இலந்தைப் பழம் நினைவாற்றலை அதிகரிக்கும். சீமை இலந்தை, நாட்டு இலந்தை என்று இரண்டு வகை உண்டு. இரண்டுமே சத்து நிறைந்தது. புரதம், இரும்பு சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் நிறைந்தது. சித்த மருத்துவத்தில் இதன் இலைகள் பயன்படுத்தப்படுகிறது. இலந்தைப் பழத்தில் உள்ள சபோனின்,ஆல்காய்டுகள் ரத்தத்தில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி சுத்தப்படுத்துகின்றன. புளிப்பும் இனிப்பும் கலந்த இலங்தைப் பழ ஊறுகாய் செய்வது எளிது. குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள்.
இலந்தைப் பழ ஊறுகாய் செய்யத் தேவையான பொருட்கள்:
இலந்தைப் பழம் அரை கிலோ
வெல்லம் கால் கிலோ
உப்பு ஒரு ஸ்பூன்
காய்ந்த மிளகாய் 10
இலந்தைப்பழ ஊறுகாய் செய்முறை:
இலந்தைப் பழத்தை நன்கு அலம்பி எடுத்து பழத்தின் மேல் உள்ள காம்பை நீக்கிவிடவும். வாணலியில் இரண்டு கப் நீர் விட்டு இலந்தைப் பழங்களை போட்டு நன்கு வேக விடவும். 10 நிமிடங்கள் நன்கு வேகட்டும்.
அடிக்கடி கிளற வேண்டாம். அப்படி செய்தால் பழங்கள் உடைபட்டு உள்ளிருந்து சாறுகள் வெளிப்பட்டு வழவழப்பாகிவிடும். எனவே அடிக்கடி கிளறாமல் அடுப்பை குறைவான தீயில் வைத்து வேக விடவும்.
பத்து நிமிடங்கள் கழித்து கால் கிலோ வெல்லத்தை தட்டி போட்டு கொதிக்க விடவும். வெல்லப்பாகு பழங்களின் உள்ளே சென்று நன்கு இனிப்பு சுவையை கூட்டும்.
இப்பொழுது ஒரு வாணலியில் சிறிது எண்ணை விட்டு பத்து காய்ந்த மிளகாய்களைப் போட்டு வறுத்து மிக்ஸியில் போட்டு ஒரு ஸ்பூன் உப்பும் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொதித்துக் கொண்டிருக்கும் இலந்தைப் பழத்தில் சேர்க்கவும். இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கி நன்கு ஆறவிட்டு பாட்டில்களில் போட்டு வைக்கவும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் இனிப்பு, புளிப்பு, காரம் நிறைந்த இலந்தைப் பழ ஊறுகாய் ரெடி.