வெள்ளித்திரை

பூவே பூச்சூடவா வெளியாகி 38 ஆண்டு நிறைவு:பாட்டியின் பேரன்புக்கான சாட்சி!

ராகவ்குமார்

ந்த உலகத்தில் தாய், தந்தை, சகோதர சகோதரிகள் என பல உறவுகள் நமக்கு இருக்கின்றன.இந்த அனைத்து உறவுகளையும் விட நமக்கு தலையாய உறவு தாத்தா -பாட்டி உறவு.

குறிப்பாக பாட்டிகளின் அன்பை வார்த்தைகளால் சொல்லி விவரிக்க இயலாது. வார்த்தைகளால் சொல்ல முடியாத இந்த அன்பை திரையில் சொல்லி வெற்றி பெற்றவர்தான் இயக்குநர் பாசில். கடந்த 1985 ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி வெளியானது என்றும் நெஞ்சில் பாட்டிகளின் நினைவுகளை சுமந்திருக்கச் செய்யும் பூவே பூச்சூடவா திரைப்படம். பொதுவாக, அண்ணன் தங்கை பாசத்தை மையமாக கொண்டு ஏராளமான திரைப்படங்கள் வந்த காலகட்டத்தில், பாட்டி -பேத்தி என வெவ்வேறு தலைமுறைகளைச் சேர்ந்த இரு பெண்களின் உறவை அற்புதமாக சொன்ன படம்தான் பூவே பூச்சுடவா.

இந்த கதையை முதலில் 'நோக்கே தூரத்து கண்ணும் நாட்டு ' என்ற பெயரில் மலையாளத்தில் 1984ம் ஆண்டு வெளியிட்டு வெற்றி பெற்ற இயக்குநர் பாசில். பின்னர் அந்த கதையை தமிழ் மொழிக்கு ஏற்றார் போல் பூவே பூச்சூடவா எனும் பெயரில் இயக்கினார். பூவே பூச்சூடவா படத்தில்தான் நீண்ட இடைவெளிக்குப்பின் நாட்டிய பேரொலி பத்மினி பாட்டியாக நடித்திருந்தார். அதேபோல், இந்த படம் எவர்கிரீன் நாயகி என்றழைக்கப்படும் நடிகை நதியாவின் முதல் தமிழ் படமாக அமைந்தது. அதன்பிறகு தமிழில் சில படங்களே நடித்திருந்தாலும், அவர் நடிப்பில் வெளியான பூவே பூச்சூடவா இன்றைக்கு நதியாவை நினைவில் வைத்துக்கொள்ளும் அளவுக்கு ரசிகர்கள் மனதில் பதிந்து போனது.

படத்தில் பாட்டியாக நடித்திருந்த நடிகை பத்மினி வெளியே பார்ப்பதற்கு கோபக்கார பாட்டியாகவும், ஆனால் உள்ளூர அன்புக்கு ஏங்குபவராக நடித்து அற்புதமான கேரக்டரில் வாழ்ந்து காட்டியிருப்பார் பத்மினி. முதலில் பேத்தியை வெறுப்பது போல இருந்தாலும் பின்பு மனதார ஏற்றுக் கொள்வார். ஒரு சுட்டிப்பெண்ணாக அனைவரையும் வம்புக்கு இழுக்கும் பெண்ணாக நடித்திருப்பார் நதியா. இந்தப்படம் வெளியான பின்பு நதியா ஸ்டைல், நதியா சேலை இப்படி பல பொருள்கள் நதியாவின் பெயரில் அழைக்கப்பட்டன. இந்த படத்தில் நதியா பயன்படுத்தும் சைக்கிள் இப்படம் வெளியான பின்பு மிகவும் பிரபலமானது.

இளையராஜாவின் இசையில் பூவே பூச்சூடவா பாடல் இன்றும் மக்கள் விரும்பும் பாடலாக உள்ளது மத்தாப்பை சுட்டு சுட்டு போடட்டுமா பாடல் ஒவ்வொரு வருட தீபாவளி சமயத்தில் ஒலிக்கும் பாடலாக இன்றளவும் உள்ளது. இன்றும் இந்த தலைமுறையினர் இந்த படத்தை பார்த்தால் கூட தங்களின் பாட்டியின் நினைவு உறுதி. அதிகம் திரையில் பேசாத, நமக்கே வயதானாலும் மறக்க முடியாத பாட்டியின் பேரன்பை சொன்ன பூவே பூச்சூடவா திரைப்படம் வெளியான இந்த நாளில் நம்  பாட்டிகளை நினைவில் கொள்வோம்.

மருத்துவத்துறையில் ஆக்டிவேட்டட் சார்க்கோலின் பயன்பாடுகள்!

இந்தியாவில் நடக்கும் மிகப்பெரிய மோசடி… ஜாக்கிரதை மக்களே!

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

SCROLL FOR NEXT