கலக்கபோவது யாரு புகழ் பாலா கர்ப்பிணிகள், மாற்றுத்திறனாளிகளுக்காக இலவச ஆட்டோ சேவை வழங்கி அசத்தியுள்ளார்.
சின்னத்திரையில் பிரபலமாகி பின்பு வெள்ளித்திரையில் நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார் பாலா. கலக்க போவது யாரு நிகழ்ச்சி மூலம் அறிமுகமான பாலாவுக்கு குக்வித் கோமாளி நிகழ்ச்சி ஒரு அபூர்வ வாய்ப்பாக அமைந்தது. இவர் கொடுத்த கவுண்டர் காமெடிகளுக்கு எக்கச்சக்க ரசிகர்கள் பட்டாளம் உண்டு. இதன் மூலம் இவருக்கு பல வாய்ப்புகள் குவிந்து வருகிறது.
அவர் சம்பாதித்த பணத்தின் மூலமாகப் பல நலத்திட்ட உதவிகளைச் செய்து வருகிறார். முன்னதாக பழங்குடியின மக்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்தார். சமீபத்தில் மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சென்னையில் உள்ள பல்லாவரம், அனகாபுத்தூர், பம்மல் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரால் வீட்டில் தவித்து வரும் மக்களுக்கு பண உதவி செய்தார். 200 குடும்பங்களுக்கு தலா ரூ.1000 வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மேல்மருவத்தூர் அருகே கோட்டகயப்பாக்கம் கிராமத்தில் தண்ணீர் சுத்திகரிக்கும் கருவி வாங்கிக் கொடுத்தார். இப்படி தொடர்ந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு பாலா உதவி செய்து வருவது பலரது கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த நிலையில், தாம்பரத்தில் உள்ள அனகாபுத்தூர் பகுதியில் மாற்றுத்திறனாளி மற்றும் கர்ப்பிணிகளுக்கான இலவச ஆட்டோ சேவையை வழங்கியுள்ளார். தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், அவருக்கே உரிய பாணியில் இது விளம்பரத்துக்காக அல்ல உதவிக்காக மட்டுமே என தெரிவித்துள்ளார்.