இன்றும்கூட கட்டடக் கலை நிபுணர்களை வியக்க வைக்கும் ஓர் அதிசயம் – எகிப்து நாட்டு பிரமிடுகள். இந்தத் தொழில் நுட்பம் மிகவும் நுண்ணியமானது என்பதோடு, இந்தக் கலை கி.மு.3150ம் ஆண்டிற்கு முந்தையது என்ற தகவல்தான் இந்தக் கட்டட அமைப்பை உலக அதிசயங்களில் ஒன்றாக நிலை நிறுத்தியிருக்கிறது.
பூமியில் தோன்றிய மிகப் புராதனமான நாகரிகம் கொண்ட நாடு என்று எகிப்து பெருமை கொள்கிறது. இதற்கு முக்கிய காரணம், இந்நாட்டில் அமைந்திருக்கும் பிரமிடுகள், நெடிதுயர்ந்த ஸ்தூபிகள் மற்றும் என்றும் வற்றாத நைல் நதி ஆகியவைதான்.
ஆப்பிரிக்க கண்டத்தில் பத்து லட்சத்துப் பத்தாயிரம் சதுர கிலோமீட்டர் பரப்புக்கு விரிந்திருக்கிறது எகிப்து. இதன் வடக்கே மத்தியத் தரைக்கடல், வட கிழக்கே இஸ்ரேல் நாடு, கிழக்கே செங்கடல், தெற்கே சூடான் நாடு மற்றும் மேற்கே லிபியா நாடு என்று சூழ்ந்திருக்கின்றன.
நைல் நதிக்கரையில் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட நிலையான சமுதாய அமைப்பை உருவாக்கியவன் மேனீஸ் என்ற மன்னன். இவன் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டது கி.மு. 3150ம் ஆண்டில். அவனையடுத்து மூவாயிரம் ஆண்டுகளுக்கு அடுத்தடுத்து பல அரசர்கள் இங்கே கோலோச்சியிருக்கிறார்கள்.
சமயம், கலை, மொழி என்று பல்வேறு துறைகளில் தனித்து விளங்கிய எகிப்திய கலாசாரம், இந்த மூவாயிரம் ஆண்டு காலத்தில் வெகுவாக வளர்ந்து செழித்திருந்தது. இன்றைய நவீன காலத்துப் பொறியாளர்களும், கல்வியாளர்களும் வியந்து, ஏன் பொறாமையும் படக்கூடிய பிரமிட் என்ற கட்டடங்கள் பலவற்றைக் கொண்டிருக்கிறது எகிப்து.
அந்நாட்டு கலாசாரப்படி அங்கே மனித மரணம் கொண்டாட்டத்துக்குரியது. ஆனால் மன்னனின் இறப்பு என்பது ஏற்றுக் கொள்ளப்படாது! ஆமாம், உயிரின்றி, உணர்வின்றி மன்னன் சடலமாகப் படுத்துக் கிடந்தாலும், ‘ராஜா உயிரோடு இருக்கார்!‘ என்ற நம்பிக்கையை அந்நாட்டு மக்கள் வளர்த்துக் கொண்டிருந்தார்கள். அதனால்தான், அவன் எழுந்து வந்துவிடுவான் என்ற எதிர்பார்ப்பில், அவனுடைய உடலைப் பதப்படுத்தி (மருத்துவ ரீதியான இந்த முறைக்கு ‘மம்மி‘ என்று பெயர்), பிரமாண்டமான பிரமிடு கட்டி அதனுள் அடக்கம் செய்து விடுவார்கள். அதோடு கூடவே ஏராளமான நகைகள், ராஜ அலங்கார வகைகள் என்றும் சேர்த்து அடக்கம் செய்வார்கள். இவ்வாறு பிரமிடு கட்டியதன் நோக்கமே, எதிரிகள் யாராலும் தம் மன்னருக்குத் தீங்கு நேர்ந்துவிடக் கூடாது என்பதுதான். அதைத் தவிர, மன்னரின் ‘பாதுகாப்பு‘க்காகவும், உபசாரம் செய்வதற்காகவும், அவருடைய வேலையாட்கள் நாலைந்து பேரும் உயிருடன் ‘மம்மி‘யோடு புதைக்கப்பட்டார்கள்!
எகிப்தில் சுமார் 100 பிரமிடுகள் இருந்தாலும், கீஸா நகரிலுள்ள பிரமிடுதான் மிகவும் புராதனமானது, மிகப் பெரியது. மனித முயற்சியின் சாதனை இது என்று கருதப்படுகிறது. ஆமாம், 480 அடி உயரம்! ஃபாரோஹ் என்ற எகிப்திய மன்னனின் கல்லறை இது. கி.மு. 2560 ஆண்டுகளுக்கு முந்தையது. இதுவே உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்று எனப்படுகிறது.
இந்த பிரமிடு கட்டடக் கலை பிற நாடுகளில் பரவாத, கட்டட நிபுணர்கள் அதற்காக முயற்சி மேற்கொள்ளாத ஒன்றாக இன்றுவரை இருப்பதற்குக் காரணம், ஒரு சமாதி என்பதைத் தவிர வேறு பயன் ஏதும் இல்லை என்று அவர்கள் கருதியதுதான். அதோடு அதே மாதிரி கட்டினால், எகிப்து பிரமிடு போல இன்னொன்று என்ற அளவில்தான் புதியது மீதான மதிப்பீடு இருக்கும் – அதாவது இந்தியாவில் ஆக்ராவில் ஷாஜஹான் கட்டிய தாஜ்மகாலைப் போலவே, ஔரங்காபாதில், அவனுடைய மகன் ஔரங்கசீப் ‘பீபிகா மாக் பெர்ரா‘ என்ற டூப்ளிகேட் தாஜ்மகாலைக் கட்டினானே, அதுபோல!
கொசுறு தகவல்:
எகிப்தின் மேலும் ஒரு சிற்பக் கலை அதிசயம் – 241 அடி நீளம், 20 அடி அகலம், 67 அடி உயரம் கொண்ட ஒரே கல்லில் செதுக்கப்பட்ட ஸ்பிங்ஸ் என்ற விலங்கின் சிலை! சிங்கத்தின் உடலும், மனித முகமும் (நம்ம நரசிம்மவதாரத்தின் உல்டா?) கொண்டு நைல் நதியின் மேற்குக் கரையில் கீஸா பீடபூமியில் படுத்திருக்கிறது இந்த கல் விலங்கு.