Sweet Potato Chapathi recipe 
உணவு / சமையல்

எளிதாக செய்யலாமே சர்க்கரைவள்ளிக்கிழங்கு சப்பாத்தி! 

கிரி கணபதி

தினசரி ஒரே மாதிரி சப்பாத்தி செய்து சாப்பிட்டு போர் அடித்து விட்டதா? சற்று வித்தியாசமாக சர்க்கரைவள்ளிக்கிழங்கு பயன்படுத்தி வேற லெவல் சுவையில் சப்பாத்தி செய்யலாம். சர்க்கரைவள்ளிக் கிழங்கில் நார்ச்சத்து, பொட்டாசியம், வைட்டமின் ஏ போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. இது நமது செரிமானத்தை சீராக வைத்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும். மேலும், சர்க்கரைவள்ளிக் கிழங்கு இனிப்பு சுவையுடன் இருப்பதால், சப்பாத்திக்கு ஒரு இனிமையான சுவை கிடைக்கும். 

தேவையான பொருட்கள்: 

  • சர்க்கரைவள்ளிக் கிழங்கு - 2 

  • கோதுமை மாவு - 1 கப்

  • உப்பு - தேவையான அளவு

  • எண்ணெய் - தேவையான அளவு 

செய்முறை: 

முதலில் சர்க்கரைவள்ளிக் கிழங்கை நன்கு சுத்தம் செய்து குக்கரில் போட்டு 4 விசில் வரை விட்டு நன்கு வேக வைக்கவும். 

வேகவைத்த சர்க்கரை வள்ளியின் தோலை நீக்கி, நன்கு மசித்து கொள்ளுங்கள்.‌ பின்னர், மசித்த சர்க்கரை வள்ளியுடன் கோதுமை மாவு, உப்பு சேர்த்து நன்கு பிசைந்து மிருதுவான பூரி மாவு பதத்திற்கு தயார் செய்யவும். 

பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியாக தேய்த்துக் கொள்ளுங்கள். 

இப்போது ஒரு தவாவை அடுப்பில் வைத்து சூடானதும் சப்பாத்தியை போட்டு இருபுறமும் எண்ணெய் தடவி வேகவைத்து எடுத்தால், சுவையான ஆரோக்கியம் நிறைந்த சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தி தயார். 

சர்க்கரைவள்ளிக் கிழங்கின் அளவைப் பொறுத்து கோதுமை மாவின் அளவை சரி செய்து கொள்ளுங்கள். சப்பாத்தியை மிகவும் தடிமனாகவோ அல்லது மிகவும் மெல்லியதாகவோ தேய்க்க வேண்டாம். சப்பாத்தியை வேகவைக்கும்போது தீயை மிதமாக வைக்க வேண்டும். இந்த சப்பாத்தியுடன் வெங்காயம், சட்னி அல்லது தயிர் சேர்த்து சாப்பிடுவது சூப்பராக இருக்கும். 

சர்க்கரைவள்ளிக்கிழங்கு சப்பாத்தி என்பது சுவையானது மட்டுமல்ல ஆரோக்கியமானதும் கூட. இதை வாரத்திற்கு ஒருமுறையாவது உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம், நம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, குழந்தைகள் முதியவர்களுக்கு இது மிகவும் ஏற்ற உணவு. எனவே, இன்றே உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியத்திற்காக, சர்க்கரைவள்ளிக் கிழங்கு சப்பாத்தியை முயற்சித்துப் பாருங்கள். 

சென்னையில் அதிகரித்து வரும் காற்று மாசு!

மைக்ரோ கீரைகள் பற்றி தெரியுமா உங்களுக்கு? சாகுபடி முறை இதோ!

Buddha Quotes: புத்தரின் 15 வாழ்வியல் கருத்துக்கள்!

இரவில் தாமதமாக சாப்பிடுபவரா நீங்க? அச்சச்சோ, அது ரொம்ப தப்பாச்சே!

காலம் காலமாக நின்று பேசும் மாமல்லபுரமும் மறக்கப்பட்ட மாமல்லனும்!

SCROLL FOR NEXT