ஜவ்வரிசி பாயாசம்
தேவை:
ஜவ்வரிசி _3/4 கப்
பால் _1 லிட்டர்
வெல்லம் _200 கிராம்
ஏலத்தூள் _ ஸ்பூன்
உலர் திராட்சை _10
முந்திரி _10
நெய் _2 ஸ்பூன்
செய்முறை:
முதலில் ஜவ்வரிசியை நன்கு கழுவி அதன் பின்னர் 1 மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் கடாயில் பால் ஊற்றி மிதமான சூட்டில் நன்கு கொதிக்க விடவும். பால் கொதித்ததும் ஊற வைத்த ஜவ்வரிசியை மட்டும் சேர்க்கவும். கால் மணி நேரம் ஜவ்வரிசி வெந்ததும் ஏலத்தூள் போட்டு கலந்து விட்டு இறக்கி வைக்கவும்.
மற்றொரு பாத்திரத்தில் வெல்லத்தை போட்டு 1/2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க விட்டு வெல்லத்தை கரைத்து வடிகட்டி ஜவ்வரிசி பாலுடன் ஊற்றவும்.
ஒரு பேனில் நெய் ஊற்றி சூடுபடுத்தி அதில் முந்திரி, உலர் திராட்சை போட்டு வறுத்து ஜவ்வரிசி பாலுடன் சேர்த்தால் மணமான, சுவையான ஜவ்வரிசி பாயாசம் ரெடி.
அவல் லட்டு:
தேவை
அவல் _1 கப்
நெய் _2 ஸ்பூன்
துருவிய தேங்காய் _1/4 கப்
வெல்லம் _1/2 கப்
முந்திரி _10
ஏலக்காய் _5
செய்முறை:
ஒரு கடாயில் அவலை போட்டு இரண்டு நிமிடம் மிதமான சூட்டில் வறுக்கவும். சிறிது ஆறியதும் மிக்ஸியில் பொடித்து கொள்ளவும்.
அதே கடாயில் நெய் விட்டு தேங்காய் துருவலை போட்டு வறுக்கவும். வெல்லத்தை மிக்ஸியில் அரைத்து அனைத்தையும் ஒன்று சேர்க்கவும்.
பேனில் நெய் ஊற்றி முந்திரி, உலர் திராட்சை வறுத்து லட்டு மாவுடன் சேர்க்கவும். ஏலக்காயை இடித்து இத்துடன் சேர்த்து நன்றாக கலந்து உருண்டை பிடித்தால் சுலபமாக அவல் லட்டு ரெடி.
இனிப்பு போண்டா:
தேவை
வாழைப்பழம் _2
கொட்டை நீக்கிய பேரிச்சம் பழம் _5
வெல்லம் பொடி_6 ஸ்பூன்
துருவிய தேங்காய் _4 ஸ்பூன்
நெய் _1 ஸ்பூன்
ஏலக்காய் தூள் _1 ஸ்பூன்
பேக்கிங் பவுடர் _1 சிட்டிகை
கோதுமை மாவு _1 கப்
தேங்காய் எண்ணெய் _1/2 லிட்டர்
செய்முறை:
ஒரு பாத்திரத்தில் பழுத்த வாழைப்பழத்தை சிறு சிறு துண்டுகளாக வெட்டவும். இதில் வெல்லப்பவுடரை சேர்த்து, தேங்காய் துருவல், நறுக்கிய பேரிச்சம் பழம், ஏலக்காய் தூள் சேர்க்கவும்.
பின்னர் கோதுமை மாவை இத்துடன் சேர்த்து நன்றாக பிசையவும். தண்ணீர் சேர்க்க வேண்டாம். இறுதியாக நெய் மற்றும் ஒரு சிட்டிகை பேக்கிங் பவுடர் கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடான பிறகு இரண்டு கோலி குண்டு அளவிற்கு மாவை உருட்டி பொரித்து எடுக்கவும்.