சமீப காலமாக நடிகைகள் பலரும் புதுப் புதுப் நோய்களால் சிரமப்பட்டு வருவதை செய்திகள் வாயிலாக அறிந்து வருகிறோம். நடிகை சமந்தா, ‘மயோசிடிஸ்’ என்ற தசை அழற்சி நோய் பாதிப்பில் சிக்கி, நீண்ட நாட்களாக அதற்கு சிகிச்சை பெற்று வருவதாக அவரே தெரிவித்திருந்தார். அதேபோல், நடிகை மம்தா மோகன்தாஸ் தனக்கு சரும பாதிப்பு இருப்பதாகவும் அந்தப் பிரச்னையால் தற்போது தான் கருப்பு நிறத்துக்கு மாறிக்கொண்டே வருவதாகவும் கூறி இருந்தார். நடிகர் கமல்ஹாசனின் மகள் ஸ்ருதிஹாசன் கூட தமக்கு, ‘பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் மற்றும் எண்டோமெட்ரியோசிஸ்’ பிரச்னைகள் உள்ளதாக அவரே கூறி இருக்கிறார்.
சினிமா நடிகைகளுக்கு இது போதாத காலம் என்றே கூற வேண்டும். அதனால்தான் நோய் பாதிப்பு வரிசையில் தற்போது நடிகை அனுஷ்காவும் சேர்ந்துள்ளார். சிரிப்பது என்பது பிரச்னைகளை தீர்க்கும் ஒரு நல்ல விஷயம்தானே. ஆனால், இவருக்கு சிரிப்பே ஒரு பிரச்னையாக உள்ளது. அவரே தனக்கு சிரிப்பு வியாதி உள்ளது என்று கூறி இருக்கிறார். இதற்கு, 'ஸ்மைலிங் சின்ட்ரோம்' என்று மருத்துவப் பெயராம்.
இந்த சிரிப்பு வியாதி குறித்து அவர் கூறியபோது, “எனக்கு சிரிப்பு வியாதி இருக்கிறது. ‘சிரிப்பது ஒரு வியாதியா?’ என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், நீங்கள் நினைப்பது போல் இல்லை. இது வேறு மாதிரியான சிரிப்பு. நான் சிரிக்க ஆரம்பித்தால் குறைந்தது 15 நிமிடங்கள் முதல் 20 நிமிடங்கள் வரை தொடர்ந்து சிரித்துக்கொண்டே இருப்பேன். அதிலும் நகைச்சுவை காட்சிகளைப் பார்த்துவிட்டால் தொடர்ந்து விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டே இருப்பேன். அதுபோன்ற நேரத்தில் என்னால் சிரிப்பை கட்டுப்படுத்தவே முடியாது. இது எனக்கே கூட ஆச்சரியமாகத்தான் உள்ளது. சில சமயம் படப்பிடிப்பு நேரத்தில் நான் சிரிக்க ஆரம்பித்துவிட்டால் அன்று படப்பிடிப்பையே நிறுத்தும் அளவுக்கு நான் சிரிப்பேன். அந்த சிரிப்பு ஏறக்குறைய இருபது நிமிடங்கள் தொடரும். இந்த இடைவெளியில் என்னுடன் நடிப்பவர்கள் பலரும் டிபன், ஸ்நாக்ஸ் போன்றவற்றை சாப்பிட்டே முடித்து விடுவார்கள் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன்” என்கிறார்.