Ice hotel 
கலை / கலாச்சாரம்

30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும்... ஆயுட்காலம் மூன்று மாதங்கள் மட்டுமே! புரியலையா? படிச்சு பாருங்க தெரியும், புரியும்!

தேனி மு.சுப்பிரமணி

பனி விடுதி (Ice hotel) என்பது பனித்துகளைக் கொண்டும், பனிக்கட்டிகளைச் செதுக்கியும் உருவாக்கப்படும் ஒரு தற்காலிக விடுதி ஆகும். சாகசத்தையும் மாற்றத்தையும் விரும்புபவர்களுக்காக இவை அமைக்கப்படுகின்றன. இந்த விடுதிகள் உறைநிலைக்குக் கீழ் வெப்பநிலை உள்ள காலத்தில் பனித்துகளைக் கொண்டும், பனிக்கட்டிகளைக் கொண்டும் உருவாக்கப்படுகின்றன. இவை பொதுவாக, ஒவ்வொரு ஆண்டும் மீண்டும் மீண்டும் கட்டப்படுகின்றன. இது போன்ற விடுதிகள் பல நாடுகளில் உள்ளன. 

இந்த விடுதிகளில் தங்கும் பயணிகள் ஆர்வமாக புதுமைகளை விரும்புபவர்களாகவும், அசாதாரண சூழலில் இருக்க விரும்புபவர்களாகவும் இருப்பர். வாடிக்கையாளர்கள் பனிக்கட்டியால் செய்யப்பட்ட படுக்கைகளில் தூங்கத் தயாராக இருக்க வேண்டும். இவர்களின் உடல் வெப்பத்தைப் பாதுகாக்க, கம்பளிப் போர்வைகள் மற்றும் தூக்கப் பைகள் போன்றவை மிகுந்த குளிர்ந்த வெப்பநிலையைத் தாங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். அறைகளில் வெப்பநிலை பூஜ்யம் செல்சியசுக்குக் கீழே இருக்கும். ஆனால், வெளி வெப்பநிலையை விட வெப்பமாக இருக்கும்.

இப்பனி விடுதிகளுள், வட அமெரிக்கக் கண்டத்தில் உள்ள கனடா நாட்டின் கியூபெக் மாகாணத்தில், கியூபெக் நகரில் கட்டப்பட்டுள்ள பனி விடுதியும் ஒன்றாகும். இந்தப் பனி விடுதி 2001 ஆம் ஆண்டு புத்தாண்டு நாளில் திறக்கப்பட்டது.  முதல் ஆண்டின் போது, கியூபெக் நகரின் புறநகரில் மோண்ட்மோரின்ச அருவி பூங்கா என்னுமிடத்தில் அமைக்கப்பட்டது. அடுத்த ஆண்டு டுச்சிசெனரி விடுதிக்கு இது மாற்றப்பட்டது. இது 2002 ஆம் ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை அங்கு செயல்பட்டது. 2011 ஆண்டு அங்கு கட்டப்பட்டிருந்த, விடுதியான டி க்லேஸ் செர்லெசுபோர்க் ஒட்டலுக்கு இடம் மாற்றப்பட்டது. இந்த விடுதி கியூபெக் நகரில் இருந்து 5 கி.மீ வடக்கே அமைக்கப்படுகிறது. இதுதான் வட அமெரிக்காவின் முதல் மற்றும் ஒரேப் பனி விடுதியாகும். 

இந்தப் பனி விடுதி ஒவ்வோராண்டும் டிசம்பர் மாதம் கட்டப்பட்டு ஜனவரி மாதம் திறக்கப்படுகிறது. இந்தப் பனி விடுதியின் ஆயுள் என்பது ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் வரை... மூன்று மாதங்கள் மட்டுமே. அதன் பிறகு வெப்பத்தில் இது கரைந்து போய்விடும். அடுத்த ஆண்டு மீண்டும் கட்டப்படும்.

இந்தப் பனி விடுதி முதன் முதலில் 2001 ஆம் ஆண்டில் திறந்து போது, 11 இரட்டைப் படுக்கைகயறைகளுடன் திறக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது 51 இரட்டைப் படுக்கையறைகளுடன் அமைக்கப்படுகிறது. அனைத்தும் பனிக்கட்டியால் அமைக்கப்பட்ட இந்த விடுதியில் தரை மரப்பலகையால் அமைக்கப்படுகிறது. 

வாடிக்கையாளர்களுக்கு தேவைப்படும் சமயத்தில் வசதியான மெத்தை, தூக்கப் பை, படுக்கை விரிப்பு, தலையணைகள் போன்றவை அறைகளில் வழங்கப்படுகின்றன. கழிவறைகள் மட்டும் சூடான ஒரு தனிப்பட்ட அமைப்புடன் அமைந்துள்ளது. இந்த விடுதி ஒன்றரை மாதங்களில் 50 தொழிலாளர்களால் உருவாக்கப்படுகிறது. இந்த விடுதியைக் கட்ட ஒரு சிறப்பு வாய்ந்த கலவையைப் பயன்படுத்தி, அதன் சொந்தப் பனிக் கட்டிகள் கொண்டு கட்டப்படுகிறது. முதலில் உலோகச் சட்டங்களை தாங்கிகளாக பயன்படுத்தி கட்டப்பட்டு, பனிக்கட்டிகள் சில நாட்கள் கல்லாக உறைய அனுமதிக்கப்படுகிறது, பின்னர் தாங்கிகள் நீக்கப்படும். இந்தப் பனி விடுதி கட்ட 30,000 டன்கள் பனித்துகளும், 500 டன்கள் பனிக்கட்டிகளும் தேவைப்படுகின்றன. விடுதியின் சுவர்கள் ஒவ்வொன்றும் நான்கு அடி தடிமன் கொண்டுள்ளன.

இந்த விடுதி ஒரு 'சுற்றுலா தலம்' என விவரிக்கப்படுகிறது. இதற்கு கியூபெக் சுற்றுலாத்துறையின் ஆதரவும் உள்ளது. விடுதியில் சுற்றுலா வருபவர்களுக்கு ஆங்கிலம் மற்றம் பிரெஞ்சு மொழிகளில் சேவைகள் வழங்கப்படுகின்றன. கிழமையின் ஏழு நாட்களும் செயல்படுகிறது. பதின்மூன்றாவது பருவத்தின் முடிவில் ஒரு மில்லியன் பார்வையாளர்கள் மற்றும் 43,000வரை இரவு விருந்தினர்கள் வந்ததாக அதிகாரப்பூர்வபூர்வ புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.

இங்கு உள்ள ஒரு திருமணக்கூட தேவாலயத்தில் திருமணங்களும் நடத்தப்படுகின்றன. உலகிலிருக்கும் 10 கனவுத் திருமணக் கூடங்களில் ஹோட்டல் டி க்லேஸ் இடம் பெற்றுள்ளது. இங்கு பதின்மூன்றாவது பருவத்தின் முடிவில் 275 திருமணங்கள் நடத்தப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.

இத தெரிஞ்சுகிட்டா உங்க வீட்டு டைல்ஸ் கறையை இருக்கும் இடம் தெரியாமல் நீக்கிவிடலாம்! 

உணவுச் சேர்மானங்களின் குணநலன்கள் என்னவென்று தெரியுமா?

வெளியே செல்லும்போது கருப்புப் பூனை குறுக்கே போய்விட்டதா? போச்சு! 

இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை விட்டு வெளியேறும் அந்த நபர் யார்?

நவகிரகங்கள் நல்கும் நன்மைகளும்; வித்தியாசமான கோல நவகிரகங்களும்!

SCROLL FOR NEXT