அமரர் கல்கி – என்ன சேதி?

செவிடன் காதில் …

சென்னை அட்வைஸரி கவர்ன்மெண்டார் நமது சென்னை மாகாணத்து விவசாயிகளிடம் பணம் ஏராளமாகக் குவிந்து வருவதை எப்படியோ தெரிந்துகொண்டு, விவசாய வருமான வரி என்பதாக ஒரு புது வரி போட உத்தேசித்திருக்கிறார்கள் அல்லவா? அதைப் பற்றி நாம் இத்தனை காலமும் அபிப்பிராயம் எழுதவில்லை. காரணம் என்னவென்றால், அப்படி எழுதும் அபிப்பிராயத்தை வீண் என்றும், அதற்காக செலவழியும் காகிதம், மை, அதைப் படிக்க நேயர்கள் செலவழிக்கும் நேரம் எல்லாம் விருதா என்பதாகவும் நாம் எண்ணியிருந்ததுதான். சென்னை அட்வைஸரி சர்க்கார் எப்போது தீர்மானித்துவிட்டார்களோ அது தீர்மானித்ததுதானே, நாம் சொல்லும் அபிப்பிராயம் எங்கே ஏறப் போகிறது!" என்று கருதினோம். ஆனால் சென்னை சர்க்கார் சென்ற வாரத்தில் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள். அதில், விவசாய வருமான வரியைப் பற்றி அபிப்பிராயம் சொல்கிறவர்கள் மே மாதம் 31உக்குள்சொல்லலாம் என்று தெரியப்படுத்தியிருக்கிறார்கள். எனவே, ஒருவேளை செவிடன் காதில் சங்கு ஏறினாலும் ஏறலாம் என்ற ஆசையுடன் நமது அபிப்பிராயத்தை இதோ சொல்லி வைக்கிறோம்.

சங்கை ஊதுகிறோம்!
விவசாய வருமான வரியைப் பற்றி நமது அடிப்படையான அபிப்பிராயம் என்னவென்றால்
(1) எல்லாவற்றுக்கும் முதலில், இம் மாகாணத்தில் இப்போதுள்ள நிலவரியை உடனே அடியோடு எடுத்து விட வேண்டும் என்பதுதான்.
முதலில் இதைச் செய்துவிட்டுத்தான் மற்றப்படி விவசாய வருமான வரியைப் பற்றி யோசிக்க வேண்டும்.
2. வருஷம் ஒன்றுக்கு ரூ.500க்குள் விவசாய வருமானம் உள்ள குடித்தனக்காரர்களுக்கெல்லாம் நிலவரி – விவசாய வரி – ஒன்றுமே விதிக்கக் கூடாது.
அதாவது ஒரு குடும்பத்துக்கு ஒரு வருஷத்துக்கு வேண்டிய உணவுப் பொருளைச் சர்க்காருக்கு வரி கொடுக்காமல் விளைவித்துக் கொள்ள விவசாயிகளுக்கு உரிமை வேண்டும்.
3. 500 ரூபாய்க்கு மேல் ஆயிரம் ரூபாய்க்குள் விவசாய வருமானம் உள்ளவர்களுக்கு இப்போது விதிக்கப்படும் நிலவரியில் பாதி விதிக்கப்பட வேண்டும்.
4. ஆயிரம் ரூபாய்க்கு மேலே விவசாய வருமானம் உள்ளவர்களுக்குப் படிப்படியாக உயர்த்திக்கொண்டு போய், ஐம்பதினாயிரத்துக்கு மேற்பட்ட வருமானங்களுக்கு முக்கால் பங்கு வரையில் வரி போட வேண்டும்.
இப்படி வரி வசூல் திட்டம் ஒருபுறமிருக்க, சென்ற வருஷத்தைவிட இந்த வருஷம் அதிகமாக விவசாயப் பொருள்கள் உற்பத்தி செய்கிறவர்களுக்கு சர்க்கார் கஜானாவிலிருந்து நன்கொடை அளிக்க வேண்டும்!
சின்னக் குடியானவன், பெரிய மிராசுதரர், நிலச்சுவான்தரர், ஜமீன்தார், – யாரா யிருந்தாலும் விவசாயத்தை விருத்தி செய்கிறவர்களைத் தேசத்துக்குப் பரம உபகாரம் செய்கிறவர்களாய்க் கருதி அவர்களைக் கௌரவப்படுத்த வேண்டும்.
இவைதான் நம் யோசனைகள். ஊதுகிற சங்கை ஊதியாகிவிட்டது! இனி மேல் சர்க்கார் பாடு, செவிடன் பாடு!
(27.5.1945 கல்கி தலையங்கத்திலிருந்து…)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com