வயதாவது என்பது ஒரு இயற்கையான செயல்முறை. இதனால், சருமத்தில் பல மாற்றங்கள் ஏற்படுகின்றன. இளமைப் பொலிவு மங்கி, சுருக்கங்கள் தோன்றி, சருமம் தன் இறுக்கத்தை இழக்கிறது. இந்தப் பதிவில் வயதானால் ஏற்படும் பொதுவான சருமப் பிரச்சனைகள் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
சருமம் வெளிப்புற சூழலில் இருந்து நம்மை பாதுகாத்து உடல் வெப்பநிலையை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது. இளம் வயதில் சருமம் கொலாஜன் மற்றும் எலாஸ்டின் போன்ற புரதங்களை அதிக அளவில் உற்பத்தி செய்கிறது. இந்த புரதங்கள் சருமத்திற்கு இறுக்கத்தையும் நெகிழ்ச்சியையும் அளிக்கின்றன. ஆனால், வயதாகும்போது இந்த புரத உற்பத்தி குறைகிறது. இதன் விளைவாக சருமம் தளர்ச்சியடைந்து சுருக்கங்கள் தோன்றும்.
வயதானால் ஏற்படும் பொதுவான சருமப் பிரச்சனைகள்:
கொலாஜன் மற்றும் எலாஸ்டிக் குறைபாடு காரணமாக சருமத்தில் சுருக்கங்கள் தோன்றும். குறிப்பாக, முகம், கழுத்து, கைகள் போன்ற பகுதிகளில் இவை அதிகமாகத் தெரியும்.
சூரிய ஒளி, வயது மற்றும் மரபணு காரணிகள் ஆகியவை சருமத்தில் கருப்பு நிற புள்ளிகள் தோன்றுவதற்கு காரணமாக அமையும். வயதாகும் போது சருமம் ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளும் திறனை இழக்கிறது. இதனால், சருமம் வறண்டு செதில்களாக உறிந்து அரிப்பை ஏற்படுத்தும்.
கொலாஜன் மற்றும் எலாஸ்டின் குறைபாடு காரணமாக சருமம் தளர்ச்சியடைந்து இறுக்கத்தை இழக்கிறது. சிலருக்கு சோரியாசிஸ் போன்ற நாள்பட்ட நோய் ஏற்படும். இது முகத்தில் சிவப்பு நிறத்தை ஏற்படுத்தி, இரத்த நாளங்களை வெளியே காண்பிக்கும்.
சூரிய ஒளியில் உள்ள புற ஊதா கதிர்கள் நீண்ட காலமாக சருமத்தை பாதித்து சருமப் புற்றுநோயை ஏற்படுத்தும் அபாயம் அதிகரிக்கலாம்.
வயதானால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளை நிர்வகித்தல்:
சூரிய ஒளியிலிருந்து சருமத்தை பாதுகாக்க வெளியே செல்லும்போது சன் ஸ்கிரீன் பயன்படுத்துங்கள். வறண்ட சருமத்தை தடுக்க தினமும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்தவும். என்றும் ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், நார்ச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ணுங்கள். இத்துடன் தினசரி போதுமான தூக்கத்தைப் பெற வேண்டியது அவசியம். சரும பிரச்சனை தொடர்பாக தோல் மருத்துவரை அணுகி அவ்வப்போது ஆலோசனை பெறுவது நல்லது.
வயதானால் ஏற்படும் சருமப் பிரச்சனைகளை முற்றிலும் தடுக்க முடியாது என்றாலும், சரியான பராமரிப்பு மூலம் அவற்றை நிர்வகிக்க முடியும். ஆரோக்கியமான வாழ்க்கை முறை சரியான உணவு போதுமான தூக்கம் மற்றும் சரும பாதுகாப்பு நடவடிக்கைகள் ஆகியவை சருமத்தை இளமையாக வைத்திருக்க உதவும்.