அழிவுகளை உண்டாக்கும் ஆளில்லா விமானங்கள்!

அழிவுகளை உண்டாக்கும் ஆளில்லா விமானங்கள்!

-ஜி.எஸ்.எஸ்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் அமெரிக்க ராணுவத்தால் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 பேர் இறந்தனர். ஆனால் பரிதாபம்.. இந்த பத்து பேரும் தீவிரவாதிகள் அல்ல. பொதுமக்கள்! தவறான தகவல் கிடைத்ததால் இது நடந்துவிட்டதுஎன்கிறது அமெரிக்கா. இது மாபெரும் குற்றம் என்பவர்கள் உண்டு. போ​ரில் இதெல்லாம் சகஜம்என்பவர்களும் உண்டு. எனினும் இதில் பலருக்கும் ஆர்வத்தை தூண்டிய ஒன்று ட்ரோன் தாக்குதல் என்பது.

ட்ரோன் என்றால் என்ன? எளிமையாகச் சொன்னால் ஆளில்லா விமானம். இதைப் பறக்கும் ரோபோட் என்று குறிப்பிடலாம். ரிமோட் மூலம் கட்டுப்படுத்தகூடிய குட்டி விமானம். தீவிரவாதிகள் எவ்வளவு குறுகலான இடத்தில் பதுங்கியிருந்தாலும் ட்ரோன் மூலமாக அவர்கள் மீது தாக்குதல் நடத்த முடியும். அது மட்டுமல்ல அவற்றுக்குள்ளே பொருத்தப்பட்டிருக்கும் கேமராக்கள் மூலம் அது செலுத்தப்படும் இடங்களில் யார் யார் இருக்கிறார்கள் என்பதை அறிய முடியும்

அதேபோன்று இப்போது காஷ்மீரில் பாகிஸ்தான் டிரோன்கள் மூலமாக ஆயுதங்களைப் போடுவது கண்டறியப் பட்டு வருகிறது.

தொடக்கத்தில் ட்ரோன்களை இயக்குவதற்கு ராணுவத்தினர்தான் அதிக ஆர்வம் காட்டினர். அதுவும் உலகப் போர்களில் ஒற்றர்கள் ஓட்டிய விமானங்களை எதிரிகள் வீழ்த்தும் போது அந்த விமானங்களும் போச்சு, திறமையான ஒற்றர்களும் விமானிகளும் இறந்துவிட்டனர் என்கிற நிலை உருவானது. அப்போது ட்ரோன்களின் அவசியம் மிகவும் உணரப்பட்டது.

சிரியாவின் ராணுவத்தை கிட்டத்தட்ட ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு இஸ்ரேல் நாடு 1982ல் ட்ரோன்களைத்தான் பயன்படுத்தியது. போதைப் பொருள்கள் மெக்சிகோவில் இருந்து தங்கள் நாட்டுக்குள் நுழைவதை தடுக்கவும் அமெரிக்கா ட்ரோன்களைப் பயன்படுத்தியது. போக்குவரத்து நெரிசல் இருக்கும்போது ராணுவ வீரர்களுக்கு அவசரமாக சில பொருட்களை அனுப்ப வேண்டும் என்றால் ட்ரோன்கள் கைகொடுக்கின்றன. ஒரு பகுதியில் என்னமாதிரி காட்டு விலங்குகள் இருக்கின்றன என்பதைக் கண்டறியவும் ட்ரோன்கள் பயன்படுகின்றன. கடற்கரையோரக் குற்றங்களை காவலர்கள் பெரும்பாலும் ட்ரோன்கள் மூலமாகத்தான் கண்டறிகிறார்கள்.

ட்ரோன்களுக்கான உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ் அடுத்த ​மூன்று ஆண்டுகளில் ரூ 120 கோடி வழங்கப்படும் என விமானப் போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா கூறியிருக்கிறார்.

வெனிசுலாவின் தலைவர் நிகோலஸ் மதுரோ மூன்று வருடங்களுக்கு முன் தேசிய பாதுகாப்பு படையினரிடம் ​ உரை நிகழ்த்திக் கொண்டிருந்த போது ஒரு கொலை முயற்சி நிகழ்ந்தது. வெடிகுண்டுகள் அடைக்கப்பட்ட இரண்டு சிறிய ட்ரோன்கள் அவர் மீது ஏவப்பட்டன. இவற்றில் முதல் ட்ரோன் வானத்தில் வெடித்து சிதறி விட, அடுத்த ட்ரோன் மதுரோவுக்கருகே வெடித்துச் சிதறியது. அங்கிருந்தவர்கள் சிதறி ஓடினார்கள். ஜனாதிபதியின் மனைவி, பாதுகாப்பு அமைச்சர் ஆகியோர் அங்கிருந்து அப்புறப்படுத்த பட, பாதுகாவலர்கள் ஜனாதிபதியைச் சுற்றிலும் ஒரு கேடயம் போல் நின்று அவரை அங்கிருந்து பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்.

இந்த ஆண்டு ஜூன் மாதம் இருபத்தி ஏழாம் தேதி ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியப் பாதுகாப்பு அலுவலகத்தின் மீது பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கம் ஒன்று ட்ரோன் வழித் தாக்குதல் நடத்தியது. தீவிரவாதிகள் ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தியது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில் ஒரு கட்டடத்தின் மேற்கூரையும் இரு போர் விமான அதிகாரிகளுக்கு லேசான காயங்களும் உண்டானது.

2020ல் பாக்தாத் சர்வதேச விமான நிலையத்தில் அமெரிக்கா நடத்திய ட்ரோன் வழித் தாக்குதலில் ஈரானை சேர்ந்த ராணுவ தளபதி இறந்தார். 2011இல் பாகிஸ்தானில் சுமார் நாற்பத்தி நான்கு பேரை அமெரிக்கா ட்ரோன்வழித் தாக்குதலில் கொன்றது. இதன் முக்கிய குறியான 11 தாலிபான் தீவிரவாதிகள் இதில் இறந்தனர்.

ஆக பல அறிவியல் கண்டுபிடிப்புகள் போலவே ட்ரோன்களும் ஆக்கம்,அழிவு ஆகிய இரு நோக்கங்களுக்கும் பயன்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com