கோடநாடு எஸ்டேட் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை! நீலகிரி ஆட்சியர் உத்தரவு!

கோடநாடு எஸ்டேட் பகுதியில் ட்ரோன்கள் பறக்க தடை! நீலகிரி ஆட்சியர் உத்தரவு!

தமிழக முன்னாள் முதல்வர் மறைந்த ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை மற்றும் கொள்ளை விவகாரம் தொடர்பான வழக்கு விசாரணை நடந்து வரும் நிலையில், கோட நாடு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளின் மேல் டிரோன்கள் பறக்க தடை விதித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசன்ட் திவ்யா உத்தரவிட்டுள்ளார்.

கோட நாடு தொடர்பான வழக்கை விசாரிக்க தனிப்படை போலீசார் கேரளா விரைந்துள்ளனர்.  கோடநாடு கொலை, கொள்ளை சம்பவத்தில் மூளையாக செயல்பட்டதாக கூறப்படும் கனகராஜ் மரணம் குறித்து 3 தனிப்படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் சயானின் மனைவி மற்றும் மகள் மரணம் குறித்து விசாரிக்க ஒரு தனிப்படை கேரளா விரைந்தது.

இந்நிலையில் கோடநாடு எஸ்டேட் பகுதியில் கடந்த சில தினங்களாக ட்ரோன்கள் பறப்பதாக சோலூர் மட்டம் காவல் நிலையத்தில் எஸ்டேட் கள ஆய்வாளர் ராமகிருஷ்ணன் புகார் அளித்தார்.

இந்த புகார் குறித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா கவனத்திற்கு செல்ல, கோடநாடு எஸ்டேட் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ட்ரோன்கள் பறப்பதற்கு ஏற்கனவே தடை உள்ள நிலையில் தடையை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

முன்னதாக ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட்டில், கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் 23-ம் தேதியன்று கொள்ளை சம்பவம் நடைபெற்றது. அதில் எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொல்லப்பட்டார். இந்தக் கொள்ளை சம்பவத்திற்குக் காரணமாக கருதப்பட்ட ஜெயலலிதாவின் முன்னாள் கார் ஓட்டுநர் கனகராஜ் சாலை விபத்தில் மரணம் அடைந்தார். இந்த வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் கோடநாடு கொலை மற்றும் கொள்ளை வழக்கை விசாரிக்க மேலும் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com