Wax moth 
பசுமை / சுற்றுச்சூழல்

மெழுகு புழுக்கள் - பிளாஸ்டிக் கழிவுகளுக்கு தீர்வாக அமையுமா?

ராதா ரமேஷ்

நாம் அன்றாடம் வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்சினைகளில் மாசுபாடு பிரச்சனைகளும் ஒன்று. மனிதன் பயன்படுத்தக்கூடிய அனைத்து பொருள்களிலும் மாசுபாடு என்பது மிகுதியாகவே காணப்படுகிறது. உள் இழுக்கும் மூச்சுக்காற்று தொடங்கி நீர், நிலம் என அனைத்திலும் மாசுபாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதில் ஒரு பிரிவாக இருக்கக்கூடிய நில மாசுபாடு பற்றியும் அதற்கான தீர்வுகளை பற்றியும் இப்பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

நம் வாழும் இந்த பூமியில் நம் கண்ணுக்கு முன் பார்க்கும் கழிவுகளில் அதிகமாக பார்க்கக் கூடியது பிளாஸ்டிக் கழிவுகள். சராசரியாக நாம் அனைவரும் ஒரு நாளில் ஒரு பாலிதீன் பையையாவது பயன்படுத்தி விடுகிறோம். முன்கூட்டிய திட்டமிடல் இல்லாமல் பல்வேறு நேரங்களில் கடைகளுக்கு செல்லும் போதோ, அல்லது அலுவலகத்தில் இருந்து வீட்டிற்கு வரும்போது தேவைப்படும் பொருட்களை வாங்குவதற்கோ உடனடியாக கை கொடுப்பது இந்த பாலித்தீன் பைகள் தான். பயன்படுத்துவதற்கு மிகவும் எளிதாக உள்ளது, வியாபாரிகளுக்கு பொருளை விற்பனை செய்யக்கூடிய ஒரு வழியாகவும் உள்ளது, இப்படி பல காரணங்கள் கூறி நம்மால் பிளாஸ்டிக் பயன்பாட்டை முழுமையாக இன்று வரை கைவிட முடியவில்லை.

ஆனால் அதே சமயத்தில் இத்தகைய பாலித்தின் பைகளால் ஏற்படும் விளைவுகளையும், அதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் மாசுபாட்டையும் நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. ஒவ்வொரு வருடமும் உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 400 மில்லியன் டன் பிளாஸ்டிக் கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. மலை போல சேர்ந்து விடக்கூடிய இந்த பிளாஸ்டிக் கழிவுகள், மண்ணில் காற்றோட்டத்தை தடுப்பதோடு, நீர் சுழற்சிக்கும் மாபெரும் தடையாக இருக்கின்றன. நிலப் பகுதிகளில் தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் கழிவுகள் ஆங்காங்கே வடிகட்டிகள் போல் செயல்படுவதால் பெய்யும் மழைநீரானது நிலப்பகுதிக்குள் செல்லாமல் தடுக்கப்பட்டு நிலத்தடி நீர்மட்டம் குறைவதற்கும் வாய்ப்பாக உள்ளது.

அதேசமயம் நிலப்பகுதியில் உணவு தேடக்கூடிய விலங்குகள் தவறுதலாக இத்தகைய பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் போது அவை தொண்டையில் சிக்கிக் கொண்டு உயிரிழப்புகள் ஏற்படுவதோடு நாளடைவில் செரிமான கோளாறுகளையும் ஏற்படுத்தி கால்நடைகளின் உடல்நலத்தை சீர்குலையச் செய்கின்றன. எனவே நாம் பயன்படுத்தக்கூடிய இந்த பிளாஸ்டிக் கழிவுகளால் சேரும் குப்பைகள் நுண்ணுயிரிகள் பெருகும் இடமாக மாறி வருகின்றன. இதன் மூலம் கால்நடைகளுக்கு தொற்றுகள் எளிதில் ஏற்படுவதோடு, அதன் மாசுக்கள் காற்றிலும் கலந்து மனிதர்களையும் கடுமையாக பாதிப்படையச் செய்கின்றன.

இதற்கு மாற்றாக பல்வேறு பொருட்கள் நாளுக்கு நாள் புதிது புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு வந்தாலும், இன்றளவும் கூட பிளாஸ்டிக் கழிவுகளின் பயன்பாட்டை குறைப்பது என்பது மிகப்பெரிய சவாலாகவே இருந்து வருகிறது. வியாபாரத்தை மட்டுமே மையப்படுத்தி எடுக்கப்படும் அதிகப்படியான பிளாஸ்டிக் பயன்பாடுகளினால் ஏற்படும் பிரச்சனைகள் தலைமுறை தலைமுறையாக தொடர்வதற்கு வாய்ப்பு உள்ளது. இன்னும் நிதானமாக சிந்தித்துப் பார்த்தால் நாம் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தும் 5 பொருள்களில் குறைந்தது 3 பொருள்கள் பிளாஸ்டிக்கை பயன்படுத்தி செய்யப்பட்ட பொருட்களாக உள்ளன.

பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதற்காகவும் அதனை மறுசுழற்சிக்கு பயன்படுத்தி, கழிவுகளின் அளவை குறைப்பதற்காகவும் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வாறு ஆராய்ச்சி செய்யப்பட்ட போது தான் தேனீ வளர்ப்பு முறையில் மாபெரும் சவாலாக இருக்கக்கூடிய மெழுகு புழுக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தேனீ வளர்ப்பில் பயன்படுத்தும் இந்த மெழுகும், பிளாஸ்டிக்கும் ஓரளவுக்கு அதன் தன்மையில் ஒத்துப் போகிறது. 4 மெழுகு புழுக்களை எடுத்து ஒரு பாலிதீன் பையில் போட்டு கட்டி வைத்தால் சிறிது நேரத்தில் அந்தப் புழுக்கள் அந்த பையில் சிறு சிறு துளைகளை இட்டு வெளியே வந்து விடுகின்றன.

எனவே பிளாஸ்டிக் கழிவுகளை குறைப்பதில் இந்த வகை மெழுகு புழுக்கள் பயன்படுத்த முடியுமா? என்பது பற்றி பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மெழுகு புழுக்கள் பிளாஸ்டிக்கை சிறிது சிறிதாக சிதைத்து ஜீரணிப்பது போல் செரித்து விடுகின்றன. அதற்குக் காரணம் அந்த புழுக்களின் வாயில் சுரக்கக்கூடிய திரவங்கள் ஆகும். இந்த மெழுகு புழுக்களின் உமிழ் நீரில் செரிஸ், டிமீட்டர் என்ற இரண்டு நொதிகள் உள்ளன. இந்த நொதிகள் தான் பிளாஸ்டிக்கில் உள்ள பாலி எத்திலினை ஆக்சிடைஸ் செய்து சிதைவை ஏற்படுத்த உதவுகின்றன. அதே சமயம் பிளாஸ்டிக் கழிவுகளை அழிப்பதற்கு இந்த மெழுகு புழுக்கள் மட்டுமே தீர்வாக இருக்கும் என்றும் உறுதியாக சொல்லி விட முடியாது.

நாளுக்கு நாள் நம்முடைய தேவைகளுக்கு ஏற்ப பல்வேறு பொருட்களை கண்டுபிடித்துக் கொண்டிருப்பதை போன்று, அந்தப் பொருள்களின் கழிவுகளினால் எந்த ஒரு பாதிப்புகளும் ஏற்படுத்தாத அளவுக்கு அதனை அழிப்பதோ அல்லது மறு உருவாக்கம் செய்வதோ மிகவும் முக்கியமானது. எனவே நல்ல ஒரு சுகாதாரமான வாழ்க்கையை வாழ்வதற்கு கண்டுபிடிப்புகளுக்கு கொடுக்கும் பங்களிப்பை விட ஒரு மடங்கு அதிகமாக அதனால் வரும் பக்க விளைவுகளையும் சரி செய்வதற்கு அதிகம் மெனக்கெட வேண்டிய தேவை உள்ளது.

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

90-களில் இந்திய சினிமாவில் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிய நடிகை! யார் யாருக்கு எத்தனை கோடி?

மஞ்சமாதா என்கிற மாளிகைபுரத்து அம்மன் வரலாறு தெரியுமா?

SCROLL FOR NEXT