என்ன சேதி?

என்ன சேதி?

அமரர் கல்கி

56

என்ன சேதி?

பிரிட்டிஷ் நியாயம்

என்னதான் சொல்லுங்கள்! பிரிட்டிஷ் நியாயம் என்னமோ நியாயம்தான்! மற்ற எந்த ஆட்சியிலும் இப்பேர்ப்பட்ட நியாயம் கிடையாது, நியாய விசாரணையும் கிடையாது! பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் ஒரு மனிதன் கொலையுண்டால், அதைப் பற்றி விசாரணை செய்து குற்றவாளியையோ, குற்றவாளிகளையோ கண்டுபிடித்தே தீர்வார்கள். கண்டுபிடித்தபின் சட்டப்படி சாங்கோ பாங்கமோ நியாய விசாரணை செய்வார்கள். நியாய விசாரணைக்குப் பிறகு தீர்ப்புக் கூறுவார்கள். குற்றம் ருசுவானால் மரண தண்டனையோ ஆயுள் தண்டனையோ அளிப்பார்கள். குற்றம் செய்தவன் பெரிய மனுஷனா, சின்ன மனுஷனா என்று பார்க்க மாட்டார்கள். அந்தஸ்தைக் கவனிக்க மாட்டார்கள். குற்றவாளி யாராயிருந்தாலும், பிரிட்டிஷ் நியாயம் நியாயந்தான்!

குற்றவாளிகள்

அப்படியிருக்க, ஒரு மனிதனுடைய சாவு விஷயத்திலேயே இவ்வளவு தடபுடல் என்றால், பதினைந்துலட்சம் பேரின் மரணத்தைப் பற்றிக் கேட்க வேண்டுமா? கொலையுண்டு இறந்த பதினைந்து லட்சம் பேரின் ஆவிகள் சுற்றிச் சுழன்று "நியாயம் எங்கே? நீதி எங்கே?" என்று கதறிக் கொண்டிருக்கும்போது, நியாயத்துக்கும் நீதிக்கும் பெயர்போன பிரிட்டிஷ் சர்க்கார் அதைப் பற்றி விசாரணை செய்யாமல் விடுவார்களா? விடவில்லை. வங்காளப் பஞ்சத்தில் செத்துப் போன பதினைந்து லட்சம் பேரின் மரணத்துக்கு ஜவாப்தாரி யார்? – என்று விசாரிப்பதற்கு இந்திய சர்க்கார் ஒரு கமிட்டியை நியமித்தார்கள். அந்தக் கமிட்டி, பூராவும் உத்தியோகஸ்தர்கள் அடங்கிய கமிட்டிதான். அதனால் என்ன? பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் நியாய விசாரணையில் கோளாறு ஏற்படுமா? ஏற்படாது. விசாரணை சரியான முறையில் நடந்து கமிட்டியாரின் தீர்ப்பும் வெளியாகிவிட்டது. மேற்படி பதினைந்து லட்சம் பேரின் மரணத்துக்குப் பொறுப்பாளிகள் யார் யார் என்று திட்டமாக வரையறுத்துச் சொல்லிவிட்டார்கள்:-

1 திறமையற்ற வங்காள சர்க்கார்.

2 முன் யோசனையில்லாத இந்திய அரசாங்கத்தார்.

3. பஞ்ச காலத்தில் கொள்ளை லாபம் அடிக்கப் பார்த்த சண்டாளப் பாதக முதலாளிகள்.

மேற்கூறிய மூன்று கூட்டத்தாரின் காரியங்களினால்தான் வங்காளத்தில் பஞ்சம் நேர்ந்து 15,00,000 பேர் சாகவும் நேர்ந்தது என்று இந்திய சர்க்கார் நியமித்த விசாரணைக் கமிட்டியார் தீர்ப்புக் கூறியிருக்கிறார்கள்.

தண்டனை என்ன?

தீர்ப்புக் கூறினார்களே தவிர, தண்டனை இன்னதன்று குறிப்பிடவில்லை. நீங்கள்தான் சொல்லுங்களேன், தண்டனை என்ன விதிக்கலாமென்று? பதினைந்து லட்சம் பேரின் மரணத்துக்கு உடந்தைக் குற்றவாளியான இந்திய சர்க்காருக்கு என்ன தண்டனை விதிக்கலாம்? சந்தேகம் என்ன? பதினைந்து லட்சம் தடவை தூக்குத் தண்டனை விதிக்க வேண்டியதுதான்! ஆனால், தண்டனையை நிறைவேற்றுவது யார்? விசாரணைக் கமிட்டியை அவர்களை நியமித்ததுபோல், தண்டனையையும் அவர்களை நிறைவேற்றிக் கொண்டால்தான் உண்டு! ஒருவேளை இதை உத்தேசித்துத்தான் வைஸராய் வேவல் துரை இங்கிலாந்துக்கப் போனாரோ, என்னமோ?

(13.5.1945 கல்கி தலையங்கத்திலிருந்து…)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com