ரூ.100 க்கு ஆன்லைனில் தங்கநகை சேமிப்பு திட்டம்: பிரபல நகைக்கடைகள் புதுமை!

ரூ.100 க்கு ஆன்லைனில் தங்கநகை சேமிப்பு திட்டம்: பிரபல நகைக்கடைகள் புதுமை!

இந்தியாவில் நகைக்கடை விற்பனையாளர்கள் ஆன்லைனில் குறைந்த பட்சமாக 100 ரூபாய்க்கு தங்கநகை சேமிப்பு திட்டத்தை தொடங்கியுள்ளனர்.

இதுகுறித்து, 4,000-க்கும் மேற்பட்ட நகைக்கடைகளை பங்குதாரர்களாகக் கொண்ட ஆக்மாண்ட் கோல்ட் நிறுவனத்தின் இயக்குனர் கேதன் கோத்தாரி கூறியதாவது:

நாடு தழுவிய கொரோனா ஊரடங்குக்கு பிறகு தங்க நகை விற்பனையில் சரிவு ஏற்பட்டது.அதை ஈடு செய்யும் வகையில் இந்த புதிய திட்டம் வழிவகுத்துள்ளது. அந்த வகையில்,டாடா குழுமத்தின் தனிஷ்க், கல்யாண் ஜூவல்லர்ஸ் இந்தியா, பிசி ஜுவல்லர் மற்றும் செங்கோ கோல்ட் அண்ட் டயமண்ட்ஸ் போன்ற தங்க நகை விற்பனையாளர்கள் தங்களுடைய அதிகாரப்பூர்வ வலைத்தளங்களில் நேரடியாகவோ அல்லது டிஜிட்டல் தங்க மேடைகளுடன் (digital gold platforms) டை-அப் மூலமாகவோ குறைந்தபட்சம் 100 ரூபாய்க்கு தங்கத்தை சேமிப்பதற்கான திட்டத்தைத் துவங்கியுள்ளனர். அதன்படி,தங்கம் வாங்க விரும்பும் நுகர்வோர் குறைந்தபட்சம் 1 கிராம் தங்கத்திற்கு ஈடான தொகையை இந்த நகைக்கடைகளின் ஆன்லைன் திட்டத்தில் முதலீடு செய்தவுடன், வாடிக்கையாளர்கள் விரும்பும் பட்சத்தில் அந்த 1 கிராம் தங்கம் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும்.

இந்தியாவில் டிஜிட்டல் தங்க விற்பனை புதியதல்ல.ஆனால் பாரம்பரிய நகைக்கடை விற்பனையாளர்கள் மட்டும் தங்கத்தை ஆன்லைனில் விற்பனை செய்வதிலிருந்து விலகி இருந்தனர். ஆனால், கொரோனாவுக்குப் பின் நிறைய நகைக்கடைக்காரர்களின் மனநிலை மாறியுள்லது. அவர்களூம் ஆன்லைனில் நகைகளை விற்பனை செய்வதில் முனைப்புடன் உள்ளனர். ஆகவேதான் இத்திட்டம் துவக்கப் பட்டுள்ளது.

-இவ்வாறு அவர் கூறினார்.

தங்கத்தின் தேவை உச்சத்தில் இருக்கும் பண்டிகை காலம் தொடங்கும் போதே நகைக்கடைக்காரர்கள் இந்த சலுகைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.இணையம் வழியாக வாங்குவதற்கு அதிகமான இந்தியர்கள் ஆர்வமாக இருப்பதால் டிஜிட்டல் கொள்முதல் அதிகரித்து வருகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com