உடல்நலத்திற்கு நன்மை தரும் கீரைகளை சாகுபடி செய்ய குறைந்தபட்சம் ஒரு மாதமே போதுமானது. ஒருமுறை விதைத்து விட்டால் பலமுறை சாகுபடி செய்வது தான் கீரை சாகுபடியின் சிறப்பம்சம். கீரைகளை வாங்கும் பொதுமக்கள் பலரும், தற்போது மைக்ரோ கீரைகளை வாங்குவதிலும் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதிகரித்து வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப, உணவின் தேவையும் அதிகரித்துள்ளது. இந்நிலையில் உணவு முறையில் நாம் சில மாற்றங்களை செய்தால், அது உடல்நலனுக்கு நிச்சயமாக பலன் அளிக்கும். இதற்கு மைக்ரோ கீரைகள் மிகவும் உதவியாக இருக்கும்.
தானியங்கள், கீரைகள், மூலிகைகள் மற்றும் காய்கறிகளின் இளம் கீரைகள் தான் மைக்ரோ கீரைகள் என அழைக்கப்படுகிறது. பொதுவாக விதைகள் முளைக்கத் தொடங்கும் நிலையை முளை என்று அழைப்பார்கள். முளைகள் 2 முதல் 3 அங்குலம் வரை வளரும். இந்த முளை வளர்ந்து வரும் அடுத்த நிலை தான் மைக்ரோ கீரை. மைக்ரோ கீரையானது வித்திலைகள், மையத்தண்டு மற்றும் இளம் ஜோடி இலைகளுடன் அறுவடை செய்யப்படும். மைக்ரோ கீரைகள் 8 முதல் 10 அங்குலம் வரையில் வளர்க்கப்படும். விதைகளை விதைத்த பிறகு 10 முதல் 15 நாட்களுக்குள் மைக்ரோ கீரைகள் அறுவடைக்குத் தயாராகி விடும்.
முளைகள் வளர்வதற்கு சூரிய ஒளியோ, தண்ணீரோ தேவையில்லை. ஆனால் கீரைகள் வளர்வதற்கு இவையிரண்டும் அவசியம். மைக்ரோ கீரைகள் அதிக சுவையும், மணமும் கொண்டிருப்பதால் மக்களால் அதிகமாக விரும்பப்படுகிறது. இருப்பினும் இதன் சாகுபடி குறைந்த பரப்பளவில் இருக்கிறது. விவசாயிகள் மைக்ரோ கீரைகளை அறுவடை செய்ய ஆர்வம் காட்டினால், குறைந்த நாட்களிலேயே நல்ல இலாபத்தைப் பெற முடியும்.
உற்பத்தி முறை:
மைக்ரோ கீரைகளை வளர்க்க மணலுடன், வெர்மிகுலைட் மற்றும் பர்லைட்டைப் பயன்படுத்தலாம். 1 அல்லது 2 அங்குல ஆழத்திற்கு இந்தக் கலவையை நிரப்பினால் போதும். சில வகையான கீரைகளுக்கு குறைந்த அளவிலான உரமே போதுமானது. ஒருசில கீரைகளுக்கு உரமே தேவையிருக்காது. ஏனெனில் விதைகளே முளைப்பதற்கு ஏற்ற ஊட்டச்சத்துகளை தன்னகத்தே கொண்டிருக்கும். விதைகள் முளைத்தவுடன் காலையில் மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் போதும். அடுத்த 15 நாட்களுக்குள் மைக்ரோ கீரைகள் அறுவடைக்குத் தயாராகி விடும். பாதுகாப்பான சூழலில் வளர்க்கப்படுகின்ற மைக்ரோ கீரைகள் அதிக சுவையுடன் இருக்கும்.
வீட்டிலேயே கூட மைக்ரோ கீரைகளை வளர்க்க முடியும். கண்ணாடியால் ஆன கொள்கலன் அல்லது தொட்டியில் மைக்ரோ கீரைகளை வளர்க்கலாம். விதைகளை 6 முதல் 8 மணி நேரத்திற்கு ஊற வைத்து, வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த விதைகளைத் தொட்டியில் விதைத்தால், அடுத்த 5 நாட்களில் முளைக்கத் தொடங்கி விடும். பிறகு 2 வாரத்திலேயே நாம் அறுவடை செய்து கொள்ளலாம். அதிக ஊட்டச்சத்துகள் நிரம்பிய மைக்ரோ கீரைகளை வளர்க்க இன்றே தொடங்குங்கள். ஏனெனில் வெகு விரைவாக, குறைந்த செலவில் மைக்ரோ கீரைகளை நம்மால் வளர்த்தெடுக்க முடியும்.