வீடு / குடும்பம்

ராமாயணமும் மகாபாரதமும் உண்மையில் நிகழ்ந்தைவையா அல்லது வெறும் கற்பனைக் கதைகளா?

ஹ்ரிஷிகேஷ்

ரு தலைப்பையோ அல்லது கேள்வியையோ எடுத்துக்கொண்டு, அதன் சாத்தியமான விடைகளை வைத்து அலசி ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வருவது – பட்டிமன்றம் அல்லது  விவாதம் போன்ற நிகழ்ச்சிகளின் நோக்கமாகும்.  பட்டிமன்றத்தை தொடங்க தேவை யானவை, கேள்வி மற்றும் அதற்குண்டான சாத்தியமான பதில்கள். இதில் கேள்வியை உருவாக்குதல் மிகவும் சுலபமானதாகும். அதன் பின்னர், அந்த கேள்விக்கு ஏற்றவாறு உள்ள அனைத்து சாத்தியக்கூறுகளையும் திரட்டுதல். அதில் ஒத்துவராமல் இருக்கும் சாத்தியக் கூறுகளை அகற்றும் போது, கடைசியில் எஞ்சியிருக்கும் அந்தவொரு சாத்தியக்கூறு மட்டும்தான் உண்மையான விடையாக இருக்க முடியும்; அது நடைமுறைக்கு எவ்வளவு புறம்பானதாக இருந்தாலும் சரி.

ஒரு பொருளின் அல்லது வாதத்தின் இருப்பை சோதிக்க பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்த பரிசோதனையில், போதுமான சாத்தியங்கள் இருப்பின், நம் வாதத்திற்கு நேர்மறையான, நாம் எதிர்பார்த்த பதில் கிடைத்து விடும். ஒவ்வொரு அறிவியல் பரிசோதனையும் ஆராய்ச்சியும் இவ்வாறுதான் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நாம் ஒரு விஷயத்தை நம்பலாமா வேண்டாமா என்பது அதன் முடிவைப் பொறுத்தது. 

இந்தக் கட்டுரையில் இவ்வாறெல்லாம் மிகவும் முறையாக இல்லாமல், நம் சிந்தனைகளை வைத்தே ஒரு விவாதத்தை உருவாக்குவோம். இதற்கு முன், பலர் இதை பற்றி விவாதித்திருப்பர்; தீர்ப்பும் வழங்கியிருப்பர். இம்முறை சற்று வித்தியாசமாக நாம் முயற்சிக்கலாம். தலைப்பு – இந்தியப் புராணங்களான ராமாயணமும் மகாபாரதமும் உண்மையில் நிகழ்ந்தைவையா அல்லது வெறும் கற்பனைக் கதைகளா? இதற்கு இரண்டு சாத்தியக் கூறுகளில் ஒன்று தான் விடையாக இருக்க முடியும்; அவ்விரண்டு  புராணங்களும் உண்மையாக நிகழ்ந்திருக்கக் கூடும் அல்லது நிகழ்ந்திராது. 

சாத்தியக்கூறு ஒன்று: ராமாயணமும் மகாபாரதமும் உண்மையாக நிகழ்ந்தவை என்று வைத்துக் கொள்வோம். சற்று யோசித்துப் பாருங்கள். அவ்விரண்டு இதிகாசங்களும் நம் நாட்டில் முன்பொரு காலத்தில் நிகழ்ந்திருக்கிறது என்று நினைக்கும் போதே மெய் சிலிர்க்கவில்லையா? சம்பந்தப்பட்ட புத்தகங்களும் சீரியல்களும் அற்புதமான இந்தியர்களும் உங்களை சுற்றியிருப்பர். இரண்டின் முழுக்கதையும் கேட்டு தெரிந்துகொண்ட பின்னர் பொறுமையாக வியந்து சிலிர்க்கலாம். அவசரமில்லை. எல்லாக் காலக் கட்டத்திலும், எப்படிப்பட்ட சூழலிலும் மனிதர்கள் எப்படி வாழ வேண்டும் என்று எடுத்துக் காட்ட கடவுளே மனிதனாக அவதரித்தார்  என்று உணரும் போது வியக்காமல் இருக்க முடியவில்லை. கடவுளுக்கு அத்தனை அக்கறையும் அன்பும் நம் மேல் உள்ளதோ என்னவோ! மேலும், குடும்பம், நண்பர்கள், உறவினர் மற்றும் எதிரிகள் என எல்லா வித மனிதர்களையும் உள்ளடக்கியவை அவையிரண்டும். ‘நம் நாட்டு இதிகாசங்களில் எந்த வித மனிதர்கள் சித்தரிக்கப் படவில்லை என்று ஒரு  பட்டியல் எடுத்தால், அது நிரந்தரமாக காலியாக இருப்பது என்னவோ உண்மைதான். அதனால், ‘ஆல்-இன்-ஒன்’ என்ற அடைமொழியை ராமாயணமும் மகாபாரதமும் சொந்தம் கொண்டாட முடியும் என்று தோன்றுகிறது.

சாத்தியக்கூறு இரண்டு: ராமாயணமும் மகாபாரதமும் உண்மையாக நிகழ்ந்தவை அல்ல என்று வைத்துக் கொள்வோம். அப்படியிருக்கையில், இத்தனை பெரிய கதைகளை யார் எழுதியிருக்கக் கூடும்? எதற்காக எழுத வேண்டும்? ஒரு தனி மனிதரால் நிச்சயமாக இத்தனை தெளிவாக விசாலமாக யோசித்து எழுத முடியும் என்று ஏற்றுக்கொள்ள தயக்கமாக இருக்கிறது. அறிவியல், குடும்பம், அரசியல், உளவியல், சட்டம், மருத்துவம், கல்வி முதலியத் துறைகளையும் உள்ளடக்கியவை ராமாயணம் மற்றும் மகாபாரதம். இத்தனைத் துறைகளிலும் ஒரு தனி மனிதரால் எவ்வாறு தேர்ச்சி பெற்றிருக்க முடியும்? அவ்வாறே தேர்ச்சி பெற்றிருந்தாலும், ஒரு புராணத்தை எழுதவே நிறைய காலம் தேவைப்படுமே? இதிகாசங்களில் நடந்த ஒவ்வொரு சிறிய நிகழ்விற்கும் ஒரு பின்கதை உண்டு. அவையனைத்தும் பிணைத்து ஒன்றிணைத்து எழுதுவதென்பது மனிதரால் சாத்தியமில்லை. அத்தனை நிகழ்வையும் ஒருத்தராக யோசித்து கற்பனையாக எழுத வேண்டுமெனில், நினைக்கவே பிரமாண்டமாக இருக்கிறது. அப்படியென்றால், மனித இயற்கைக்கு அப்பாற்பட்ட ஏதோ ஒன்று தான் இயற்றியிருக்க முடியுமா இதையெல்லாம்? இதை நம் பகுத்தறிவு ஏற்றுக் கொள்ளாது. அந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட ஒன்றை நம் விவாதத்திலிருந்து அப்புறப்படுத்தி விடுவோம். அதனால், இதெல்லாம் ஒரே மனிதரின் கற்பனையில் உருவானவை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால், ஒரு தனி நபரின் கற்பனை கதையை ஏன் நாடு முழுவதும் பரப்பி, ஒவ்வொரு கோவில் சிற்பங்களிலும் சித்திரங்களிலும் வடிக்க வேண்டும்? காலங்காலமாக ஏன் அடுத்த தலைமுறைக்கு சொல்லி வளர்க்க வேண்டும்? என்னயிருந்தாலும் வெறும் கற்பனைக் கதை தானே என்று விட்டுவிட நமக்கு ஏன் இன்றுவரை மனம் வரவில்லை?

சரியாக எங்கே, எப்பொழுது, யாரால் தோற்றுவிக் கப்பட்டவை இவை இரண்டும் என இன்றும் புரியாமல் இருக்கலாம். ஆனால், மனிதர்களுக்கு தேவையான பாடங்களையும், புத்திமதிகளையும், வழிக் காட்டுதலையும் விட்டு சென்றிருக்கின்றன. ஒருவேளை கடவுளோ அல்லது இவற்றை இயற்றிய புலவர்களோ, அவர்களின் நோக்கமும் இதுவாகத்தான் இருக்க வேண்டும். மேற்சொன்ன விவாதங்களின் அடிப்படையில் விளங்குவது ஒன்றே ஒன்று தான். இந்தியர்களின் பாரம்பரிய சொத்துகளில் ஒன்றான ராமாயணமும் மகாபாரதமும் விவாதத்திற்கு அப்பாற்பட்டவை. இந்த முடிவை கேட்டு, எங்கேயோ இருக்கும் ஏதோவொரு ராமாயண புத்தகமோ, மகாபராத புத்தகமோ என்னைப் பார்த்து மெலிதாக சிரிப்பது போன்றுத் தோன்றுகிறது.

மூங்கிலில் ஒளிந்திருக்கும் அற்புதங்கள்..!

ஊரின் சமவெளிகளில் நடத்தப்படும் கர்நாடக மாநில நாட்டுப்புறக் கலை 'பயலாட்டம்'

ஜப்பான் நாட்டுக் கதை - மனம் திருந்திய மன்னர்

இந்த மாதம் மீன்கள் உண்பதை தவிர்க்கவும்... எந்த மாதம்? ஏன்?

'என்னால் முடியும்' தம்பி! உன்னால்?

SCROLL FOR NEXT