டீ என்பது அனைத்து மக்களும் விரும்பி குடிக்கும் ஒரு உற்சாக பானமாகும். சிலர் உணவு உண்ணாமல் கூட இருப்பார்கள், ஆனால் டீ குடிக்காமல் இருக்க மாட்டார்கள். டீ குடிப்பது அப்படி ஒரு நிறைவை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அப்படிப்பட்ட டீ உருவான கதை சீனாவில் இருந்தே ஆரம்பிக்கிறது. 2737 பி.சியில் செனாங் என்னும் அரசன் ஒரு மரத்தின் கீழே அமர்ந்திருக்க, அவருடைய பணியாள் சுடுதண்ணீரை கொதிக்க வைத்துகொண்டிருந்தார். அப்போது திடீரென சில இலைகள் அந்த தண்ணீரில் வந்து விழுந்தது. அந்த சுடுநீரை அருந்திய பிறகு புத்துணர்ச்சியாக உணர முடிந்தது. இவ்வாறே டீ என்னும் பானம் முதல் முதலில் தோன்றியது என்று கூறப்படுகிறது.
சீனர்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக டீயினை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியாவிற்குள் டீ வந்தது பிரிட்டீஷ்காரர்களால்தான். சீனாவிடமிருந்தே டீயை இறக்குமதி செய்ய வேண்டிய நிலையிருந்ததால், அதை இந்தியாவில் பயிரிடலாம் என்று ஆங்கிலேயர்கள் டீயை முதன் முதலில் டார்ஜிலிங்கில் 1850ல் பயிரிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாம் மாநிலத்தில் 5000 வருடங்களுக்கு முன்பு இந்திய அரசர் ஒருவரே மசாலா பொருட்களை வைத்து சாயை மருத்துவத்திற்காக இதை கண்டுபிடித்தார் என்று கூறப்படுகிறது. பிறகு திபெத்தியர்கள் ‘யாக்’ என்னும் மாட்டின் பாலை டீயில் சேர்த்து பருக ஆரம்பித்தனர். அவ்வாறு செய்வதால் அது அவர்களுக்கு அதிகமான கலோரிகளைத் தருகிறது என்று நம்பினர். ‘சாய்’ என்பது ஹிந்தியில் டீ என்று பொருள். ‘சா’ என்பது சீனத்தில் டீ என்ற அர்த்தம் கொண்டது.
இந்தியாவில் மிகவும் பிரபலமான டீ என்றால் எந்த சந்தேகமுமின்றி மசாலா டீ என்று சொல்லலாம். எல்லோர் வீட்டிலுமே ஒவ்வொரு விதமான மசாலா டீக்கள் செய்வதுண்டு. வீட்டில் உள்ள மசாலா பொருட்களை வைத்து செய்வது இந்தியர்களின் வழக்கம்.
இந்தியாவில் தெருவுக்கு தெரு டீ கடைகள் இருப்பதை காண முடியும். மக்கள் காலையும், மாலையும் டீ குடிப்பது வழக்கமான ஒன்றாக உள்ளது. சிலருக்கு பால் சேர்க்காமல் டீ குடிப்பது பிடிக்கும். இதை பிளாக் டீ என்று கூறுவர். சிலர் அதில் தேன், எழுமிச்சை பழச்சாற்றை சேர்த்து அருந்துவார்கள். காஷ்மீரி சாயை பிங்க் டீ என்று கூறுவதுண்டு. கிரீன் டீ இலைகளுடன் பேக்கிங் சோடா சேர்த்து காய்ச்சி வடிக்கட்டி பாலுடன் சேர்ப்பதால் பிங்க் நிறம் கிடைக்கிறது.
இந்தியாவில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்ரா மாவட்டத்தைச் சேர்ந்த தேயிலையே காங்ரா தேயிலையாகும். இது 19ம் நூற்றாண்டிலிருந்தே காங்ரா பள்ளத்தாக்கில் தயாரிக்கப்படுகிறது. 2005ல் காங்ரா தேயிலைக்கு புவிசார் குறியீடு அடையாள அந்தஸ்து வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்நாட்டில் நீலகிரி மலைப்பகுதியில் வளர்க்கப்படும் தேயிலை கருமை நிறமும், தீவிர மணமும் உடையதாகும். இது தமிழ்நாட்டில் மிகவும் பிரபலமான டீயாகும். இந்தியாவின் அசாம் மாநிலமே அதிகப்படியான டீயை உற்பத்தி செய்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும். டீ என்பது உலகம் முழுவதுமே இன்றியமையாத உற்சாக பானமாக மாறிவிட்டது என்று கூறலாம்.
‘டீ இன்றி முழுமையடையாது இந்தியர்களின் நாள்’ என்று கூடச் சொல்லலாம். அந்த அளவிற்கு இந்தியர்களின் அன்றாட வாழ்வில் டீக்கு முக்கியத்துவம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.