கும்பகோணம் காசி அல்வா
என்னென்ன தேவை?
வெள்ளைப் பூசணி - 1 கிலோ, சர்க்கரை - 350 கிராம். எண்ணெய், நெய் - தலா 150 கிராம், பால் - 1 ஆழாக்கு. ஆரஞ்சு கலர் - 1 சிட்டிகை, ஒடித்து நெய்யில் வறுத்த முந்திரி - தேவைக்கு.
எப்படி செய்யணும்?
தோல் சீவி, கொட்டையை ரிமூவ் பண்ணிட்டு, பூசணியைத் துருவிக்கோங்க. நல்லா பிழிஞ்சு எடுத்திட்டு, கடாயில போட்டு நல்லா ஈரமில்லாம வதக்குங்க. இப்போ அதுல பால சேருங்க. கிண்டிக்கிட்டே வாங்க. சர்க்கரை, கலர் பொடிய போடுங்க. கிண்டிக்கிட்டே இருங்க. அப்பப்போ எண்ணெயும், நெய்யுமா சேர்த்துக்கிட்டே இருங்க. கிண்டுங்க. அல்வா பாத்திரத்துல ஒட்டாம வரும்போது எடுத்துடுங்க. தேவைப்பட்டா முந்திரி சேர்த்துக்கோங்க.
விழுப்புரம் பம்பாய் லக்கடி
என்னென்ன தேவை?
மைதா - 1 ஆழாக்கு. சர்க்கரை – ¾ ஆழாக்கு, வெண்ணெய் - 50 கிராம், ஆப்பசோடா - 1 சிட்டிகை, எண்ணெய் - பொரிக்க.
எப்படி செய்யணும்?
மைதா மாவு, சோடா, வெண்ணெய் மூணுத்தையும் போட்டு நல்லா பூரி மாவு போலப் பிசைங்க, அந்த மாவ நல்லா கனமா பரத்துங்க. அப்புறம் அதை கியூப் மாதிரி கட் பண்ணுங்க. அதாவது தாயக்கட்ட இருக்குல்ல? அது மாதிரி கட் பண்ணிக்குங்க. எண்ணெயில போட்டுப் பொரிச்சுடுங்க. சர்க்கரைய கெட்டி ஒத்த கம்பிப் பதமா காய்ச்சுங்க. பொரிச்ச தாயக்கட்டைங்கள் பாகுல போட்டுப் புரட்டி வைங்க.
செங்கல்பட்டு கீரை வடை
என்னென்ன தேவை?
உளுத்தம் பருப்பு - 1 ஆழாக்கு, சுத்தம் செய்து நறுக்கிய கீரை, நறுக்கிய வெங்காயம் - தலா 1 கைப்பிடி, நறுக்கிய பச்சைமிளகாய் - 2, உப்பு தேவைக்கு. பொரிக்க எண்ணெய்.
எப்படி செய்யணும்?
உளுத்தம் பருப்பை ஊற வச்சுக்குங்க. மிளகாய், உப்பு சேர்த்து அரைச்சுக்குங்க. நைசா அரைக்கக் கூடாது. கொரகொரன்னு இருக்கணும். அதுல கீரை, வெங்காயம் ரெண்டுத்தையும் சேத்துக்குங்க. வடையா தட்டி எண்ணெயில் போட்டு கரகரன்னு பொரிச்சு எடுங்க.