வெண்டைக்காய் கிலோ இரண்டு ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகள் மிகப்பெரிய நஷ்டத்தை அடைந்திருக்கின்றனர். இதனால் விளைவித்த வெண்டைக்காய்களை ஆடு, மாடுகளை மேயவிட்டு அழித்து வருகின்றனர்.
திருச்சி மாவட்டம், மணிகண்டம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளிலும் வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டிருக்கிறது. மேலும், அந்தநல்லூர் ஒன்றியம், மணப்பாறை தாலுகாவிலும் அதிக அளவில் காய்கறிகள் பயிரிடப்பட்டுள்ளன.
கடந்த இரண்டு மாதத்துக்கு முன்பு வெண்டைக்காய் கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் அதிக அளவில் வெண்டைக்காயை பயிரிட்டுள்ளனர். இவ்வாறு மணிகண்டம் ஒன்றியத்தில் மட்டும் சுமார் 50 ஏக்கருக்கு அதிகமான பரப்பளவில வெண்டைக்காய் சாகுபடி செய்யப்பட்டு இருக்கிறது. பயிரிட்டு 45 நாட்களில் பயன்தரும் வெண்டைக்காய் தற்போது அறுவடைக்கு தயாராகி உள்ளது. விவசாயிகள் பலரும் அறுவடை செய்த வெண்டைக்காய்களை விற்பனை நிலையங்களில் விற்க கொண்டுவந்த பொழுது அதிக அளவிலான வெண்டை வரத்து காரணமாக 40 கிலோ மூட்டையை 80 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய முடிவதாக வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து விவசாயி ஒருவர் தெரிவித்தபோது, ‘வெண்டைக்காய் 2 மாதத்துக்கு முன்பு கிலோ 40 முதல் 50 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதை அடுத்து, மணிகண்டம் ஒன்றியத்தை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் காய்கறிகளை அதிகம் பயிரிடத் தொடங்கினர். குறிப்பாக, வெண்டைக்காய் அதிகம் பயிரிடப்பட்டிருக்கிறது. தற்போது அறுவடை முடிந்து விற்பனைக்குக் கொண்டு வரும்பொழுது 40 கிலோ மூட்டை வெண்டைக்காயை 80 ரூபாய்க்கு விற்பனை செய்ய முடிகிறது. கிலோ 2 ரூபாய்க்கே விற்பனையாவதால் விவசாயிகள் மிகப்பெரிய அளவில் நஷ்டத்தை அடைந்திருக்கின்றனர்.
ஒரு ஏக்கரில் 80 கிலோ வெண்டைக்காய் கிடைக்கும். ஏக்கருக்கு 7000 ரூபாய்க்கு விதைகள் வாங்கி பயிரிட்டு, மொத்தமாக அறுவடை வரை 15,000 ரூபாய் வரை செலவு செய்கின்றனர். குறிப்பாக, தினமும் வெண்டைக்காயை உடைக்க வேண்டும். இல்லாவிட்டால் அடுத்த நாள் வீணாகிவிடும். இதற்காக தினமும் உடைப்பதற்கு கூலியாக ஒரு கூலி ஆளுக்கு 100 ரூபாய் வழங்கப்படுகிறது. மற்றும் உடைக்கப்பட்ட காயை விற்பனைக்கு கொண்டு செல்ல போக்குவரத்துக்கு 150 ரூபாய் வரை செலவாகிறது. இவ்வளவு செலவு செய்தும் கிலோ வெண்டைக்காய் 2 ரூபாய்க்கு மட்டுமே விற்பனை செய்ய முடிவதால் விவசாயிகள் பெரும் நஷ்டத்தை அடைந்திருக்கின்றனர்.
இதனால் விவசாயிகள் வெண்டைக்காயை விற்பனைக்கு எடுத்துச் செல்லாமல் குறைந்தபட்ச பணத்தையாவது மிச்சம் செய்ய, விளைவித்த வெண்டைக்காய்களை ஆடு, மாடுகளை மேயவிட்டும், தரையிலும், ஆற்றிலும் கொட்டியும் அழித்து வருகின்றனர்’ என்று தெரிவித்தார்.