Mahabalipuram 
கலை / கலாச்சாரம்

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

கார்த்திகா

தமிழகத்தின் வரலாற்றுப் பக்கங்களில், பெரும் பகுதியை ஆட்சி செய்த அரசர்களாக மிகவும் அறியப்பட்டவர்கள், சேரர், சோழர் மற்றும் பாண்டியர்கள். தமிழகத்தின் அரச வரலாறு என்றாலே, நம் அனைவரின் மனத்திலும் வருபவர்கள் இந்த மூன்று அரசர்கள் மட்டுமே. ஆனால், இவர்களைத் தாண்டி இன்னும் ஏராளமான அரசர்களும், அரசகுலத்தோரும் வாழ்ந்து மறைந்திருக்கின்றனர். அவர்களுள் குறிப்பிட தகுந்தவர் 'நரசிம்மவர்ம பல்லவர்'. பல்லவர் குல அரசரான இவர் கலைத்துறைக்கு ஆற்றிய பெரும்பணி இன்றளவும் வியக்கும் வகையில் அமைந்ததோடு மட்டுமல்லாமல், அரசுக்கு நல்ல வருமானம் கிடைக்க வழிவகை செய்துள்ள சுற்றுலா தலமாகவும் விளங்குகிறது.

நரசிம்மவர்மன் 'மாமல்லன்' ஆன கதை!

பல்லவ பேரரசர்களில் மிகுந்த புகழுடன் கி.பி.7 ஆம் நூற்றாண்டில் காஞ்சியை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்தவர் நரசிம்மவர்மர். பல்லவர்களின் பழங்கால துறைமுகமான மகாபலிபுரம் என்ற மாமல்லபுரம் இன்றும் இந்தியாவில் முக்கியமானதோர் சுற்றுலா தலமாக விளங்குகிறது. மாமல்லபுரத்தின் பெயரில் இருக்கும் மாமல்லர் 'நரசிம்மவர்மர்' தான். இவர் மல்யுத்த வீரனாய் விளங்கியதாலும், மல்யுத்தர்களுக்குள் மிகச் சிறந்தவராக விளங்கியதாலும் 'மாமல்லர்' என்று அழைக்கப்பட்டுள்ளார்.

அறமும்! போர்திறமும்!

நரசிம்மர் கட்டடக் கலையை பெரிதும் போற்றியவர். மகாபலிபுரத்தில் புகழ்பெற்ற பஞ்சபாண்டவ ரதங்கள் என்றழைக்கப்படும் ஐந்து ஒற்றைக்கல் கோவில்களும் அர்ச்சுனன் தபசு என்றழைக்கப்படும் புடைப்புச் சிற்பங்களும் இவர் காலத்தில் உருவாக்கப்பட்டவை.

நரசிம்மவர்மர் சைவ மதத்தைப் பின்பற்றினாலும் நாட்டிலுள்ள மற்ற மதத்தினரையும் வேற்றுமை பாராமல் நடத்தினர். இவரின் காலத்தில் தான் யுவான் சுவாங் புத்தமதம் பரப்ப காஞ்சி வந்தார்.

பல்லவர்களின் பரம எதிரி சாளுக்கியர்கள். இவர்கள் வாதாபியை தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செலுத்தினர். பல்லவர்களும் சாளுக்கியர்களும் எப்போதும் முரண்பாட்டிலும் பூசலிலுமே இருந்து வந்துள்ளனர். மகேந்திரவர்மர் காலத்தில் சாளுக்கிய மன்னர் புலிகேசி பல்லவர்களை வீழ்த்தினார். போரில் காஞ்சியின் வடபகுதி முழுவதையும் பல்லவர்கள் இழந்தனர். இருப்பினும் தலைநகரை மட்டும் தக்கவைத்துக் கொண்டனர். அரியணை ஏறிய நாள் முதலே, தன் தந்தைக்கு நேர்ந்த அவமானங்களை எண்ணி பழிவாங்க துடித்த நரசிம்மருக்கு தானாய் வந்து வாய்ப்பளித்தார் புலிகேசி. பல்லவர்களின் தலைநகரமான காஞ்சியை நோக்கி படையெடுத்தார் புலிகேசி. ஆனால், இந்தமுறை நடந்த மூன்று போரிலும் நரசிம்மர் வெற்றி பெற்று, அவர்களை நாட்டை விட்டு வெளியேற செய்ததோடு, மீண்டும்  வாதாபி மீது படையெடுத்தார். போரில் வென்றதோடு மட்டுமல்லாமல் புலிகேசியைக் கொன்றார். இதனால் 'வாதாபி கொண்டான்' என்றும் போற்றப்பட்டுள்ளார். வாதாபியிலுள்ள ஒரு கோவில் கல்வெட்டிலும் இச்செய்தி பதிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கோவில்கள் அதிகமாக காணப்படும் மாநிலமாக தமிழ்நாடு விளங்கினாலும், அவற்றின் பின்னால்  உள்ள வரலாற்றை அறிய யாரும் முற்படுவதில்லை. இன்று தஞ்சை பெரியகோவிலைக் கட்டிய 'இராசராசன் ' புகழ் எவ்வாறு கோலோச்சியிருக்கிறதோ, அதற்கு இணையான ஒரு பேரரசன் தான் இந்த மாமல்லன் என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை. 

மாமல்லரின் போர்வீரங்களும், கலைப்பொக்கிஷங்களும் மாமல்லபுரத்தின் வாயிலாய் என்றென்றும் வாழும்.

பெற்றோர்களை தெருவில் பிச்சையெடுக்க விடும் பிள்ளைகள்! கொடுமையின் உச்சம்!

இது தெரிஞ்சா முட்டையை தலையில் தடவ மாட்டீங்க! 

அடிக்கடி சிறுநீர் கழிக்கும் பழக்கம் உள்ளவரா நீங்கள்? அச்சச்சோ ஜாக்கிரதை!

மறுபடியும் சூடுபடுத்தி இந்த உணவையெல்லாம் சாப்பிடாதீங்க ப்ளீஸ்!

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

SCROLL FOR NEXT