பேரிச்சம்பழம் அல்வா அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு இனிப்பாகும். இதன் சுவே காரணமாக உலக அளவில் அனைத்து இனிப்பு பிரியர்களின் இதயங்களிலும் சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் இதை அதிகமாக யாரும் செய்து சாப்பிடுவதில்லை. பேரிச்சம்பழம் அல்வா சாப்பிட சுவையாக இருக்கும் என்பதைத் தாண்டி இதில் ஆரோக்கிய நன்மைகளும் அதிகம் அடங்கியுள்ளன. இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களுக்கு பேரிச்சம்பழம் மிகவும் நல்லது. இந்த பதிவில் சூப்பரான சுவையில் பேரிச்சம்பழம் அல்வா எப்படி செய்வது? எனப் பார்க்கலாம் வாங்க.
பேரிச்சம்பழம் அல்வா செய்யத் தேவையான பொருட்கள்:
1 கப் பேரிச்சம்பழம்
½ கப் ரவை
¼ கப் நெய்
1 கப் பால்
½ கப் சர்க்கரை
¼ கப் நட்ஸ்
1 ஸ்பூன் ஏலக்காய் தூள்
சிறிதளவு உலர் திராட்சை
1 கப் தண்ணீர்
பேரிச்சம்பழம் அல்வா செய்முறை:
முதலில் ஒரு அடி கனமான பாத்திரம் அல்லது கடாயை அடுப்பில் வைத்து, சிறிதளவு நெய் சேர்த்து சூடானதும், ரவை சேர்த்து பொன்னிறமாக வறுக்கவும். ரவை பொன்னிறமாக மாறியதும் அதை வேறு பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ளவும்.
பின்னர் அதே கடாயில் சிறிதளவு நெய் சேர்த்து நட்ஸை பொன்னிறமாக வறுக்கவும். இவற்றையும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
அடுத்ததாக அதே கடாயில் கொட்டைகள் நீக்கி சிறிதாக நறுக்கிய பேரிச்சம் பழங்களை சேர்த்து, அவை மென்மையாகும் வரை கிளறிக் கொண்டே இருங்கள். இப்போது பேரிச்சம் பழத்தில் ரவையை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
தனியாக ஒரு வாணலியில் பால் மற்றும் தண்ணீர் சேர்த்து சூடானதும், கொஞ்சம் கொஞ்சமாக பேரிச்சம்பழம் மற்றும் ரவை கலவையில் ஊற்றிக் கிளறவும். இப்போது தேவையான அளவு சர்க்கரை சேர்த்து, மிதமான சூட்டில் கிளறிக் கொண்டே இருந்தால் அல்வா பதம் வந்துவிடும்.
இறுதியாக அதில் கொஞ்சம் கொஞ்சமாக மீதம் இருக்கும் நெய்யை சேர்த்து, இறுதியில் உலர் திராட்சை மற்றும் நட்ஸ் சேர்த்து அலங்கரித்தால் சூப்பரான சுவையில் பேரிச்சம்பழம் அல்வா தயார்.
இன்றே இதை வீட்டில் முயற்சித்துப் பார்த்து உங்களது கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.