விவசாயிகள், கால்நடை வளர்ப்புக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்களோ, அதே அளவிற்கு தற்போது மீன் வளர்ப்பின் மீதான ஆர்வமும் அவர்களுக்கு அதிகரித்து இருக்கிறது. ஏனென்றால், மீன் வளர்ப்பு அதிக லாபம் ஈட்டும் தொழிலாக இருக்கிறது என்பதால்தான். மூன்று பக்கம் கடலால் சூழப்பட்டுள்ள இந்தியாவில் கடல் மீன் தேவைகளுக்கு ஏற்ப ஆற்று மீன் தேவையும் அதிகரித்திருக்கிறது. ஆற்று மீன்களை விரும்பி வாங்கி உண்ணும் மக்கள் அதைத் தொடர்ந்து வாங்கி பயன்படுத்துகின்றனர். இதனால் ஏரி, குளங்கள், நீர்நிலைகள் ஆகியவற்றை குத்தகை முறையில் ஏலம் எடுத்து அதில் மீன் வளர்ப்பை மேற்கொள்ளும் நடைமுறை தற்போது தமிழ்நாட்டில் அதிகரித்துள்ளது.
மேலும், குறைந்த முதலீட்டில், குறைந்த பணி நேரங்களை ஒதுக்கினால் அதிக அளவில் லாபம் பெற முடியும் என்பதால் மீன் வளர்ப்பை நோக்கி விவசாயிகள் படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். அவர்களுக்கு நோய் தடுப்பு, தீவன மேலாண்மை ஆகியவற்றை கவனமோடு கையாள வேண்டும் என்றும் மீன் வளத்துறை தெரிவித்துள்ளது.
எந்த வகை மீன்கள் வளர்ப்பு மூலம் அதிகம் சம்பாதிக்க முடியும் என்பதை பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம். இந்தியாவில் இறால் மீன் தேவை அதிகரித்து இருக்கிறது. அதன் ஏற்றுமதியும் முக்கிய வர்த்தக நடவடிக்கையாக இருக்கிறது. இதனால் இறால் மீன் வளர்ப்பு பிரதான வர்த்தக நடவடிக்கையாகும். தமிழ்நாடு, ஆந்திரா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்கள் ஆண்டிற்கு இறால் வளர்ப்பு மூலம் பல நூறு கோடி ரூபாய் அளவிற்கான வர்த்தகத்தை மேற்கொள்கின்றனர்.
கேட் பிஷ் வளர்ப்பு மகூர், கெளுத்தி மீன் வகைகளைக் கொண்டதாகும். இது குளங்கள், தொட்டிகளில் வளர்க்க ஏற்ற வகையாகும். திலாப்பியா வகை, இது விரைவாக வளரும் மீன் இனமாகும். இதன் மூலம் குறைந்த நாளில் அதிக வருவாயை ஈட்ட முடியும். குறிப்பாக, நன்னீரில் மட்டுமே இவ்வகை மீன்கள் வளரும்.
ரேகு கேட்லா கெண்டை வளர்ப்பு, இது அதிக லாபம் தரும் மீன் வகையாகும். இவற்றை உற்பத்தி செய்வதன் மூலம் அதிக அளவிலான வருமானத்தை ஈட்ட முடியும். பிரௌன் சார்ப் மீன் குளத்து நீரில் மட்டுமே வளரக்கூடியது. முர்ரல் பாம்பு தலை கொண்ட மீன். இது அதிக மக்கள் விரும்பி உண்ணும் மீன் வகைகளில் ஒன்று. மீனுடன் முத்து வளர்ப்பு ஆகியவையும் பயன் தரும் வர்த்தக நடவடிக்கையாக உள்ளது. ஒருங்கிணைந்த மீன் வளர்ப்பு மூலம் இறால், நண்டு, வாத்து வளர்ப்பும் நல்ல வணிக செயல்பாடுகளாக உள்ளன.
அலங்கார மீன் வளர்ப்பு தற்போது லாபம் தரும் தொழிலாக மாறி இருக்கிறது. மிகக் குறைந்த முதலீட்டில் தினசரி ஆயிரக்கணக்கில் வருமானம் ஈட்ட முடியும். குறிப்பிட்ட சில மீன் வகைகள் பல லட்சம் வரை விற்பனை செய்யப்படுவதால் அலங்கார மீன் வளர்ப்பு தற்போது நகர்ப்புற பகுதிகளில் அதிகரித்து வருகின்றன.