பொதுவாக, பதினொரு வயது முதல் இருபத்தைந்து வயதுக்குள் இருக்கும் பெண்களுக்கு முகப்பருக்கள் தோன்றி, மறைவது இயற்கை. முப்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கும் சில சமயம் முகப்பருக்கள் வரலாம். இதற்குக் காரணம் அவர்களது உடலில் ஏற்படும் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள்தான். முறையற்ற மாதவிடாய், பிசிஓடி பிரச்னை உள்ளவர்கள், ஹார்மோனல் சிகிச்சை பெறும் பெண்களுக்கு முப்பது வயதைத் தாண்டியும் முகப்பருக்களின் வந்து தொல்லை கொடுக்கும்.
இது தவிர, இன்னும் சில பெண்களுக்கு உணவுப் பழக்க வழக்கத்தின் காரணமாகக் கூட முகப்பருக்கள் தோன்றலாம். அவர்கள் உண்ணும் உணவுப் பழக்க வழக்கத்தை கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புரியும். சில பேர் தினமும் அல்லது அடிக்கடி பிஸ்கட்டுகள், கேக்குகள், பிரெட் வகைகள், சமோசாக்கள், பப்ஸ், பாஸ்தா போன்ற உணவு வகைகளை அதிகம் உண்பார்கள். அது போன்றவர்களுக்கு கட்டாயமாக முப்பது வயதுக்கு மேலும் முகப்பருக்களின் தொந்தரவு இருக்கும்.
மேலும், இனிப்பு வகைகள், பால் பொருட்கள், மைதா சேர்த்த உணவுகள், சாக்லேட்டுகள், சோடா, குளிர்பானங்கள், வெள்ளை சர்க்கரை சேர்த்த உணவுகளை அடிக்கடி உண்போருக்கும் முகப்பருக்கள் தோன்றும். இவை தவிர, மன அழுத்தம், குறைவான தூக்கம், சரியான நேரத்தில் உணவு உட்கொள்ளாமல் இருத்தல் போன்ற காரணங்களாலும் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் முகப்பருக்கள் வருவதற்கான காரணிகளாக உள்ளன.