0,00 INR

No products in the cart.

கொக்கி

சிறுகதை                                                                         ஓவியம் : தமிழ்

– ஹெச்.என்.ஹரிஹரன்

‘படக்’ என்ற சப்தம் அவ்வளவு பலமாக கேட்கவில்லைதான்… ஆனாலும் மகேந்திரன் இயந்திரகதியில் எழுந்து அமர்ந்தான். கால்களை மடக்கிக் கொண்டு எழுந்ததில், தரையில் விரித்திருந்த பாயும் பெட்ஷீட்டும் கால்களோடு சுருட்டின மாதிரி உருண்டு வந்தது. அமர்ந்த நிலையிலேயே இடுப்பில் நெகிழ்ந்திருந்த லுங்கியை இறுக கட்டிக்கொண்டான்.

பத்து ஒண்டுக்குடித்தனங்களை உள்ளடக்கிய பாரதி ஸ்டோரில்,  ரயில் பெட்டிகளைப் போல, வரிசையாகக் கட்டி இலக்கமிடப்பட்ட வீடுகள். அவனது வீட்டு எண் ஐந்து. ஒரு நீண்ட தாழ்வாரம் – வரிசையாய் வீடுகள். வீடு என்றால், ஒரு சமையலறை மற்றும் ஒரு ஹால். பகலில் ஹால், இரவில் அதுவே படுக்கையறை. குளியலறைகள், கழிவறைகள் – அனைவருக்கும் பொது. ரயிலுக்கு கார்டு வேன் மாதிரி, கட்டிடத்திற்குள் நுழைந்தவுடன் வீட்டு ஓனருக்கென்று ஒரு சிறிய அறை.  அவருக்கு ஒரு ஆபீஸ் மாதிரி.  ஒரு பழைய காலத்து டிவியை வைத்துக் கொண்டு,  வரும்போதெல்லாம், டிவி உச்சஸ்தாயில் அலற ,  எதையாவது  பார்த்துக் கொண்டிருப்பார். அறையின் தரை முழுக்க , கட்டிடத்தின் அவசர ரிப்பேருக்குத் தேவையான சாமான்கள் இறைந்து கிடக்கும்.

கண்களில் தேங்கியிருந்த எரிச்சலுடன் ஜன்னல் கதவை நோக்கினான். அவனை எழுப்பிவிட்ட அந்த படக் சத்தம் அங்கிருந்துதான் வருகிறது என்று அவனுக்கு தெரியும். ஆனாலும் அந்த மெல்லிய ஒலியினால் மட்டும் அவனது தூக்கம் கலையவில்லை.

பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய வீடு என்பதால், காற்று வசதிக்காக, அறை ஜன்னல், தாழ்வாரத்தில் நடப்பவர்களின் முழங்கால் உயரத்தில் தொடங்கி  நாலடி உயரத்தில் அமைந்திருக்கும். முழுக்க மரத்தால் செய்யப்பட்ட  நான்கு இறக்கை கதவுகளைக் கொண்ட ஜன்னல். ஆனாலும் என்ன ? அவனது ஒரு ஜன்னல் கதவின் கொக்கி ஒன்று இல்லாமல் அவனது நிம்மதியையும் , தூக்கத்தையும் கெடுத்து கொண்டிருந்தது.

வீடு பார்க்க வந்தபோதே மகேந்திரன் கவனித்து சொல்லிவிட்டான். அப்போது ஓனர், “ஜன்னல் கொக்கிதானே… பத்துரூவா சமாச்சாரம்… பண்ணிரலாம்” என்று அலட்சியமாக நம்பிக்கையுடன் சொன்னதைக் கேட்டு அவரிடம் வீட்டு அட்வான்ஸைக் கொடுத்தான். அதைத் தவிர, குறைவான வாடகையில் வேறு வீடும் அவனுக்கு கிடைக்கவில்லை. அந்தப் பகுதியில் கிடைக்கவும் கிடைக்காது.

அப்போது அவனுக்கு கல்யாணமான புதிது.  கிரியா ஊக்கிகள் இல்லாமலே எழும் வெட்கமற்ற ஆசைகளுக்கு அணை போடுவது நடக்கிற காரியமா என்ன? ஆனால், தணிக்கையற்ற ஜன்னல் காட்சிகளுக்கு தடை போடவேண்டுமே.  கதவை இழுத்துச் சாத்தும்படியாக கம்பியொன்றை எடுத்துக் கட்டிவிட்டுத்தான் மறுவேலை பார்த்தான்.

என்னதான் இழுத்துக் கட்டினாலும் அவசர தபால்காரர் அவனுக்கு வருகிற கடிதங்களை ஜன்னல் இடுக்கு வழியாக உள்ளே சொருகிவிட்டுச் செல்வதை ‘வசதியாக இருக்கு’ என்றபடி அதையே வழக்கமாக்கி கொண்டிருந்தார்.

சில மாதங்கள்தான் ஆகியிருக்கும். பகல்நேரப் புழுக்கத்திற்கு அவன் இல்லாத நேரத்தில் அவனது மனைவி தேவி அந்த  ஜன்னல் கதவைத் திறந்து வைத்திருக்கிறாள்.  அதன் வழியாக அவனது தீபாவளி புது சட்டையை எவனோ ஒருத்தன் திருடிக் கொண்டு போனதை சாயங்காலம்தான் கவனித்திருக்கிறாள். பண்டிகை தினங்களுக்கு மட்டுமே  துணிமணி வாங்கமுடிகிற வசதிதான் அவனுக்கு. சட்டை திருடு போனதை அழுது கொண்டே சொன்னவளை  எப்படி அவனால் திட்டமுடியும்?

ஆனாலும் புழுக்கத்தைச் சமாளிக்க, கம்பியை எடுத்துவிட்டு, ஒரு சணல்கயிற்றினால் ஜன்னல் கதவை சற்றே தளர்வாகக் கட்டி வைத்தான். கயிறு இறுக்கமின்றி இருந்ததினால் கதவு காற்றோட்டத்திற்கேற்ப மரச்சட்டத்துடன் மோதி தாளக்கச்சேரி  நடத்தியது.  வீட்டிற்குள் மின்விசிறியைச் சுழலவிடும்போதெல்லாம்  காற்றின் அழுத்தத்தில்  ஜன்னல் கதவு சற்றே வெளிப்புறமாக விலகி, தாழ்வாரத்தில் நிகழும் சலனங்களையும் பார்க்க முடிந்தது.

ஆனால் அதுவே விவகாரமானது  என்று அறிய வெகுநாட்கள் பிடிக்கவில்லை அவனுக்கு.

ஒரு நாள் இரவு சற்று தாமதமாக ஆபிசிலிருந்து திரும்பி ஸ்டோருக்குள் நுழைந்தவனை எதிர்பாராமல் பார்த்த  நான்காம் வீட்டு விடலைப் பையன்   திடுக்கிட்டுப் போய், என்ன செய்வதென்றறியாமல் ஒரு வணக்கத்தைப் போட்டுவிட்டு ஓடிப் போனான். ‘ஏதோ தப்பாக இருக்கே?’ என்று  காரணம் அறியாமல் யோசித்தபடி நின்று கொண்டிருந்தவன் மீது அவன் வீட்டு ஜன்னல் கதவிடுக்கு வழியாக வெளிவந்த ஒரு வெளிச்சக்கோடு  அவனை இரண்டாகப் பிளப்பது போல் படிந்தது. அது ஏதோ ஒன்றை அவனுக்கு உணர்த்த, ஜன்னல் கதவை மெலிதாகத் தள்ளினான். விரற்கடை அளவிற்கு அது வழிவிட்டதில், உள்ளே அவனது மனைவி தேவி மேலாடையைத் தளர்த்திய நிலையில் முதுகைக் காட்டியபடி அமர்ந்து கொண்டிருந்தாள். அவனது குழந்தை பாலருந்தும் நேரம்.

அன்றிலிருந்து, தன்னுடைய வீடு பயாஸ்கோப்பு பெட்டியாகவும், யாரோ ஜன்னல் இடுக்கு வழியாக பார்த்துக் கொண்டிருப்பது போலவும் ஒரு பிரமை நிழலாய் அவனது எண்ணங்களில் படிய ஆரம்பித்தது.

அன்றிரவே படுப்பதற்கு முன் , தினத்தந்தி பேப்பர் ஒன்றை முழுவதுமாக விரித்து அதன் நான்கு விளிம்பிலும் சோத்துப் பசையைத் தடவி ஜன்னலின் கீழ்புறம் முழுக்க ஒட்டி முடித்துத்தான் தூங்கப் போனான். அவனது செய்கைக்கு தேவிக்கு விளக்கம் கொடுக்க வேண்டியதாயிற்று.

“அதுக்கு பேப்பரை ஏன் தலைகீழாக ஒட்டி வைக்கிறீங்க?” என்று கேட்டாள்.

“நேரா ஒட்டி வெச்சா இதுதான் சாக்குன்னு எவனாவது இடுக்கு வழியா நியூஸ் படிக்கிறேன்னு வேடிக்கை பார்க்கறதுக்கா?” என்று அவன் எரிச்சலுடன் சொன்ன பதிலைக் கேட்டு வெகு நேரம் சிரித்துக் கொண்டிருந்தாள்.

வீட்டிற்கு குடி வந்த நாளிலிருந்து ஓனரிடம்  சொல்லிக் கொண்டுதான் இருக்கிறான். வாடகைப் பணம் கேட்கும் நேரத்தில்தான் ஓனரையே பார்க்க முடியும். மாதம் பிறந்தால் சரியாக ஆறாம் தேதி வந்துவிடுவார். காடாத் துணியில் ஒரு வேட்டி. அதே துணியில் ஒரு சட்டை. காமராஜர் காலத்தியது.  ‘பணம் பட்டு வாடா சட்டை’. இடதுபக்கத்தில் ஒரு பெரிய சட்டைப்பை. பணம் வைத்து வைத்து கை பட்டு அதன் வாய்ப்பக்கம் அழுக்கு படிந்திருக்கும்.  வாடகை கொடுக்கும் நேரத்தின் போது சொன்னால் கூட “நீயெல்லாம் கொடுக்கிற வாடகைக்கு இதெல்லாம் நான் செய்யவேண்டுமா?” என்பது போல்  கொடுக்கும் பணத்தை எண்ணிக்கூடப் பார்க்காமல் சட்டைப் பையில் அடைத்துக் கொண்டு நடக்கிறவரிடம் எத்தனை தடவைதான் அவனும் கேட்பது?

“டவுனுக்கு அனுப்பி தேடச் சொல்கிறேன்…”

“டவுனுக்குப் போகவே நேரமில்லை இந்த மாசம்…”

“பித்தளைக் கொக்கி இப்ப வரதில்லையாம்… கேட்டு சொல்கிறேன்னு கடை பாய் சொல்லி இருக்காரு…” என்றபடி சில  சமயம் வார்த்தைகள் எந்த ஒரு பிரயோசனமுமின்றி வாயிலிருந்து உதிரும்.

வீட்டு ஓனரிடம் சொல்லி அலுத்துப்போய்விட்டது. கக்கூசில் லைட் எரியவில்லையென்றால், உள்ளே கும்மிருட்டாக இருக்கும். பிளாஸ்டிக் கப்பை வைத்திருக்கும் கை இங்கே, கழுவ வேண்டிய இடமெங்கே என்று தேடவைக்கும் இருட்டு. அந்த பல்பை மாட்டுவதற்கே இரண்டு நாட்களாகும் அவருக்கு. ‘ரொம்ப அவசரமென்றால் , தாழ்வாரத்திலிருக்கிற பல்பைக் கழட்டி போடுங்க. நான்  வேண்டாம்னு சொல்லலியே.’ என்று சர்வசாதாரணமாகச் சொல்லுவார். இருள் கவிந்த தாழ்வாரத்தில் யாராலும்   நடக்க முடியாது என்று அவருக்கு தெரிந்தே இருக்கும்.

பழகிய வேலையாட்களைத் தவிர யாரையும் நம்பமாட்டார். மோட்டார் ரிப்பேர் என்றாலும், அதற்குரிய ஆஸ்தான பிளம்பர் வரும்வரை காத்திருக்க வேண்டியதே. அப்படிக் குளிக்க வேண்டுமெனில் வாசலில் இருக்கும் அடிபம்பில் தண்ணீர் வருதே என்பார். அவ்வளவு பெரிய ஊரில், குறைந்த வாடகைக்கு ஒரு வீடு கிடைத்திருக்கிறது என்பதனால் அவரைப் பகைத்துக் கொள்ளவும் முடியாது. ஏதாவது அதிகம் பேசிவிட்டால், நெற்றிப் பொட்டைத் தேய்த்தபடி, “ஆமா. என்ன வாடகை கொடுக்கிறீங்க?” என்று ஏதோ மறந்துவிட்டவர் போல் கேட்பார்.  அப்புறம் என்ன?  ஆம்பிளைகள் எல்லோரும் மேற்கொண்டு பேசாமல் இடுப்பில் துண்டுடன் , பக்கெட் , சோப்பு சகிதம் கிளம்பி வாசலில் குளித்துவிட்டு , மறக்காமல் வீட்டுப் பெண்பிள்ளைகளுக்கு தண்ணீர் பிடித்துக் கொண்டு வருவார்கள்.

ஜன்னல் கொக்கியின் விலை பத்து இருபது ரூபாய் கூட இருக்காது. ஆனால் தான் ஏன் வாங்கவேண்டும் என்கிற வீராப்பு மகேந்திரனுக்கு.. அதுபோல “குறைந்த வாடகைக்கு வீட்டைக் கொடுத்திருக்கிறேன்… வாங்கிப் போட்டால்தான் என்ன?” என்று நினைப்பு ஓனருக்கும் இருந்திருக்கலாம். அவனுக்கு பிடிபடவில்லை.

அன்றிரவு சாப்பாட்டிற்கு உட்காரும்போதுதான் மகேந்திரன் தன் மகனைக் கவனித்தான். அழுது அழுது வீங்கிய முகத்துடன் அமர்ந்திருந்தான் இனியன்.

“தேவி.. என்னாச்சு இவனுக்கு… ரொம்ப அழுத மாதிரி தெரியுதே.. அடிச்சியா?” என்றான்.

“அட… நீங்க வேற.. அவரோட பிரெண்டு வீட்டைக் காலி பண்ணி சொந்த ஊருக்குப் போயிட்டாங்களாம்..” என்றான்.

“யாரு?”

“அதான் ஏழாம் வீட்டுல இருக்காங்களே… இனியன் வயசுல. அவங்க வீட்டுலகூட ஒரு பையன்…”

சற்று யோசித்துவிட்டு, “ஓ அவங்களா..  வீட்டைக் காலி பண்ணப்போறேன்னு சொல்லவே இல்லியே…” என்றான்.

“அவங்களுக்கு என்ன பிரச்சனையோ … யாருக்குத் தெரியும்?” என்றாள் தேவி.

சட்டென்று மகேந்திரனுக்கு தன்னுடன் வேலை செய்யும் சக ஊழியர் சுரேஷ்  வீடு வாடகைக்கு கேட்டிருந்தது ஞாபகத்திற்கு வந்தது. வசதிகள் குறைவாக இருந்தாலும்,குறைந்த வாடகை என்பதனால் கட்டாயம் போட்டி இருக்கும். மறுநாள் காலையில் வரும்படி சுரேஷிற்கு  குறுஞ்செய்தி ஒன்றை அனுப்பிவைத்தான்.

விடிந்ததும் விடியாததுமாய் சுரேஷ் வீட்டுக் கதவைத் தட்டிவிட்டான்.

காலியான வீட்டைப் பார்ப்பதற்கு வசதியாக அதன் சாவியை மூன்றாம் வீட்டில் கொடுத்து வைத்திருக்கிறார்கள் என்ற செய்தியை தேவி ஏற்கெனவே அவனிடம் சொல்லி வைத்திருந்தாள். அவர்களிடம் போய் சாவியை வாங்கிக் கொண்டான்.

“மகேந்திரன் சார்… உங்க வீட்டுக்கு  வந்திருக்கிறேன். அதே மாதிரித்தான் இங்க இருக்கிற எல்லா வீடுகளும்னு தெரியும்… வீட்டைச் சுத்தம் பண்ணிட்டா குடி வந்துரவேண்டியதுதான். ஓனர் கிட்ட சம்மதம் சொல்லிடுங்க… பார்க்கணும்னு அவசியமில்லை” என்றான் சுரேஷ்.

“அவசரப்படாதீங்க சுரேஷ்… இந்த ஓனர் எதுவும் செஞ்சு கொடுக்க மாட்டாரு… ஏதாவது கம்ப்ளெயிண்ட் இருக்கான்னு எல்லாத்தையும் ஒரு தடவை பார்த்து செக் பண்ணிட்டு போங்க… நான் கஷ்டப்பட்டுக்கிட்டு இருக்கேன். அதனால சொல்றேன்”  என்று  அவனை இழுத்துக் கொண்டு போனான் மகேந்திரன்.

காலி வீட்டினுள் நுழைந்தனர். வீட்டைக் காலி செய்து போவதற்குமுன்னர், வேண்டாதவற்றை எல்லாம் குப்பைகளாக விட்டுப் போயிருந்தனர். சுத்தம் செய்துவைத்து விட்டுப் போகக்கூடாது என்று ஒரு மூட நம்பிக்கை. ‘ எல்லாம் துடைத்துக்கொண்டு போய்விடும்’ என்று சொல்வார்களாம்!

சுரேஷ் அவற்றை ஒரு நோக்கு விட்டான். “நாந்தான் சொன்னேனே சார்… எனக்கு ஓக்கே” என்றான்.

“சுரேஷ்… ஒரு தடவை நல்லா செக் பண்ணுங்க… லைட் எரியுதா… பேன் ஓடுதான்னு பாத்து இப்பவே சொன்னாத்தான் உண்டு… குடி வந்துட்டா அப்புறம் எல்லாம் உங்க பொறுப்பு” என்றான் மகேந்திரன்.

மகேந்திரன் ஹாலில் காத்திருக்க, சுரேஷ் அனைத்தையும் பார்த்துவிட்டு வந்தான்.

“எல்லாம் சரியாத்தான் இருக்கு சார்…” என்ற திருப்தியுடன் வந்தான் சுரேஷ்.

“என்னத்தைப் பாத்தீங்களோ சரியா… இதோ இங்கே பாருங்க…” என்றபடி அறை ஜன்னல் கதவைக் காட்டினான்.

“இங்க ஒரு கொக்கியைக் காணோம்… அவர் கிட்ட வாடகை முன்பணம் கொடுக்கும் போது மறக்காம  வாங்கிப் போடச் சொல்லிடுங்க… என்ன? ” என்றான்.

கட்டாயம் சொல்லிவிடுவதாக சுரேஷ் தலையை ஆட்டினான்.

“உங்க ஹெல்பிற்கு ரொம்ப தேங்க்ஸ் சார்… ஓனர்கிட்டே நான் எடுத்துக்கிறேன்னு சொல்லிடுங்க… இன்னிக்கு சாயங்காலமே அட்வான்ஸ் குடுத்திடறேன்…” என்றபடி புறப்பட்டான்.

வாசல் வரை சென்று அவனை வழியனுப்பிவிட்டுத் திரும்பினான் மகேந்திரன்.

சில நிமிடங்களுக்கு முன்னர் அந்த வீட்டு ஜன்னலில் இருந்து கழற்றிய கொக்கி அவனது சட்டைப்பையில் நெஞ்சை நெருடிக் கொண்டிருந்தது.

‘பத்து ரூவா சமாச்சாரமெல்லாம் ஒரு திருட்டா என்ன?’ என்று தன்னையே சமாதானப்படுத்திக் கொண்டு  தன் வீட்டிற்குள் நுழைந்தான்.

 

Stay Connected

261,699FansLike
1,912FollowersFollow
7,330SubscribersSubscribe

Other Articles

“கண்ணான கண்ணே!”

3
“அப்பா! இந்த வயசுல உங்களுக்கு இவ்வளவு பிடிவாதம் ஆகாதுப்பா! கிளிப்பிள்ளை மாதிரி சொன்னதையே திரும்பத் திரும்ப சொல்லிக்கிட்டு இருக்கேள். இதனால ஒங்களுக்கு மட்டும் கஷ்டமில்லப்பா! உங்க ஒருத்தரால, வீட்டுல இருக்கிற எல்லாரும் அவதிப்படணுமா?...

சூது கவ்வும்

1
திலிபனுக்கு அவசரமாக பணம் தேவையாயிருந்தது. அதிக பணம்... நைட் டூட்டி முடிந்து, கண்ணெரிச்சலுடன் ரூமுக்கு வந்து படுத்தவனை செல்போனில் கூப்பிட்டு எழுப்பியது தயாளன்தான். இந்த முறை வழக்கத்தைவிட பேச்சில் வந்து விழுந்த...

வெயிட் பண்ணுங்க

இன்று பருவதம் ஆச்சியின் பேரனுக்குப் பிறந்தநாள். வியாபாரத்திற்கு விடுப்பு கொடுத்துவிட்டு நாள் முழுவதும் பேரனோடு செலவிட ஆச்சிக்கு ஆசைதான். வயிற்றுப்பிழைப்பு இருக்கிறதே. “சிறுக் கீரை, முளைக் கீரை, முருங்கக் கீரை, பொன்னாங்கன்னிக் கீரை, அகத்திக்...

ஒரு சந்திப்பு

0
“நீ தானா அது?” என்றார் சுகவனம் நேரடித் தாக்குதலாக. எதிரிலிருந்த விஸ்வா ஒரு நொடி திணறினான். “சார்..” உதடு பிதுக்கி தலையாட்டினார். “ம்... உன்னை எதிர்பார்த்துத் தான் இந்த பூங்கா வாசலிலேயே...” பேசிக் கொண்டே அவனைப் பார்வையாலேயே...

நடத்தையில் ஊனம்!

2
  “நமக்கு புது மேலதிகாரியாக கோட்டேஸ்வர ராவு வரப்போகிறார், சார்!” என்றான் ரிகார்டு அசிஸ்டென்ட் நித்யானந்தம், சீனியர் அசிஸ்டென்ட் சிந்தாமணியிடம். தான் நெய்த வலையில் வந்து விழும் உயிரினத்தைப் பார்த்து மகிழும் சிலந்திப் பூச்சியைப் போல...