Garden 
பசுமை / சுற்றுச்சூழல்

வீட்டிலேயே தர்பூசணி சாகுபடி செய்யலாம்: எப்படி தெரியுமா?

ரா.வ.பாலகிருஷ்ணன்

ஆர்வம் இருந்தும் நிலம் இல்லாத காரணத்தால் விவசாயம் செய்ய முடியாமல் தவித்தவர்களுக்கு வரப்பிரசாதமாய் வந்தது தான் மாடித் தோட்டம். நகரத்தில் வாழ்பவர்களும் நேரத்தை ஒதுக்கி, செடிகளை அதிகளவில் வளர்க்கத் தொடங்கியது கூட மாடித் தோட்டங்கள் வந்த பிறகு தான். இப்படியான சூழலில் நாட்கள் செல்லச் செல்ல, மாடித் தோட்டத்திலும் புதுமைகள் வந்து விட்டன. காய்கறிகள் மட்டும் விளைந்த மாடித் தோட்டத்தில், இன்று மரங்களைக் கூட வளர்க்கத் தொடங்கி விட்டனர். இவ்வரிசையில் தற்போது தர்பூசனிப் பழத்தை மாடித் தோட்டத்தில் எப்படி சாகுபடி செய்ய வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

மாடித் தோட்டத்தில் காய்கறிகளை விளைவிப்பவர்கள் பழங்களை விளைவிக்க எண்ணினால், அதற்கு தர்பூசணி நல்லத் தேர்வாக அமையும். மாடித் தோட்டத்தில் மண் கலவை மிகவும் முக்கியமானது. ஏனெனில் நாம் தொட்டியில் தான் செடி, கொடிகளை வைக்கப் போகிறோம்.

மண் கலவை:

1 பங்கு மாட்டுச் சாணம், 1 பங்கு சமையல் கழிவுகள் மற்றும் 2 பங்கு தேங்காய் நார் கொண்டு தொட்டியை நிரப்ப வேண்டும். இந்தக் கலவையை சுமார் 10 நாட்களுக்கு அப்படியே விட்டு விட வேண்டும். பிறகு இந்தக் கலவை மட்கி விதைப்புக்குத் தயாராகி விடும். இதில் தேவையான அளவை மண்ணைக் கொட்டி விதையை விதைக்கலாம். தர்பூசணி கொடி வகையைச் சேர்ந்தது என்பதால், தொட்டியில் 3 அடிக்கும் மேலாக உரம் மற்றும் மண் கலவையை நிரப்ப வேண்டியது அவசியம். இம்முறையில் மண் மற்றும் உரக்கலவையைத் தயார் செய்தால் மகசூல் அதிகமாக கிடைக்கும்.

பந்தல் அமைப்பு:

தர்பூசணியை மாடித்தோட்டத்தில் பந்தல் முறையிலோ அல்லது அப்படியே தரையில் கொடியாகவோ படர விடலாம். பந்தல் முறையில் நான்கு சாக்குப் பைகளில் மணலை நிரப்பி, ஒவ்வொன்றிலும் மூங்கில் கம்பை ஆழமாக நட வேண்டும். அடியில் கற்களைக் கொண்டு மேடை போல் அமைத்து, சாக்குப் பைகளை நான்கு மூலையிலும் வைக்க வேண்டும். அதன்பிறகு இதில் குறுக்கும் நெடுக்குமாக கயிறுகளைக் கட்ட வேண்டும். ஒருவேளை மாடியில் ஏதேனும் கம்பிகள் இருந்தால், அதனைப் பயன்படுத்தியும் பந்தல் அமைக்கலாம். தர்பூசணி அதிக எடையுடன் இருக்கும் என்பதால், பந்தல் உறுதியாக இருக்க வேண்டியது அவசியம். பந்தல் முறை ஒத்துவராது என நீங்கள் நினைத்தால், தரையில் கூட கொடிகளைப் படர விடலாம்.

தர்பூசணி கொடி நன்றாக வளரத் தொடங்கியதும், ஏற்கனவே அமைத்து வைத்திருக்கும் பந்தலில் கொடிகளை நன்றாக படர விட வேண்டும். பந்தல் முறையில் தர்பூசணி சாகுபடி செய்தால், தரையில் மேலும் சில காய்கறிகளைச் செடிகளை வளர்ப்பதற்கு இடம் கிடைக்கும். மேலும் காய்கறிச் செடிகளுக்கு நிழலாகவும் இந்த பந்தல் இருக்கும். தினந்தோறும் சமையல் கழிவுகள் மற்றும் இலைகள் போன்றவற்றையே உரமாகப் பயன்படுத்தலாம்.

தண்ணீர் பாய்ச்சுதல்:

தர்பூசணியை மாடித் தோட்டத்தில் வளர்க்கும் போது, விதை விதைத்த உடனேயே தண்ணீர் தெளிக்க வேண்டும். மேலும் தினந்தோறும் காலை அல்லது மாலை வேளையில் தண்ணீர் ஊற்றுவது அவசியமாகும். தர்பூசணி குறுகிய காலப் பயிர் என்பதால், விரைவிலேயே அறுவடைக்குத் தயாராகி விடும்.

இது மட்டும் தெரிஞ்சா அதிக நேரம் கழிவறையில் இருக்க மாட்டீங்க! 

விளையாட்டு வீரரைப் போர் வீரராக மாற்றிய கம்பீர்… என்னாவா இருக்கும்???

மணக்கும் சுக்குட்டிக் கீரை மசியலும் புடலங்காய் பொரியலும்!

உங்கள் வீட்டு நாய் ஆரோக்கியமாக இருக்க என்னென்ன உணவுகள் கொடுக்கலாம்? கால்நடை மருத்துவர் டாக்டர். பிரியா விளக்கம்!

சிறுநீரகக் கல் இவ்வளவு ஆபத்தானதா? அச்சச்சோ! 

SCROLL FOR NEXT