தலையங்கம்
“தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறையால் புதிதாக 10 கல்லூரிகள் தொடங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கெனவே ஐந்து கல்லூரிகளும் ஒரு தொழில்நுட்பக் கல்லூரியும் நடத்தப்பட்டுவரும் நிலையில் இந்தப் புதிய கல்லூரிகளுக்கான அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியைத் தந்தது.
முதற்கட்டமாக, சென்னை கொளத்தூரில் தொடங்கப்பட்டுள்ள
அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ’இந்து மதத்தினராக இருக்க வேண்டும்’ என்ற விதியானது கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
அருள்மிகு கபாலீசுவரர் கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களுக்கான நேர்காணல் நடத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிப்பவர்கள் ’இந்து மதத்தினராக இருக்க வேண்டும்’ என்ற விதியானது கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாகியிருக்கிறது.
1959-ம் ஆண்டின் தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலைக் கொடைகள் சட்டத்தின் படியே கல்லூரிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளதாக அமைச்சர் விளக்கம் அளித்துள்ளார்.
தனது விளக்கத்துக்கு ஆதாரமாக அவர் அச்சட்டத்தின் பிரிவு 10-ஐ மேற்கோள் காட்டியுள்ளார். தமிழ்நாடு இந்து சமய மற்றும் அறநிலையக் கொடைகள் சட்டத்தின் மேற்கண்ட பிரிவின்படி, அறநிலையத் துறையின் ஆணையாளர் தொடங்கி அத்துறையில் பணியாற்றும் கடைநிலைப் பணியாளர்கள் வரையில் அனைவரும் இந்து மதத்தினராக இருக்க வேண்டியது கட்டாயமானது.
இந்த நடைமுறைதான் இப்போது இருந்துவருகிறது. ஆட்சிப் பணித் துறை அதிகாரியை ஆணையராக நியமித்தாலும் அவர் இந்து மதத்தைச் சார்ந்தவராகத்தான் இருந்து வருகிறார். உதவி ஆணையர், நிர்வாக அலுவலர், ஆய்வாளர் ஆகிய பணியிடங்களுக்குத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுகிற தேர்வுகளுக்கு இந்து மதத்தினர் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இது ”இந்துக்கோவில்கள் முழுக்க முழுக்க இந்து மதத்தவர்களால்தான் நடத்தப்பட வேண்டும்” என்ற எண்ணத்தில் உருவாக்கப்பட்டது.
அமைச்சர் குறிப்பிடும் அந்தச் சட்டத்தின் பிரிவு 10, அறநிலையத் துறையின் கோயில் நிர்வாகம் தொடர்பானதே தவிர, அத்துறையால் நடத்தப்படும் கல்வி நிறுவனங்கள் அல்லது வழிபாடு தவிர்த்த வேறு அறப்பணிகள் தொடர்பானது அல்ல என்பதை அமைச்சர் கவனிக்கத் தவறிவிட்டார்.
அந்தச் சட்டப் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ‘ஆணையர் முதலானோர்’ என்ற வார்த்தைகள் கோயில் நிர்வாகத்துடன் தொடர்புடைய அதிகாரிகளை மட்டுமே குறிக்கும் என்பது மிகவும் வெளிப்படையானது.
இந்துமதக் கோவில்கள் அறநிலையத் துறையால் நிர்வகிக்கப்பட்டாலும், அது நிறுவும் கல்லூரி நிர்வாகத்தில் இந்திய அரசமைப்பின் மதச்சார்பின்மை கோட்பாட்டைப் பின்பற்ற வேண்டியது அவசியம். தரமான கல்வியைத் தருவதற்கு தகுதி வாய்ந்த ஆசிரியர்கள்தான் தேவையே தவிர, அந்தத் தகுதிகளில் ஒன்றாக மதம் இருக்கக் கூடாது.
”பள்ளித் தலம் அனைத்தும் கோவில் செய்குவோம்” என்றான் பாரதி. இன்றைய அரசு கோவில்களின் நிதி மற்றும் அதன் நில ஆதாரங்களில் கல்லூரிகள் எழுப்பத் திட்டமிட்டிருப்பது மகிழ்ச்சியைத் தரும் நேரத்தில், இத்தகைய முரண்பாடான சட்ட விளக்கம் அளித்திருப்பது வருத்தமளிக்கிறது.
ஆலயங்களை நிர்வகிப்பது வேறு; ஆலயங்களின் சார்பில் நடத்தப்படும் கல்விப்பணிகளை நிர்வகிப்பது என்பது வேறு. கோயில் வளாகம் இந்துக்களுக்கு மட்டுமே ஆனது, ஆனால் அதைச் சார்ந்து இயங்கும் மற்ற அறப்பணிகள் அனைவருக்கும் பொதுவானது. அதுவே முறையானது. இந்த அரசு உணர வேண்டும்.

This content is restricted to site members. If you are an existing user, please log in. New users may register below.