கோகுலம் – குழந்தைகளின் குதூகலம் – 1983

கோகுலம் – குழந்தைகளின் குதூகலம் – 1983

திரு. சதாசிவம் – திருமதி எம்.எஸ். தம்பதி காஞ்சி மஹாசுவாமிகளிடம் மிகுந்த பக்தி கொண்டவர்கள் என்பது யாவரும் அறிந்ததே. அவர்கள் ஒரு முறை மஹா பெரியவாளை தரிசிக்கச் சென்றிருந்த சமயம், "இன்றைக்குப் பெரியவர்களுக்கென்று நிறைய பத்திரிகைகள் இருக்கின்றன. இன்றைய குழந்தைகள் தானே, இந்த தேசத்தின் நாளைய குடிமக்கள்! குழந்தைகளுக்கென்று பத்திரிகைகள் இல்லை. அவர்களுக்கென்று ஏதாவதுசெய்!" என்று உத்தரவிட்டார். அதற்குச் செயல் வடிவம் கொடுக்கும் வண்ணமாய், கல்கி நிறுவனத்திலிருந்து துவக்கப்பட்ட குழந்தைகள் பத்திரிகைதான் கோகுலம். குழந்தைகள் பத்திரிகை ஆரம்பிக்கத் தீர்மானித்ததும், சதாசிவம், "பத்திரிகைக்கு என்ன பெயர் வைக்கலாம்?" என்று ஆசிரியர் குழுவினரிடம் கேட்டார். அவர்களும் யோசித்துப் பல பெயர்களை எழுதிக் கொடுத்தார்கள். ஆனால், சதாசிவத்துக்கு அந்தப் பெயர்கள் எதுவும் திருப்தி அளிக்கவில்லை. அப்போது, "குழந்தைகள் பத்திரிகைக்கான பெயரைக் குழந்தைகளே சொல்லட்டும்!" என்றார். அதற்கான ஒரு போட்டியும் அறிவிக்கப்பட்டது. ஏராளமான வாசகர்கள் அந்தப் போட்டியில் பங்கேற்றனர். புதுப் பத்திரிகைக்குப் பல பெயர்கள் வந்து குவிந்தன. ஆசிரியர் குழுவினரது முதல் கட்டப் பரிசீலனைக்குப் பிறகு, இறுதிப் பட்டியல் சதாசிவம் முன் வைக்கப்பட்டது. அந்தப் பெயர்களிலிருந்து அவர் தேர்ந்தெடுத்ததுதான் கோகுலம்.

கல்கி பத்திரிகையின் சின்னமான வினாயகர் மடியில் குழந்தை கண்ணன் அமர்ந்திருக்கும்படியாக ஓர் அழகான சின்னத்தை கோகுலத்துக்காக உருவாக்கிக் கொடுத்தார் ஒவியர் கோபுலு. கோகுலத்தின் ஆரம்ப காலத்தில் 'வாண்டுமாமா' என்ற புனைபெயர் கொண்ட கௌசிகனின் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. அப்போது குழந்தைகள் பத்திரிகை என்றால் மாயாஜாலக் கதைகள் அதிகமாக இருக்கும். அந்த பாணியை முற்றிலுமாக மாற்றி, ஆன்மிகம் தொடங்கி, அறிவியல், சரித்திரம், பொது அறிவு, மூளைக்கு வேலை, புதிர்கள், விளையாட்டு என்று பல்வேறு விஷயங்களையும், குழந்தைகளுக்குப் புரியும் வண்ணம் மிகவும் எளிமையாக எழுதி, ஏராளமான வாசகர்களை வாண்டுமாமா உருவாக்கினார். திருமுருக கிருபானந்த வாரியார் கோகுலத்தில் குழந்தைகளுக்குப் பிடித்த பிள்ளையார் பற்றியும் (பிள்ளையார் பெருமை) கோகுலத்தில் வலம் வந்த பாலகிருஷ்ணன் பற்றியும் (கண்ணன் கனியமுது) தொடர்கள் எழுதி, கோகுலத்துக்குப் பெருமை சேர்த்தார்.

1977ல் ஓராண்டு கால இடைவெளிக்குப் பிறகு மீண்டும் கல்கி குழும பத்திரிகைகள் வெளிவந்த சமயம், 01-02-1983ஆம் ஆண்டு கோகுலம் இதழ் புனர்ஜென்மம் எடுத்தது. குழந்தைக் கவிஞர் அழ.வள்ளியப்பா கோகுலத்தின் கௌரவ ஆசிரியரானார். அவரது கவனிப்பில் கோகுலம் சிறுவர் இதழ் இன்னும் மெருகேறி கொழு கொழு என வளர்ந்தது…

கோகுலம் சிறுவர் சங்கம் அமைக்கப்பட்டு பல ஆயிரம் குழந்தை உறுப்பினர்கள் ஒன்று திரண்டார்கள். 2013 ஆம் ஆண்டு, தமிழ் மற்றும் ஆங்கில கோகுலம் இதழ்களின் வெள்ளி விழா கொண்டாட்டங்கள் வெகு விமரிசையாக நடந்தேறின.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com