0,00 INR

No products in the cart.

பற்றி எரியும் உக்ரைன்…பதறித் துடிக்கும் மாணவர்கள்!

– பேட்டி: பிரமோதா.

இந்தியப் பெற்றோர்கள் பலர் தங்கள் பிள்ளைகள் மருத்துவம் படிப்பதற்காக.. வயித்தை கட்டி..வாயை கட்டி சிறுக சிறுக சேமித்து வைத்த பணத்தில் உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் அனுப்பிவிட்டு, இப்போது தம் குழந்தைகள் உயிரோடு வந்து சேர்ந்தால் போதும் என்று பதறிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்தளவு உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும்  இடையிலான போர் தீவிரமடைந்திருக்கிறது. உக்ரைன் மீது மிகுந்த உக்கிரமான ஒரு தாக்குதலை தொடங்கியிருக்கிறது ரஷ்யா.. கடந்த வியாழக்கிழமை (பிப்ரவரி 24) தொடங்கிய போர், உக்ரைனின் ராணுவ நிலைகளை குறி வைத்து யுத்தம் என்று கூறி குடியிருப்புகள் மீதும் குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது ரஷ்ய படைகள்… ரஷ்ய.. உக்ரைன்..அதிபர்களுக்கிடையேயான இந்த ஈகோ யுத்தத்தில் குழந்தைகள் உள்பட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் பலியாகியிருப்பது நெஞ்சை உறைய வைக்கும் சோகம்.

ரஷ்ய.. உக்ரைன்.. சண்டையில்  இதற்கு சிறிதும் தொடர்பே இல்லாத இந்திய மாணவர்கள் சிக்கிக் கொண்டிருப்பது கொடூரமான உண்மை… உயிர் காக்கும் மருத்துவம் படிப்பதற்காக உக்ரைன் சென்றவர்கள். தங்கள் உயிரை காப்பாற்றிக் கொள்ள ஓடிக்கொண்டிருக்கின்றனர்..பதுங்கு குழிகளில் பதுங்கி. மெட்ரோ ரயில் நிலையம்.. சுரங்கம் என்று கிடைத்த இடத்தில் உயிரை காப்பாற்றிக் கொள்ள போராடிக் கொண்டிருக்கின்றனர். உணவு, தண்ணீருக்கும் தட்டுப்பாடு!

மாணவர்களுக்கு மரண பயத்தை காட்டியிருக்கிறது ரஷ்யா…

இந்திய மாணவர்களை அழைத்து வர சிறப்பு விமானங்களை இந்திய அரசு அனுப்பி வரும் நிலையில், பல மாண்வர்கள் நாடு திரும்பி பெற்றோர் வயிற்றில் பால்வார்த்தனர். ஆனால், இன்னும் நாடு திரும்ப முடியாத நிலையில் பல்வேற்று பகுதிகளில் ஏராளமான மாண்வர்கள் தவித்து வரும் நிலையில்தான் அந்த அதிர்ச்சி சம்பவம் நேர்ற் அரங்கேறியது..

கர்நாடக மாநிலத்தை சேர்ந்த நவீன் சேகரப்பா என்ற மாணவர் தன் நண்பருடன் பதுங்கு குழியை விட்டு வெளியேறி அருகிலுள்ள சுப்பர் மார்க்கெட்டுக்கு செலும்போது குண்டு வீச்சில் உயிரிழந்தார். அவரது நண்பர் படுகாயத்துடன் மீடகப் பட்டுள்ளார். இச்சம்பவம் மீதி இந்திய மாணவர்கள் மற்றும் பெற்றோரின் மொத்த நம்பிக்கையையும் தவிடு பொடியாக்கியுள்ளது.

இந்திய தூதரகத்தின் அறிவுரையின்படி உக்ரைனின் எல்லைப் பகுதிக்கு சென்ற்று அன்டை நாடுகள் வழியாக நாடு திரும்பலாம் என்றால், அங்கு குவியும் மாணவர்களை உக்ரைன் ராணுவம் அடித்து உதைப்பதாக கண்ணீர் மல்க வீடியோக்கள் வெளியிட்டிருப்பது மனதைப் பதறச் செய்கிறது.

 

‘’உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த அசுர தாக்குதல்.. அந்த நாட்டு மக்களின் கனவுகளை மட்டும் அல்ல..5ஆயிரம் தமிழக மாணவர்கள் உள்பட 20 ஆயிரம் இந்திய மாணவர்களின் மருத்துவ கனவுகளையும் தகர்க்கும் அபாயத்தை ஏற்படுத்தி உள்ளது.. ஏவுகணைகளும்…பீரங்கி குண்டுகளும் இடை விடாமல் தாக்கியபடியே இருக்க  உயிர் பயத்தில் தாயகம் திரும்ப காத்து கொண்டிருக்கின்றனர் இன்னும் பல மாணவர்கள்…பெற்றோரையும்..உறவினர்களையும் பார்ப்பது ஒரு புறம் மகிழ்ச்சி தந்தாலும்.. மறுபுறம்.. கல்வியை தொடர முடியுமா என்ற கவலையும் மனதை அரிக்கிறது’’ என்கிறார், உக்ரைனில் மருத்துவப் படிப்பை பாதியில் விட்டுவிட்டு இப்போது தாயகம் திரும்பிய செங்கல்பட்டு மாணவர்.

எல்லாம் சரி.. இந்திய மாணவர்கள் மருத்துவப் படிப்புக்காக உக்ரைன்.. ரஷ்யா என்று படையெடுப்பது ஏன்? இப்போது பாதியில் அனைத்தும் விட்டுவிட்டு ஊர் திரும்பிய மாணவர்களின் நிலை என்ன? என்று பல்வேற்று கேள்விகள் எழ, கல்வியாளர்கள்.. மாணவர்கள்.. மருத்துவ நிபுணர்களிடம்..கல்கி இணைய இதழுக்காக பேசினோம்..

வெளிநாடுகளுக்கு மருத்துவம் படிக்க செல்லும் மாணவர்கள் குறித்து விரிவாகப் பேசினார் கல்வியாளர் ஜெயபிரகாஷ் காந்தி.

‘’இந்தியாவில் மருத்துவம் பயில முதலில் நீட் என்ற பெருங்கடலை  தாண்ட வேண்டும்.. அதை கடக்க முடியாமல்.. ஆழம் தெரியாமல் அதில் மூழ்குபவர்கள் அதிகம்.. நீட்டில் தேர்ச்சி என்பது குதிரை கொம்பு.. பயிற்சி மையங்களுக்கே பல லட்சம் அழ வேண்டும். நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்கும் பட்சத்தில்.. சாமானியர்களால் சமாளிக்க முடியும்.. தனியார் கல்லூரிகள் என்றால் கோடிகளை வாரி இறைக்க வேண்டும்.. நடுத்தர வர்க்க மாணவர்களின் மருத்துவ கனவுகளுக்கு முதல் சறுக்கல் இதுதான். இங்கேதான் வலையை விரிக்கின்றனர். மருத்துவ கல்வி இடை தரகர்கள்… ரஷ்யா… உக்ரைன்.. பிலிப்பைன்ஸ்  போன்ற நாடுகளில் மருத்துவ படிப்புக்கான கட்டணம் குறைவு என்று கூறி பொறி வைப்பார்கள்.. ஒரு வகையில் பார்த்தால்.. இதில் உண்மை உண்டு.. இங்கு இந்தியாவில்.. ஓராண்டுக்கு ஆகும் செலவில்.. அங்கே மருத்துவ படிப்பை முடித்து விடலாம்’’ என்ற அவர், தொடர்ந்து பேசினார்.

 

‘’ இப்படி இடைத்தரகர்கள் மூலம் இந்நாடுகளுக்குப் படிக்க செல்லும் மாணவர்கள் படிப்பு முடித்து நாடு திரும்பும் வரை தரகர்களின் கண்ட்ரோலில் தான் இருக்க வேண்டும். உக்ரைனில் மட்டும் 70 ஆயிரம் மாணவர்கள் வெளிநாடுகளில் இருந்து மருத்துவம் படிக்கின்றனர்.. இதில் .20 ஆயிரம் பேர் இந்தியர்கள்.. உக்ரைன் மருத்துவ கல்வியை ஐரோப்பிய நாடுகள் ஏற்றுக்கொண்டிருப்பதும் உக்ரைன் குடியுரிமை கிடைப்பதும் ப்ளஸ் பாயின்டுகள். ஆனால், இந்த மாணவர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு படித்து வந்தாலும்.. இந்தியாவில் உடனடியாக மருத்துவர் ஆகி விட முடியாது.. இங்கு மருத்துவராக பதிவு செய்ய தகுதி தேர்வு எழுதியாக வேண்டும்.. இது நீட் தேர்வை விட  மிகவும் கடினமானது. இத்தேர்வு எழுதும் பத்து பேரில் இரண்டு பேர் மட்டுமே தேறுகிறார்கள்’’ என்ற உண்மையை பளிச்சென்று உடைக்கிறார்..பிரபல கல்வி ஆலோசகர் ஜெயபிரகாஷ் காந்தி.

இதற்குக் காரணம் என்ன?

‘’இதற்கு வரிசையாக பல காரணங்கள் உண்டு.. நம் இந்தியா வெப்ப நாடு..இங்கு தாக்கும் நோய்கள் வேறு வகை..உக்ரைன்.. ரஷ்யா போன்றவை குளிர் பிரதேச நாடுகள்.. அங்கு தாக்கும் நோய்கள் வேறு ரகம்.. அதை மட்டும் பிராக்டிகலில் கற்கும் மாணவர்கள், இங்கே வந்தால் திணறுகிறார்கள்..கற்கும் முறை வேறுபாட்டால்  பின்னடைவு ஏற்படுகிறது. மேலும் மருத்துவப் படிப்பானது நேரடியாக நோயாளிகளுடன் தொடர்பு கொண்டு கற்க வேண்டியது. அங்கு பாஷை புரியாமல், வெறும் ஏட்டுப் படிப்பாக என்ன கற்க முடியும்?.. இந்த மிகப்பெரும் உண்மை மறைக்கப்பட்டு..ஆண்டுதோறும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அங்கு அழைத்து செல்லப்படுகின்றனர்’’ என்ற கசப்பான நிஜத்தை புட்டு வைத்தார்.

இனி நிலமை சரியானாலும் மீண்டும் மாணவர்கள் மருத்துவப் படிப்புக்காக இந்நாடுகளுக்குச் செல்வது உசிதம்தானா?

‘’நிச்சயமாக இல்லை’’  என்கிறார், விழுப்புரத்தைச் சேர்ந்த குடல் அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர். ராஜமகேந்திரன்.

‘’ஏற்கனவே கொரோனா காரணமாக இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக உக்ரைன்.. ரஷ்யா.. சீனா போன்ற நாடுகளுக்கு சென்றுள்ள மாணவர்களுக்கு கல்வி தடைபட்டுள்ளது. இந்த  நிலையில் இந்த போர் மேலும் ஒரு  இடியாக வந்து இறங்கியுள்ளது. எப்படிப் பார்த்தாலும் நிலமை சரியாக முழுமையாக இந்நாடுகளில் மருத்துவ படிப்பை முடிக்கும் நிலை வர சுமார் 10 ஆண்டுகளாவது ஆகும். அதனால் இந்தியாவிலேயே ஒரு முறைக்கு இரு முறையாகவாவது நீட் தேர்வு எழுதி தகுதி பெற்று உள் நாட்டில் மருத்துவம் படிப்பதே சிறந்தது’’ என்கிறார் டாக்டர். ராஜமகேந்திரன்.

இந்நிலையில், உக்ரைனில் போர் சூழல் உருவானதை அடுத்து தாயகம் திரும்ப விருப்பம் தெரிவித்த மாணவர்களிடம் மொத்த பணத்தையும்   கொடுத்து விட்டு கிளம்புங்கள் என்று கறார் காட்டியுள்ளன பல கல்லூரி நிர்வாகங்கள். மேலும் அந்த நாடுகளின் வருவாயே இத்தகைய மாணவர்கள் தான் என்பதால, உக்ரைன் எல்லையில் மாணவர்கள்  நாடு திரும்புவதை தடுக்க..தாக்குதலை ஆரம்பித்துள்ளனது உக்ரைன் ராணூவம்.

அப்படியே நாடு திரும்பினாலும், இந்த மாணவர்களின் எதிர்காலம்?

இந்தியாவில் கல்வியை தொடரவும் வாய்ப்பு இல்லை. திரிசங்கு நிலையில் சிக்கி தவிக்கின்றனர் மாணவர்கள்.

இந்நிலையில் ‘’சிறிய வெளிநாடுகளுக்கு செல்வதை தவிர்த்து உள்நாட்டிலேயே மாணவர்கள் படிக்க வேண்டும்’’ என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார்.

மருத்துவர் ஆகும் கனவு பொசுங்கியுள்ள நிலையில் இம்மாண்வர்களுக்கான மாற்று திட்டங்களை மத்திய மாநில அரசுகள் யோசிக்குமா? பரிசீலிக்குமா என்று ஏக்கத்துடன் கேட்கின்றனர் பல பெற்றோர். காரணம் – உக்ரைனுக்கு குழந்தைகளை அனுப்பியுள்ளவர்கள்..அதானியும்..அம்பானியும் இல்லை.. சாதாரண நடுத்தர வர்க்க மக்கள் தான்.. காய்கறி விற்பவர்கள்.. வாட்ச்மேன் என்று வாழ்க்கையின் அடிநிலை மக்கள் தான்!

‘’இந்தியாவில் மருத்துவ படிப்பு வியாபாரம் ஆக்கப்பட்டுள்ளது ஆகையால் நம் மாணவர்கள் உயிரிழக்கின்றனர்’’ என்று உக்ரைனில் உயிரிழந்த மருத்துவ மாணவரான நவீன் சேகரப்பாவின் உறவினர் வைசல் கோபத்துடன் சொல்கிறார்.

‘’இந்தியாவில் மருத்துவம் படிக்க 2 கோடி கொடு..  3 கோடி கொடு என்று இங்கு கேட்கிறார்கள். அனைத்து சொத்தையும் விற்றால் கூட படிக்கவைக்க முடியவில்லை. அதேசமயம் உக்ரைன் மாதிரியான நாடுகளில் முப்பது லட்சம் ரூபாயில் படிக்க முடிகிறது அதனால் அங்கு அனுப்பி வைக்கிறோம். அங்கு பாதுகாப்பு இல்லை என்றால் என்ன செய்வது? இங்கேயே இந்திய அரசு குறைந்த விலையில் மருத்துவப் படிப்பை கொடுத்தால் மாண்வர்கள் ஏன் அங்கு செல்கிறார்கள்? இதுதொடர்பாக இந்திய ஊடகங்கள் அரசியல்வாதிகள் அனைவரும் ஒன்றாக சேர்ந்து இதற்கு ஒரு முடிவு தாருங்கள். இல்லையென்றால் நாங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சட்டமன்ற உறுப்பினர் பெயரைக் குறிப்பிட்டு கடிதம் எழுதிவிட்டு தூக்கில் தொங்குவதை தவிர வேறு வழி கிடையாது’’ என்று மனக்குமுறலுடன் சொல்லி முடித்தார் வைசல்.

இந்த விஷயத்தில் மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப் போகின்றன என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா: கமல்ஹாசனுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு!

0
-வீர ராகவன். பிரான்ஸ் நாட்டில் நேற்று (மே 17) கேன்ஸ் சர்வதேச திரைப்பட விழா கோலாகலமாகத் தொடங்கப்பட்டது. இதன் தொடக்க விழாவில் தமிழ்த் திரைத் துறை நட்சத்திரங்களான கமல்ஹாசன், மாதவன் மற்றும் இசைப்புயல் ஏஆர்...

குருவின் பல்லக்கு பவனி..வைபவத் திருநாள்!

0
-சக்தி சாமிநாதன். தருமபுர ஆதீனம் பட்டிணபிரவேச நிகழ்வில் பல்லக்கு தூக்குதலுக்கு தமிழக அரசு தடைவிதித்து, பின்னர் தடையை நீக்கி உத்தரவிட்டது. இச்சம்பவம்  இன்று, உலகம் முழுவதும் உள்ள ஆன்மீகவாதிகளிடம் பரபரப்பு ஏற்படுத்தியது.  சுமார் 15-ம் நுற்றாண்டிலிருந்து...

100 நாட்களுக்குப் பின் மகள் வந்தாள்; நடிகை பிரியங்கா சோப்ரா!

0
பாலிவுட் மட்டுமல்லாமல் ஹாலிவுட்டிலும் கோலோச்சும் நடிகை பிரியங்கா சோப்ரா, வாடகைத் தாய் மூலம் பெற்றெடுத்த தனது குழந்தையின் படத்தை முதன்முதலாக பகிர்ந்துள்ளார். நடிகை பிரியங்கா சோப்ராவும், அமெரிக்கப் பாடகர் நிக் ஜோனசும் கடந்த 5...

மகரிஷி சரக் சபத்; மருத்துவக் கல்லூரி மாணவர்கள் உறுதிமொழி சர்ச்சை!

0
- சவுமியா சந்திரசேகரன். மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் வெள்ளை அங்கி அணிந்து  ‘சரக் சபத்’ உறுதிமொழி ஏற்றதாக சர்ச்சை ஏற்பட்டது. அதை தொடர்ந்து ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியிலும் இதே உறுதிமொழி எடுக்கப்பட்டதாக செய்திகள்...

பீஸ்ட்டில் நடித்தது கனவு மாதிரி இருக்கு: சுஜாதா பாபு!

0
-பிரமோதா. பீஸ்ட் படத்தில் நடிகை அபர்ணா தாஸின் அம்மாவாக நடித்தவரைப் பார்க்கும்போது, ‘அட..இவரை எங்கேயோ பார்த்திருக்கிறோமே.’ என்று பலருக்கும் தோன்றியிருக்கும். அடுத்த நிமிடமே  ‘சன் டிவி நியூஸ் ரீடராச்சே இவங்க..’ என்று பொறி தட்டியிருக்கும்..யெஸ்..சன்...