அழகாக ஜொலிக்க யாருக்கு தான் ஆசையிருக்காது. உடனடியாக ஒருவருடைய முகம் பொலிவு மற்றும் ஜொலிப்பு தன்மை பெறுவதற்கு அதிக அளவு பணம் செலவு செய்து பேசியல் செய்து கொள்ள வேண்டிய அவசியமில்லை.
மக்கள் உணவுக்காக பயன்படுத்தும் பல பொருட்களில் நெய் இன்றியமையாத ஒன்றாகும். குறிப்பாக நெய்யை பயன்படுத்தி சமைக்கும் உணவுகள் சுவையாகவும் ஊட்டச்சத்து நிறைந்ததாகவும் இருக்கும். நெய்யை எந்த உணவில் சேர்த்தாலும் அதன் சுவை பன்மடங்கு அதிகரிக்கும். அந்த அளவுக்கு நெய்யானது உணவின் தரத்தை மேம்படுத்துகிறது. ஆனால் இந்த நெய்யை உணவைத் தவிர நம்முடைய சரும பொலிவுக்காகவும் பயன்படுத்தலாம்.
பல பெண்களுக்கு தங்கள் சருமத்தை முறையாக பராமரிக்கத் தெரிவதில்லை. அப்படியும் சிலர் தங்களின் சருமத்திற்கு கவனம் செலுத்தினாலும், சந்தையில் கிடைக்கும் ரசாயன பொருட்களையே வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் பலருக்கு அவர்கள் எதிர்பார்க்கும் முகப்பொலிவு கிடைப்பதில்லை. ஆனால் எளிதாக வீட்டில் இருக்கும் நெய்யைப் பயன்படுத்தி சருமத்தை பளபளப்பாக்க முடியும் என்றால் நம்புவீர்களா. நெய்யில் அதிகப்படியான ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் உள்ளது. இது தோலுக்கு ஆரோக்கியத்தைத் தந்து பளபளப்பான சருமத்தை ஏற்படுத்தும்.
நெய் மாய்ச்சுரைசர்:
ஒரு பெரிய சமமான பித்தளை தட்டு எடுத்துக்கொள்ளவும். இதில் இரண்டு குழி கரண்டி நெய்யை ஊற்றவும். இதில் 3 டீஸ்பூன் அளவு தண்ணீர் சேத்துக்கொள்ளவும். தற்போது அதனை நன்றாக கடைய வேண்டும். இதில் இருந்து பிரிந்து வரும் தண்ணீரை அகற்றவும். பின் மீண்டும் தண்ணீர் தெளித்து இந்த முறையை நூறு முறை செய்ய வேண்டும்.
தற்போது நெய் ஒரு கிரீம் பதத்திற்கு மாறி வரும். நாம் அதை தொட்டு பார்க்கும் போதே நமக்கு ஒரு மாய்ச்சுரைசர் போல் தோன்றும். இதனை ஒரு கண்ணாடி பாட்டிலில் சேமித்து வைக்கவும். இதனை ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தி கொள்ளலாம். இதை தினமும் காலை மற்றும் மாலையில் முகத்தை கழுவிய பின் பயன்படுத்தவும். இது உங்கள் சருமத்தை பாதுகாத்து பளபளப்பாக மாற்றும்.