செங்கல்பட்டு அரசு மருத்துவமனை மகப்பேறு வார்டு அருகில் இன்று மேற்கொள்ளப்பட்ட வெல்டிங் பணியின் போது தீப்பொறி விழுந்து ஆக்சிஜன் குழாய்களில் தீப்பற்றியது. இதையடுத்து மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த கர்ப்பிணி பெண்கள் மற்றும் கைக்குழந்தைகளுடன் தாய்மார்கள் அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர்.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒருங்கிணைந்த மகப்பேறு மருத்துவ பிரிவில் பிரசவ வார்டு இயங்கி வருகிறது. இந்நிலையில், பெண்களுக்கான மகப்பேறு மருத்துவ பிரிவுக்கான புதிய கட்டைடத்தில் குளிர்சாதன வசதிக்காக வெல்டிங் வேலைகள் நடைபெற்று வருகிறது. அப்போது வெல்டிங் வேலையின் போது எதிர்பாராத விதமாக ஆக்சிஜன் குழாய் மீது தீப்பொறி பட்டவுடன் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியது.இதனால், அருகில் மகப்பேறு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள் அலறி அடித்துக்கொண்டு வெளியே ஓடினர்.
தகவலறிந்து, செங்கல்பட்டு தீயணைப்பு நிலைய வீரர்கள் வருவதற்குள், மருத்துவமனை ஊழியர்களே தீயை அணைத்தனர். இதனால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டதுடன் மனிதர்கள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.
தீ விபத்து குறித்து, வழக்குப் பதிவு செய்து தீயணைப்பு போலீசார் மற்றும் செங்கல்பட்டு டவுன் போலீசார் விசாரித்து வருக்ன்ற்னர். இச்சம்பவத்தால் மருத்துவமனை வளாகம் சிறிது நேரம் பரபரப்புடன் காணப்பட்டது.