The Importance of Wetlands for Our Ecosystem 
பசுமை / சுற்றுச்சூழல்

சுற்றுச்சூழலை பராமரிக்கும் சதுப்பு நிலங்கள்! 

கிரி கணபதி

சதுப்பு நிலங்கள் நமது பூமியின் ஆரோக்கியம் மற்றும் சமநிலையை பராமரிப்பதில் முக்கிய பங்காற்றுகின்றன. இருப்பினும் இவற்றின் முக்கியத்துவத்தை உணராமல், மனித நடவடிக்கைகளால் மிகுந்த அச்சுறுத்தல்களை சந்திக்கின்றன. இந்த பதிவில் சதுப்பு நிலங்கள் சுற்றுச்சூழலுக்கு எந்தெந்த வகையில் பயனுள்ளதாக உள்ளன என்பதைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாங்க.

ஈரமான சதுப்பு நிலங்கள் ஏராளமான தாவரங்கள் மற்றும் விலங்குகளின் வசிப்பிடமாகும். அவை ஏராளமான புலம்பெயர் பறவைகள், மீன்கள், ஊர்வன மற்றும் பாலூட்டிகளுக்கு வாழ்விடத்தை வழங்குகின்றன. சதுப்பு நிலங்களில் காணப்படும் பலதரப்பட்ட தாவரங்கள் நமது கிரகத்தின் ஒட்டுமொத்த பல்லுயிர் பெருக்கத்திற்கு பங்களித்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கின்றன. 

சதுப்பு நிலங்கள் இயற்கை வடிகட்டிகளாக செயல்பட்டு தண்ணீரை சுத்திகரிக்கவும் நீரின் தரத்தை பராமரிக்கவும் உதவுகின்றன. இங்கு தாவரங்கள், மண் மற்றும் நுண்ணுயிரிகள் அதிகமாக இருப்பதால், மோசமான தண்ணீரையும் வடிகட்டி தூய்மைப்படுத்துகின்றன. மேலும் அதிக மழை மற்றும் புயல்களின்போது அதிகப்படியான தண்ணீரை உறிஞ்சி கொள்வதால், வெள்ளங்கள் தடுக்கப்படுகிறது. இதன் மூலமாக அருகில் உள்ள பகுதிகளின் வெள்ள அபாயம் குறைகிறது. 

சதுப்பு நிலங்கள் வளிமண்டலத்தில் இருக்கும் கார்பன் டை ஆக்சைடை சேமித்துக் கொள்வதால், காலநிலையை ஒழுங்குபடுத்துவதில் இவை குறிப்பிட்ட பங்காற்றுகின்றன. ஈர நிலத்தில் குவிந்திருக்கும் கரிம பொருட்கள், கார்பனை தனக்குள் சிக்க வைத்துக் கொள்வதால், பசுமை இல்ல வாயு வெளியேற்றம் குறைந்து, காலநிலை மாற்ற பாதிப்புகள் பெருமளவில் குறைக்க உதவுகின்றன.  

ஈர நிலங்கள், மீன்கள் மற்றும் பிற நீர் வாழ் உயிரினங்களுக்கு இன்றியமையாத வாழ்விடமாகும். பல்வேறு வகையான மீன் இனங்களின் உணவுக்கான ஆதாரமாகவும், தங்குமிடமாகவும் சதுப்பு நிலங்கள் செயல்படுகின்றன. குறிப்பாக ஊர்வன மற்றும் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சிகளை இவை பெருமளவு ஆதரிப்பதால், சுற்றுச்சூழலின் ஒட்டுமொத்த செயல்பாட்டிற்கும் ஈர நிலங்கள் மிகவும் முக்கியமானவை. 

கரையோரங்களில் இருக்கும் சதுப்பு நிலங்கள் கடல் அரிப்பு மற்றும் புயல் அலைகளுக்கு எதிராக மக்களுக்கு பாதுகாப்பை வழங்குகின்றன. இதில் இருக்கும் கடினமான வேர் அமைப்புகள் கரையோரங்களை திடப்படுத்தி, இயற்கை தடைகளாக செயல்பட்டு கடலோரச் சமூகங்களுக்கு பாதுகாப்பை வழங்குகிறது. 

இப்படி சதுப்பு நிலங்கள் பல்வேறு வகையில் சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு நன்மை புரிகிறது. எனவே இத்தகைய ஈரநிலங்களில் அப்படி என்ன நடந்துவிடப்போகிறது? என சாதாரணமாக நினைக்க வேண்டாம். நமது கிரகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் சதுப்பு நிலங்களும் தேவை என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். 

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT