ரஷ்ய நிறுவனங்களுடன் பணபரிவா்த்தனை நிறுத்தம்; எஸ்பிஐ வங்கி!

ரஷ்ய நிறுவனங்களுடன் பணபரிவா்த்தனை நிறுத்தம்; எஸ்பிஐ வங்கி!

இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ), ரஷ்ய நிறுவனங்களுடனான பரிவா்த்தனைகளை நிறுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது.

உக்ரைனில் ராணுவ தாக்குதல் நடத்தி வரும் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பியா உள்ளிட்ட உலக நாடுகள் பொருளாதாரத் தடைகளை அறிவித்து வருகின்றன. அதன் அடிப்படையில், பாரத ஸ்டேட் வங்கியும் ரஷ்ய நிறுவனங்களுடனான பரிவா்த்தனைகளை நிறுத்தியுள்ளது.

இதுதொடா்பாக, அந்த வங்கி அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் குறிப்பிட்டதாவது:

அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஐக்கிய நாடுகள் சபையின் தடைப்பட்டியலில் இடம்பெற்றுள்ள நிறுவனங்கள், வங்கிகள், துறைமுகங்கள் அல்லது கப்பல் நிறுவனங்கள் ஆகியவற்றுடன் எஸ்பிஐ வங்கிக் கிளைகள் பரிவா்த்தனைகளை மேற்கொள்ள கூடாது. அத்தகைய நிறுவனங்களுக்கு தரப்பட வேண்டிய நிலுவைத் தொகையை வங்கி மூலம் அல்லாமல் இதர வழிமுறைகளில் அளிக்க வேண்டும்.

-இவ்வாறு எஸ்பிஐ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இதுதொடா்பான மின்னஞ்சல் கேள்விகளுக்கு எஸ்பிஐ வங்கியின் தரப்பிலிருந்து நேரடியாக எந்த பதிலும் அளிக்கப்படவில்லை.. ரஷ்யாவுடன் இணைந்து தலைநகா் மாஸ்கோவில் கமா்ஷியல் இந்தோ வங்கி என்ற பெயரில் எஸ்பிஐ செயல்பட்டு வருகிறது. 40 சதவீத பங்குகளுடன் கனரா வங்கி மற்றொரு பங்குதாரராக உள்ளது. சா்வதேச நிதி ஆலோசனை நிறுவனமான மூடிஸ் மற்றும் ஃபிட்ச் நிறுவனங்கள் ரஷ்யாவின் தரமதிப்பீட்டை குறைத்துள்ள நிலையில்  ரஷ்ய அரசின் கடன்பத்திரங்களில் முதலீடு செய்வது ஆபத்து நிறைந்தது என தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆகவே எஸ்பிஐ வங்கி இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com