0,00 INR

No products in the cart.

 பொலிடிகல் பிட்ஸா

கௌதம் ராம்

 கட்சிக்குள்ளே எதிரணி!

 காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இயங்கிவரும் (சோனியா-ராகுல்) எதிரணியில் முக்கியமானவர் குலாம் நபி ஆசாத். அதனால்தான், அவருக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைந்ததும் மேலும் ஒரு வாய்ப்பு மறுக்கப்பட்டது. கடந்த நாற்பதாண்டு கால இந்திய அரசியல் சரித்திரத்தை கிட்டே இருந்து பார்த்தவர், அதில் பங்கேற்றவர் என்ற பெருமை அவருக்கு உண்டு. ஆனாலும், அரசியல் வாழ்க்கை அல்மோஸ்ட் முடிவுக்கு வந்துவிட்ட சூழ்நிலையில், அவர் ஒரு வேலையில் இறங்கி இருக்கிறார். அதற்காக தினமும் சில மணி நேரங்கள் செலவிடுகிறார். அது, காங்கிரஸ் மேலிடத்திலும், இன்னும் சில முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மத்தியிலும் சலசலப்பினை ஏற்படுத்தி இருக்கிறது. அப்படி என்ன செய்து கொண்டிருக்கிறார் இந்த ஆஸாத் ஜீ? வேறு என்ன? தன் அரசியல் அனுபவங்களை புத்தகமாக எழுதிக்கொண்டிருக்கிறார்.  அதில் கங்கிரஸ் கட்சி சம்பந்தமாகச் சில சர்ச்சைக்குரிய விஷயங் களைப் பதிவு செய்வார் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. அப்படியானால் இனிமேல் அவர் குலாம் நபி சர்ச்சை ஜீ!

ஸ்மிருதி இரானியின் புது முயற்சி!

 மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் ஸ்மிருதி இரானி குறைத்துவிட்டார். எதை? பெண்களின் திருமண வயதையா? இல்லை இல்லை. தன்னுடைய எடையை! அண்மைக் காலமாகத் தீவிரமான எடைக்குறைப்பு முயற்சியில் இறங்கியுள்ள அவர், அண்மையில் இன்ஸ்டாகிராமில் தான் இளைத்திருப்பதை சில புகைப்படங்கள் மூலமாக மகிழ்ச்சியோடு தெரிவித்திருக்கிறார். எத்தனை நாளில், எத்தனை கிலோ எடை குறைத்திருக்கிறார் என்றெல்லாம் சொல்லாவிட்டாலும், ‘முயற்சி தொடர்கிறது’ என்று மட்டும் சொல்லி இருக்கிறார். அதெல்லாம் இருக்கட்டும். ரெண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக்கிட்டீங்களா? அதைச் சொல்லுங்க!

மனைவிக்கு சப்போர்ட்!

ஆனி ராஜா. இவர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்காரர். அண்மையில் கேரளா போலிஸ் குறித்த இவரது கமெண்ட், அங்கே ஆளும் கம்யூனிஸ்ட் கூட்டணியினர் மத்தியில் சர்ச்சையை ஏற்படுத்தி விட்டது. கேரளாவில் ஆளும் கூட்டணியில் இடம்பெற்றுள்ள சி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவரே மறுப்பு அறிக்கை வெளியிட வேண்டிய அளவுக்குக் கூட்டணிக்குள் பிரஷர்! அப்படி என்ன சொல்லிவிட் டார் அவர்? “கேரள போலிசுக்குள்ளே ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் கூட்டம் ஒன்று புகுந்துவிட்டது. அதனால்தான் கேரளாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் விரைந்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை”  என்று கடுமையான அறிக்கையை வெளியிட்டார். அதுதான் பிரச்னைக்குக் காரணம். கட்சி ஆனி ராஜாவைக் கண்டித்தாலும், அவருடைய கணவர் தன் மனைவியை விட்டுக்கொடுப்பாரா? மனைவிக்கு சப்போர்ட்டாக அறிக்கைவிட்ட மிஸ்டர். கணவர் யார் தெரியுமா? சி.பி.ஐ. கட்சியின் தேசியச் செயலாளரான  டி.ராஜாதான்! வீட்டுக்கார அம்மாவின் உத்தரவின் பேரில், கணவர் அறிக்கை விட்டிருப்பாரோ?

ஜாதிக்குள்ளே மோதல்!

 கர்நாடகாவில் ஆளும் பா.ஜ.க. தரப்பில் முதல்வர் நாற்காலியில் புதிய பொம்மையை உட்காரவைத்து பிரச்னைகளைச் சரி செய்யப்படுகிற அதே வேளையில் காங்கிரஸ் தரப்பிலும் சிக்கல்களுக்குப் பஞ்சமில்லை. கர்நாடக காங்கிரஸ் கட்சியில் ரொம்ப டாபிகலான விஷயம் மூத்த காங்கிரஸ் தலைவர்களான சித்தராமையாவுக்கும், டி.கே.சிவகுமாருக்கும் இடையிலான ஈகோ மோதல்தான்.

அவர்களுக்கு இடையிலான பிளவு, இப்போது அவர்களின் ஆதரவாளர்கள் மத்தியிலும் வெளிப்படுகிறது. அண்மையில் அந்த இரு தலைவர்களும் கலந்துகொண்ட ஒரு நிகழ்ச்சிக்கு வந்த சிவகுமார் ஆதரவாளர்கள், தங்கள் தலைவர்தான், ‘கர்நாடகாவின் ஒக்காலிக இனத்தவரின் ஒரே தலைவர்’ என பேனர்களைப் பிடித்துக் கொண்டு நின்று, சித்தராமையாவைக் கடுப்பேற்ற, சித்தராமையா அப்செட். கடைசியில், சிவகுமார், தன் ஆதரவாளர்களைப் பார்த்து, “கட்சிதான் முக்கியம்; கட்சியில் உள்ள தலைவர்கள் இரண்டாம் பட்சம்தான்!” என்று சொல்ல, கூட்டத்தில் சலசலப்பு சற்றே அடங்கியது! இந்த கமெண்ட் கர்நாடகாவுக்கு மட்டுமா? இல்லை அகில இந்தியாவுக்குமா மிஸ்டர் சிவகுமார்?

ஜாக்கிரதை! முதலமைச்சரின் ஜாதி!

 மத்தியப்பிரதேசத்தில் வனத்துறை அமைச்சராக இருப்பவர் விஜய் ஷா.  அவர் அண்மையில் ம.பி.யின் நரசிங்பூர் மாவட்டத்தில் ஒரு பள்ளிக்கூடத்துக்குப் போனபோது, ஒரு மாணவி, தனக்கு அரசாங்கத்தின் இலவச சைக்கிள் இன்னும் கிடைக்கவில்லை என்று புகார் சொல்ல, அமைச்சர், அந்தப் பெண்ணின் முழு பெயரையும் கேட்டார். உடனே, கூட வந்த தன் அதிகாரியிடம், “இந்தப் பெண்ணின் புகாரை உடனடியாகத் தீர்த்து வையுங்கள்! இவர், முதலமைச்சரின் ஜாதி!” என்று சிரித்துக்கொண்டே ஜோக்காய் சொல்ல, அந்த வீடியோ வைரல் ஆகிவிட்டது. நெட்டிசன்கள், அமைச்சரைப் போட்டுத்தாக்க, அமைச்சர் நொந்துவிட்டார்.

மந்திரியின் ‘மக்களில் ஒருவன்’ ஸ்டைல்

 மக்கள் ஆசி யாத்திரை என்ற பெயரில் அண்மையில் பா.ஜ.க. நாடெங்கும் யாத்திரை நடத்தியதல்லவா? ஆளும் கட்சி,  புதிய மத்திய அமைச்சர்கள் அனைவரும் தத்தம் மாநிலங்களில் நடக்கும் யாத்திரையில் பங்கேற்று, மக்களுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது. அதன்படி, சாகர் தொகுதிக்கு (ம.பி.) வந்தார் மத்திய அமைச்சரான விரேந்திர குமார் காதிக்.  இவர், யாத்திரையில் பங்கேற்க ஒரு பழைய சைக்கிளில் வந்தது கண்டு மக்களுக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை! காரணம், ஏழு முறை தேர்தலில் ஜெயித்திருக்கும் இவர் எளிமையான மனிதர் மட்டுமில்லை; ஒரு காலத்தில் சைக்கிள் கடை வைத்திருந்தவர் என்பதும் கவனிக்கத்தக்கது! பஞ்சர் ஆகாமல் மந்திரியின் அரசியல் பயணம் தொடருது போல!

Stay Connected

261,311FansLike
1,909FollowersFollow
8,370SubscribersSubscribe

Other Articles

லைஃப்பாய் சோப்

0
அது ஒரு கனாக்காலம் 9 ஒரு காலத்தில் லைஃப்பாய் சோப் இல்லாத வீடே இல்லை என்னும் நிலை இருந்தது! வட இந்தியாவில் சர்வ சாதாரணமாக கடைகளில் வந்து அடித்தட்டு மக்கள் “லால்வாலி சாபூன்” (லால்...

இன்பத்த தேன் வந்து பாயுதே

0
மகாகவி, தேசியக்கவி,  என்று பரவலாக  அறியப்பட்ட பாரதி கடுமையான இலக்கிய நடைகளை உடைத்து, பாமரனுக்கும் புரியும் வகையில் புதிய கவி நடைகளைப் படைத்தவன். ஆனால், பாரதியார் ஒரு கவிஞராக மட்டுமல்லாமல் எழுத்தாளர், பத்திரிகையாளர்,...

ஆலயமும் வித்தையும்

0
கோயில்களில் போதனை என்று சொன்னேன். இதைக் கொஞ்சம் எக்ஸ்ப்ளெய்ன் பண்ணவேண்டும்! ஏறக்குறைய ஆயிரம் வருஷத்துக்கு முந்தி பல்லவ, பாண்டியர்களுக்கு மேலாகப் பிற்காலச் சோழர்கள் எனப்படுபவர்களின் ஆதிக்கம் பரவிற்று. விஜயாலயன் என்பவன் இப்படி மறுபடி...

சட்டை

0
கடைசிப் பக்கம்  சுஜாதா தேசிகன் முழுக்கை, அரைக்கை என்று எந்தப் பாகுபாடும் இல்லாமல், நான் ஒரு சட்டை பைத்தியம். சினிமா ஹீரோ எப்படிப்பட்டவர் என்று ஆரம்பிக்கும் ஆரவாரமான முதல் காட்சி போல ஒரு சம்பவத்தைச் சொல்லுகிறேன். வேலைக்கு...

 செய்தி வசிப்பாளர்களின் தேர்தல் செய்தி

0
கோபாலகிருஷ்ணன் பல்வேறு தமிழ் செய்தி ஊடகங்களில் செய்தி வாசிப்பாளர்களாகப் பணி புரிந்த / பணிபுரியும்  செய்தியாளர்களின் நலனுக்காக கடந்த ஆறு ஆண்டு களாகத் தொடர்ந்து பாடுபட்டுக் கொண்டுவருகிறது தமிழ் செய்தி வாசிப்பாளர் கள் சங்கம்....