முதல், இரண்டாம் உலக போர் என்றெல்லாம் கடந்து, இன்றைய நவீன உலகில் பல நாடுகளுக்கு இடையே வாய் தகராறில் ஆரம்பித்து போராக உருவமெடுத்து சண்டைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எங்கேயோ பல ஆயிரம் தூரத்தில் நடைபெறும் இந்த சண்டைகளால் நம் நாட்டிற்கு எந்த பாதிப்பும் வரப்போவதில்லை என்று நாம் நினைத்தாலும், அந்த சண்டையின் தாக்கம் மறைமுகமாக சிறு சிறு விஷயங்களில் எதிரொலித்து சாமானிய மக்களுக்கு பெரும் பாரமாக விழும். இப்படிப்பட்ட சண்டைகளை தடுக்க முடியாவிட்டாலும், அதன் தாக்கங்களில் இருந்து எவ்வாறு விடுபடலாம் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
பெரும் தாக்கங்களை உண்டாகும் சண்டைகள்:
இந்தியாவில், நிகழ்ந்து கொண்டிருக்கும் இன்றைய பொருளாதார வளர்ச்சி, உலகளாவிய ஒத்துழைப்பால் கணிசமாக இணைக்கப்பட்டுள்ளது. இதனால் முக்கிய நாடுகளுக்கிடையேயான மோதல்கள் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியில் ஆழமான பின் விளைவுகளை ஏற்படுத்தும். உதாரணமாக, அமெரிக்காவிற்கும், சீனாவிற்கும் இடையே நிகழும் ஏதோ ஒரு சாத்தியமான மோதல் உலகளாவிய வர்த்தக பாதைகளை முற்றிலும் சீர்குலைக்கலாம், இது இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான செலவுகளை உலகளவில் அதிகரிக்க வழிவகுக்கும். காலப்போக்கில் இந்த சண்டை நம் நாட்டில் பணவீக்கத்தை ஏற்படுத்தலாம், நுகர்வோர் செலவினங்களைக் குறைக்கலாம் மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் பெரிதும் குறைக்கலாம். கூடுதலாக, மத்திய கிழக்கில் உள்ள மோதல்கள், குறிப்பாக சவூதி அரேபியா மற்றும் ஈரான் போன்ற எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் நிகழும் பதற்றங்கள், எண்ணெய் விலைகள் அதிகரிப்பதற்கு வழிவகுக்கும். இந்தியா தனது எரிவாயு சம்பந்தமான பொருட்களை பெரும் பகுதியை இறக்குமதி செய்வதால், அங்கு நிகழும் அசாதாரணம் நம் நாட்டில் பொருட்களின் விலை உயர்வதோடு பல்வேறு துறைகளில் கையாளப்படும் உற்பத்தி செலவுகளையும் அதிகரிக்கலாம், இதனால் நம் நாட்டில் பணவீக்கம் மற்றும் பொருளாதார உற்பத்தி முற்றிலுமாக குறைவதற்கு வழிவகுக்கும்.
இந்த நிலையில் பொதுமக்கள் எவ்வாறு முன்னெச்சரிக்கையாக இருக்கலாம்:
நிதித் தயார்நிலை: அவசரகால நிதியை பராமரிப்பது, பொருளாதார வீழ்ச்சியின் போது தனிநபர்கள் எதிர்பாராத செலவுகளை நிர்வகிக்க உதவும். இது பலதரப்பட்ட முதலீடுகள் சந்தை ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், அந்நேரத்திலும் நம்மை நாமே பாதுகாக்க முடியும்.
வள மேலாண்மை (Resource Management): எல்லோரும் உள்ளூர் தயாரிப்புகளை ஆதரித்து, இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் மீது சார்ந்திருக்கும் நிலையை குறைத்தாலே எந்த ஒரு உலகளாவிய அசாதாரண தாக்கத்தையும் நம் மீது படாமல் பார்த்துக் கொள்ளலாம். கூடுதலாக, எரிபொருள் மற்றும் மின்சாரம் போன்ற விஷயங்களை தேவைக்கு ஏற்றவாறு நாம் பயன்படுத்தி சேமிக்க பழகுவதன் மூலம், எந்த ஒரு அசாதாரண சூழ்நிலையிலும், அதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டாலும் நம்மால் பதட்டம் அடையாமல் சமாளிக்க முடியும்.
திறன் மேம்பாடு: திறன் மேம்பாட்டில் முதலீடு செய்வது வேலை பாதுகாப்பை மேம்படுத்தும். காரணம் பொருளாதார நிச்சயமற்ற காலங்களில், பலதரப்பட்ட திறன்களைக் கொண்டிருப்பது தனிநபர்களை தங்களுக்கு தெரிந்த கைத்தொழில்களை வைத்து நிலையை சிறப்பாக கையாளலாம்.
சமூக ஆதரவு: வலுவான சமூக வலைப்பின்னல்களை (Social Support) உருவாக்குவது கடினமான காலங்களில் பரஸ்பர ஆதரவை உங்களாலும் அல்லது மற்றவர்களிடம் இருந்தும் பெற முடியும். உங்களிடம் உள்ள வளங்கள் மற்றும் தகவல்களை மற்றவரிடம் பகிர்வதன் மூலம் மக்களுக்குள் இருக்கும் வேற்றுமை அகற்றப்பட்டு ஒரே சமூகமாக மேலும் பின்னிப்பிணைந்து, எந்த ஒரு நிலையையும் சிறப்பாக கையாளக்கூடிய ஒரு துணிச்சலை நமக்கு தரும்.