நெற்றிப் பட்டம் என்பது கோயில் யானைகளை அலங்கரிக்கக் கேரளம் மற்றும் தமிழ்நாட்டில் பயன்படுத்தப்படும் ஓர் ஆபரணம். இதனைத் தமிழில் ‘முகப்படாம்’ என்கின்றனர். யானைகளின் நெற்றியில் அணிவிக்கப்படும் இந்த நெற்றிப்பட்டம் தங்கம் மற்றும் செப்பு ஆகிய உலோகங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்படுகிறது. கேரளப் பண்பாட்டில் ஒருங்கிணைந்த ஒன்றாகக் கருதப்படும் நெற்றிப்பட்டமும், முத்துக்கூடும் புத்த சமயத்தின் பங்களிப்பு என்கின்றனர்.
பெளத்த சமயத்தில், சிறப்பு மரியாதையினைக் கொடுக்க, ஆலமர இலை ஒன்றினை நெற்றியில் வைத்திருப்பார்கள். இது 'பட்டம்' கொடுப்பதாக அறியப்பட்டது. கோயில் திருவிழாக்களின் போது பயன்படுத்தப்படும் யானைகள் ஆலமர இலைகளால் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் இலைகளுக்குப் பதில் ஆபரணமாக மாறியது. இதற்கு நெற்றிப்பட்டம் என்ற புதிய பெயரும் வந்தது என்கின்றனர். நெட்டிப்பட்டம் என்ற சொல் பாலி மொழியில் இருந்து வந்தது. அதாவது 'இலை' என்று பொருள் தரக்கூடியது என்பர். கேரளாவின் மலையாள மொழியில் நெற்றிப்பட்டை என்றிருந்து, அதிலிருந்து நெற்றிப்பட்டம் என்றாகி விட்டது என்றும் சிலர் சொல்கின்றனர்.
யானையின் நெற்றிப்பட்டங்களில் சூரல்போலி, நாகபதம், வென்டோட் என பல்வேறு வகையான நெற்றிப்பட்டங்கள் உள்ளன. இவையனைத்தையும் பொதுவாக நெற்றிப்பட்டம் என்று அழைத்தாலும், கோயில்களில் தலைகெத்து என்றே அழைக்கப்படுகிறது. இந்து சமயப் புராணங்களில் இந்திரனின் போர் யானையான ஐராவதம் எனும் வெள்ளை யானைக்கு, பிரம்மன் முதன் முதலில் நெற்றியில் அலங்கார அணிகலை வடிவமைத்து அணிவித்திருக்கிறார் என்கிற குறிப்பு காணப்படுகிறது என்கின்றனர்.
கேரள மாநிலம் திருச்சூர் எனுமிடத்திலேயே நெற்றிப்பட்டம் அதிகமாகத் தயாரிக்கப்படுகிறது. கேரளாவிலுள்ள திரிப்பூணித்துறை எனுமிடத்திலும் நெற்றிப்பட்டம் தயாரிக்கப்படுகிறது. உலோக பந்துகளைச் சிறப்பு வடிவங்களில் பருத்தி மற்றும் சணல் சாக்குகளில் தைப்பதன் மூலம் இது தயாரிக்கப்படுகிறது. பெரும்பான்மையாக செப்பு (தாமிரம்) பயன்படுத்தியேத் தயாரிக்கப்படுகிறது. பித்தளை அரிதாக இருந்தாலும் பயன்படுத்தப்படுகிறது. செம்பு அல்லது பித்தளை பயன்படுத்தி தயார் செய்த பின்னர் மஞ்சள் பிரகாசத்திற்குத் தங்க முலாம் அல்லது வண்ணம் தீட்டப்படுகிறது.
நெற்றிப்பட்டம் தயாரிப்பு: மூன்றரைக் கிலோ செம்பு, 3 சவரன் (24 கிராம்) தங்கம் ஆகியவை கலந்து ஒரு சாதாரணமான நெற்றிப்பட்டம் செய்யப்படுகிறது. ஒரு ஆபரணம் செய்யக் குறைந்தது 20 நாட்கள் ஆகும். நெற்றிப்பட்டத்தின் அளவு யானைக்கு யானை வேறுபடும். 9 லிருந்து 10 அடி உயரம் உள்ள யானைக்கு 60 அங்குலம் நீளம் உள்ள நெற்றிப்பட்டம், அதில் குறைந்தது 11 சந்திரக்கலா (பிறைநிலா) இருக்க வேண்டும் என்கின்றனர். மேலும் இதில், கூம்பன் கிண்ணம் என்று அழைக்கப்படும் ஒரு கூர்மையான பொருள், 2 சுற்று ஒன்று, 37 அரை பந்துகள், 40 முழு பந்துகள், 1 கலாஞ்சி மற்றும் 5000 சிறிய குமிழ்கள் இதில் இடம் பெற்றிருக்கின்றன.
ஒவ்வொரு குமிழியும் பஞ்ச பூதங்கள், திரிமூர்த்திகள், நவக்கிரகங்கள், அஷ்ட வசுக்கள், சப்தரிஷிகள், மூலகணபதி போன்றவர்களைக் குறிப்பிடுகிறது. நெற்றிப் பட்டம் செழிப்பு, அமைதி மற்றும் ஆசீர்வாதத்தைத் தருகிறது என்று நம்பப்படுவதால், இது மங்களகரமான வேளைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது.