சரியாகப் பொருத்த வேண்டும். நாற்காலியில் ஒரு மகாராணி போல கம்பீரமாக அமர்ந்திருப்பாள் கௌரி.

நான்காம் நாள் (காலை + மாலை) :

கௌரி மற்றும் கணபதிக்கு அருகே மஞ்சள் தடவிய நூல்கண்டை வைக்க வேண்டும். நன்றாக சுத்தம் செய்யப்பட்ட 1111 அருகம் புற்களைக் கொண்டு கணபதி ஸஹஸ்ரநாம அர்ச்சனை பண்ண வேண்டும். பிற்பகலில் அறிந்தவர், தெரிந்தவர்களுக்கு சிறப்பான உணவு படைக்க வேண்டும். மாலை முதல் பாட்டு, நடனம், நாடகம், பஜனை என்று இரவுவரை நடைபெறும். இரவு கண்விழிப்பவர்களும் உண்டு.

ஐந்தாம் நாள் (காலை + மாலை) :

அதிகாலை நான்கரை மணிக்கு பூஜை செய்து, பஜனைப் பாடல்கள் பாடி, ‘காகட் ஆர்த்தி’எடுக்க வேண்டும். தயிரில் அவல் கலந்து நிவேதனம் பண்ணிய பிறகு, வீட்டிலுள்ள பெண்மணிகள் ஒவ்வொருவரும் 16 அருகம் புல், 16 எள், 16 அரிசி ஆகியவற்றை கௌரி மீது தூவி, மஞ்சள் தடவியநூல் கண்டிலிருந்து 16 நூல்களை அவரவர் உயரத்திற்கேற்றவாறு வெட்டி ஒன்றாகச் சேர்த்து ஏழு முடிச்சுகள் போட்டு, மாலை மாதிரி ஆக்கி, ஒளித்து வைத்து விட வேண்டும்.

லட்டு வேண்டுதல் :

குடும்பத்தில் அவரவரது மனதில் நினைக்கும் வேண்டுதல் நல்லபடியாக முடிய, 11, 21, 31, 51 என கணபதிக்கு லட்டு வேண்டிக் கொள்வதுண்டு. ஒரேமாதிரியாக 560க்கும் மேல்கடக் பூந்தி லட்டு’ செய்து கணபதிக்கு வைத்துவிட வேண்டும். மாலையில் பண்டிட்ஜி வரும் முன்பாக, ஒளித்து வைத்திருக்கும் நூல் மாலையைத் தேடி எடுத்து பெண்மணி கள் அணிவார்கள். உத்தராங்க பூஜை முடிந்த பின் கௌரி – கணபதியை எடுத்துச் செல்லத் தயாராக வேண்டும்.

பிரியா விடை :

தேங்காய்ப்பூ, வெல்லப்பொடி, ஏலப்பொடி மிக்ஸ் செய்து, பிசைந்த கோதுமை மாவிற்குள் வைத்து கரஞ்சி மாதிரி பண்ணி, நெய்யில் பொரித்தெடுத்து நன்றாக பேக் செய்து கௌரி – கணபதி வழிப்பயணத்திற்காக கொடுக்க வேண்டியது முக்கியம். தங்க, வெள்ளி நகைகளைக் கழற்றிவிட்டு, பூ மாலைகள் போட வேண்டும்.

விஸர்ஜன் :

கடலில் கௌரி – கணபதி மற்றும் ‘கங்கா கௌரி ஆகியோரை மூழ்க விடுமுன் உடைத்த தேங்காய், வெல்லம் ஆகியவற்றை அனைவருக்கும் கொடுத்து ஆரத்தி எடுக்க வேண்டும். கடல் மண்ணிலிருந்து சிறிது எடுத்து வெள்ளிப்பலகை மீது வைப்பார் பண்டிட் ஜி. ‘கணபதி பப்பா மோரியா புட்சா வர்ஷா லக்வர் ஆ!’ என்று கோஷமிட வேண்டும். வீட்டிற்குடா திரும்பி வந்தபிறகு, வெள்ளிப் பலகையில் இருக்கும் கடல் மண், கலசம் மற்றும் தேங்காய்க்கு மீண்டும் ஆர்த்தி எடுக்க வேண்டும்.

நல்ல முகூர்த்தம் பார்த்து இரவிலேயே கணபதி மண்டபத்தின் அலங்காரத்தில் சிறுபகுதியை எடுத்து விட வேண்டும். 24 மணி நேரமும் விளக்கு எரிவது அவசியம். காலையில் கழுத்தில் அணிந்திருக்கும் மஞ்சள்நூல் மாலையை அவிழ்த்து நீரில் விட்டுவிட வேண்டும். வேண்டுதலுக்காக லட்டுவை படைத்தவர்க்குத் திரும்பக் கொடுப்பதற்கு முன்பாக, அவரவர் லட்டுகளில் இருந்து இரு லட்டுகளை மட்டும் கணபதி அருகே வைக்க வேண்டும். ‘ஹர்தாலிகா’ முதல் கௌரி – கணபதி செல்லும்வரை கல்யாணம் மாதிரி வீடு கலகலவென இருக்கும். தொடரட்டும்!

‘கணபதி பப்பா மோரியா! மங்கள மூர்த்தி மோரியா!’

Stay Connected

261,008FansLike
1,929FollowersFollow
12,000SubscribersSubscribe

Other Articles

விநாயகச்சதுர்த்தி விதவிதமான கொழுக்கட்டைகள்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க கோன் கொழுக்கட்டை தேவையானவை : பச்சரிசி மாவு-3 கப், கனிந்த செவ்வாழைப்பழம் - 1, தேங்காய் துருவல் - 2 கப், ஏலக்காய் தூள்-அரை ஸ்பூன், வெல்லம்-3 கப், வாழையிலை-தேவைக்கேற்ப. செய்முறை : முதலில்...

உதடுகள் பராமரிப்பு

0
வாரத்தில் இரு நாட்கள் உதடுகளில் வெதுவெதுப்பான அல்லது குளிர்ந்த தண்ணீரால் ஒத்தடம் கொடுத்து வந்தால் உதடுகள் ரோஜா பூ போல் மென்மையாகும். முட்டையின் வெள்ளைக் கருவோடு தேன் கலந்து உதடுகளில் பூசிவந்தால், உதடுகள்...

கார்ட்டூன்களுக்கும் உண்டு தடை

0
-ஜி.எஸ்.எஸ். கார்ட்டூன் திரைப்படங்களும் கார்ட்டூன் தொடர்களும் யாருக்கானவை? ‘இதில் என்ன சந்தேகம்? குழந்தைகளுக்கானவை’என்று பதில் சொல்வதற்கு முன் கொஞ்சம் யோசியுங்கள். இளைஞர்களும் வயதானவர்களும்கூட ஒருசேர கார்ட்டூன்களை/காமிக்ஸ்களை ரசிப்பதுதான் உண்மை. நோயாளிகளின் மன இறுக்கத்தைப் போக்க...

கர்ப்பிணிப் பெண்களுக்கு கோவிட் தடுப்பூசி

0
தொகுப்பு : பத்மினி பட்டாபிராமன் கடந்த ஒன்றரை வருடங்களாக உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட் தொற்றுநோய் குறித்து எத்தனையோ சந்தேகங்கள், கேள்விகள் இன்றும் தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.இந்த நிலையில், ‘கர்ப்பிணிப் பெண்களுக்குத் தடுப்பூசி எப்போது போட...

பெண்களைப் புரிந்துகொள்வோம்

0
-வாசகர் ஜமாய்க்கிறாங்க ஆர்.கெஜலட்சுமி, லால்குடி பெண் - ஆணை விட இருபது சதவீதம் எடை குறைவு. ஆணைப்போல வேகமாக ஓடவோ, தாவவோ முடியாது. கால்களில் பலம் குறைச்சல். இதயமும், சுவாசப்பையும் அவளுக்குக் கொஞ்சம் சின்னது. வியர்வை...