சஸ்பென்ஸ் த்ரில்லர் படங்கள் என்றாலே தென்னிந்திய சினிமாவில் மலையாள மொழி திரைப்படங்கள் தான் நம்மில் பலருக்கு நினைவுக்கு வரும். சிறந்த திரைக்கதையில் அனைத்து மொழி ரசிகர்களும் ரசிக்கும்படியான திரில்லர் படங்கள் தருவதில் வல்லவர்கள் கேரள இயக்குனர்கள்.
தற்போது நம் தமிழ் இயக்குநர்களும் நல்ல திரில்லர் படங்களை சமீப காலமாக தருகிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த 'ராட்சசன்' சென்ற வருடம் வெளியான 'போர் தொழில்' படங்களை சொல்லலாம். இந்த 2024 ஆம் ஆண்டு மாறுபட்ட கிரைம் திரில்லர் படமாக வந்துள்ளது ஷெரிப் இயக்கியுள்ள 'ரணம் அறம் தவறேல்' திரைப்படம். வைபவின் 25 ஆவது படமாக இப்படம் அமைந்துள்ளது.
சென்னை மாதவரம் காவல் நிலையத்தில் வெட்டு பட்டு எரிந்த நிலையில் கால்கள் கண்டெடுக்கப்பபடுகிறது. இதே போல சென்னையின் வெவ்வேறு பகுதியில் எரிந்த உடலின் பாகங்கள் கண்டெடுக்கப் படுகிறது. இந்த கொலைகளை செய்வது யார் என கண்டு பிடிக்க முடியாமல் திணறும் காவல் துறை கிரைம் சீன் எழுதி தருபவரும், ஓவியருமான சிவாவின் உதவியை நாடுகிறது. ஒரு கட்டத்தில் வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டரும் காணாமல் போகிறார். புதிய பெண் இன்ஸ்பெக்டர் பதவி ஏற்று வழக்கை விசாரணை செய்கிறார். இதற்கு பின்னால் இருக்கும் முடிச்சுகள் என்ன என்பதை நோக்கி படம் நகர்கிறது
'நெக்ரோபிலியா' என்ற அதிகம் பேசப் படாத ஒரு உளவியல் விஷயத்தை பற்றி சொன்னதற்காக டைரக்டரை பாராட்டலாம். படத்தின் முதல் இருபது நிமிடங்கள் வரை மிக சாதாரணமாக நகர்கிறது. இருபது நிமிடங்களுக்கு பின்பு படம் எக்ஸ்பிரஸ் வேகத்தில் செல்கிறது. இடைவெளி தாண்டி பரபரப்புடன் செல்லும் படம் அதன் பிறகு சிறிது வேகத்தை குறைத்துக் கொள்கிறது. இருப்பினும் சொல்ல தயங்கும் ஒரு உளவியல் படத்தை கையாண்ட விதத்தில் படம் நன்றாக உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்ட ஒரு நடிகையின் பெயரும் படத்தில் அடிபடுகிறது.
தனது 25 ஆவது படத்தை தனக்கான நடிப்பு திறமையை முழுமையாக காட்டும் படமாக அமைத்து கொண்டு விட்டார் வைபவ் என்று சொல்லலாம். அளவான உணர்ச்சியில் அழகான நடிப்பை தந்து விட்டார். ஒரு ஓவியனாகவும், பார்வையில் பிரச்சனை கொண்டவராகவும் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். நந்திதா ஸ்வேதாவிற்கு அம்மாவாக உணர்ச்சிபூர்வமான கேரக்டர். பாசம், பழிவாங்கல் என இது வரை நாம் பார்க்காத நந்திதாவை பார்க்கலாம்.
எப்போதும் அழகாக ரொமான்ஸ் செய்யும் தான்யா ஹோப்பை ஒரு டெரர் போலீஸ் அதிகாரியாக இப்படத்தில் நடித்துள்ளார். சுரேஷ் சக்ரவர்த்தி, 'விலங்கு' கிச்சா இருவரும் சிறப்பாக நடித்துள்ளனர்.
அரோல் குரோலியின் இசையில் திரில்லரின் படபடப்பை அதிகரிக்க செய்கிறது. பாலாஜி. K. ராஜாவின் ஒளிப்பதிவு மற்றும் முனிசின் படத்தொகுப்பும் இணைந்து படத்தின் சில குறைகளை மறைத்து விடுகிறது. ஒரு மாறுபட்ட விழிப்புணர்வு தரும் உளவியல் திரில்லர் படத்தை பார்க்க விரும்புபவர்கள் 'ரணம் அறம் தவறேல் ' படத்தை தவற விடாதீர்கள்.